ஜோசியர் போட்ட போடு! ’ஜெர்க்’கான’ ஜென்ம நட்சத்திரம்’ டீம்!
‘அமோகம் ஸ்டுடியோஸ்’ & ’ஒயிட் லேம்ப்’ பேனரில் மணிவர்மன் இயக்கத்தில் தயாராகி, வரும் 18—ஆம் தேதி ரிலீசாகும் படம் ’ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் வெளியிடுகிறார். படத்தில் தமன், ரக்ஷா, மால்வி மல்ஹோத்ரா, அருண் கார்த்தி, மைத்ரேயன், தலைவசால் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு : கே.ஜி., இசை : சஞ்சய் மாணிக்கம், எடிட்டிங் : குரு சூர்யா, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.
’ஒரு நொடி’ என்ற இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை தந்த அதே டீம் தான் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திலும் உள்ளது. ஹாலிவுட் படமான ‘’ஓமன்’னின் தமிழ் பதிப்பு தான் இப்படம்
18—ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் 08—ஆம் தேதி காலை நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் அறிவழகன், மீரா கதிரவன், லோகேஷ் அஜ்லிஸ், கேபிள் சங்கர், டி.வி.பிரபலம் ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“ஒரு நொடி’ யின் பிரிவியூ ஷோ பார்த்ததுமே எங்களின் முதல் தயாரிப்பு இதே டீமை வைத்துத் தான் என்பதை முடிவு செய்துவிட்டோம். அந்த டீம் மீது அந்தளவு நம்பிக்கை வைத்தோம். நாங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. படம் செம த்ரில்லிங்காக வந்துள்ளது” என்றார் அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன்.
படக்குழுவினர் அனைவருமே இயக்குனர் மணிவர்மனின் திறமை குறித்தும் பேய்ப்படம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பேசினார்கள்.
ஜோசியர் போட்ட போடு!
கரூர் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவராகவும் ஜோசியக்காரராகவும் இருக்கும் பரணி பால்ராஜ் என்பவர் பேசும் போது, “இப்படத்தின் ஹீரோ தமனின் ஜாதகத்துடன் அவரது அம்மா பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்க்க வந்தார். 2025—ல் தான் அவர் பெரிய ஹீரோவாக வருவார்னு சொன்னேன். அதான் இப்ப நடந்துருக்கு[!?]. அதனால என்னோட மகளை இவருக்கே கட்டிக் கொடுத்துட்டேன். ஈரோடு மகேஷும் நான் சொல்றபடி கேட்கும் பிள்ளை. இதுமட்டுமல்ல, கோலிவுட்டின் பிரபலங்கள் முக்கால்வாசிப் பேர் நான் சொல்வதைக் கேட்டுத் தான் நடப்பார்கள்.
அவ்வளவு ஏன் ரெட் ஜெயண்ட் மூவிஸின் ராஜா, அர்ஜுன் துரை ஆகியோர் அடிக்கடி என்னிடம் ஆலோசனையும் ஜாதக பலன்களும் கேட்ட பின் தான் சினிமாவில் ஒரு செயலில் இறங்குவார்கள். இந்தப் படத்தை வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் [ அட மூணு தடவை அவருதாங்க சொன்னாரு. நம்மோட பேராகிராஃப் பிழையில்லை ] எனது சொல்பேச்சு கேட்டும் நடக்கும் பிள்ளை. இரண்டு மாசத்துக்கு முன்ன இந்தப் படத்தப் பார்த்துட்டு ராகுலிடம் சொன்னதால தான் இப்ப ரிலீஸ் பண்றாரு. தமிழ் சேனல்களில் நான் பேசாத சேனலே இல்லை. நான் பார்க்காத ஆளே இல்லை” என வரிசையாக போட்டுத் தாக்கி, ஒட்டு மொத்த ‘ஜென்ம நட்சத்திரம்’ டீமையே ஜெர்க்காக்கிவிட்டார் ஜோசியக்காரர் பரணி பால்ராஜ்.
அதன் பிறகு பேசிய எல்லோருமே நட்சத்திரம், ராசி, ஜென்மச் சனி என மூடநம்பிக்கைகளை கண்டமேனிக்கு அவிழ்த்துவிட்டனர்.
”பரணி பால்ராஜ் சகட்டுமேனிக்கு பொளந்துகட்டிட்டாரு. இனி என்னாகப் போகுதோ” என ஈரோடு மகேஷே ஓப்பனாக ஜெர்க்கானது அவரது முகத்தில் தெரிந்தது.
— மதுரை மாறன்