நகைக் கடன் | கனரா வங்கி | பெரம்பலூர் | வங்கி அதிகாரி | வங்கி மோசடி
பெரம்பலூர் மாவட்டத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில், கடன் வழங்கியதை போல கணக்கு காண்பித்து, ஒரு கோடியே இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம், லெப்பை குடிக்காடு பகுதியில் கனரா வங்கிக் கிளையில் நகைக்கடன் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், ஆகாஷ் சௌகான். கடந்த 2022 ஆம் ஆண்டு முதலாக இந்த வங்கிக்கிளையில் பணியாற்றிவரும் ஆகாஷ் சௌகான் இராஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்.

எழுதப்படிக்கத் தெரியாத அப்பாவி வாடிக்கையாளர்கள் ஆறு பேரை தேர்வு செய்து; அவர்கள் பெயரில் போலியான முறையில் நகைக்கடன் பெற்றதாக ஆவணங்களை உருவாக்கி கடன் பெற்று; அந்தத்தொகையை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும்; வங்கியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளில் கடன் வழங்கியதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் ஏமாற்றியதாகவும்; தற்செயலாக ஒரு நாள் வங்கி மேலாளரின் கவனத்திற்கு வந்ததையடுத்தே, போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார் கனரா வங்கி மண்டல அலுவலக உதவி பொதுமேலாளர் லோக கிருஷ்ணகுமார்.
ஆறு நபர்களின் பெயரில் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. புகாரில் இந்த ஆண்டின் ஜனவரி முதலாக ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டுமே இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட கடன்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதில் ஒரே ஒரு கடன் மட்டுமே நான்கு இலட்சத்தில் இருக்கிறது. மற்றவையெல்லாம், 8 முதல் 11 இலட்சங்கள் வரையிலான கடன்கள்.

வாடிக்கையாளர் ஒருவர் நேரில் வங்கிக்கு வந்து செல்லாமல்; நேரடியான அவரது கையெழுத்து இல்லாமல் இந்த நகைக்கடன்கள் வழங்கியிருப்பதில் (அதுவும் 11 இலட்சம் வரையில்) அந்த ஒரு அதிகாரியைத் தவிர மற்றவர்களுக்கு தொடர்பு இல்லாமல் போனது எப்படி? காசாளரின் அனுமதி இல்லாமல், சம்பந்தபட்ட வாடிக்கையாளரின் கணக்கிற்கு கடன்தொகை வரவு வைக்கப்பட சாத்தியமா? அடுத்து, அதே தொகை ஆகாஷ் சௌகான் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் காசாளரின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி? மேலாளரின் கண்காணிப்பில் எப்படி கோட்டை விட்டார்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது, இந்த விவகாரம். போலீசாரின் விசாரணையில்தான் இதற்கான விடை கிடைக்கும். மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையான நேர்காணலை காண :
நகைக் கடன் | கனரா வங்கி | பெரம்பலூர் | வங்கி அதிகாரி | வங்கி மோசடி
— அங்குசம் புலனாய்வுக்குழு.