காரைக்கால் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் “கி.ராஜநாராயணன்” 101ஆவது பிறந்தநாள் விழா –
காரைக்கால் தேசிய தொழில் நுட்பக் கழகம் – பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய
கரிசல் எழுத்தாளர் “கி.ராஜநாராயணன்” 101ஆவது பிறந்தநாள் விழா
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு பங்கேற்பு
காரைக்கால் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் கடந்த 16.09.2023ஆம் நாள் கரிசல் எழுத்தாளர் கி.ரா. என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் 101ஆவது பிறந்தநாள் விழா, பாரதிதாசன் தமிழ் மன்றத்தோடு இணைந்து தொழில் நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள கி.ரா. அரங்கில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர் (பொ) முனைவர் உஷா நடேசன் மற்றும் பதிவாளர் முனைவர் சீ.சுந்தரவரதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இவ் விழாவில் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் கி. சங்கரநாராயணயணசாமி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் மாணவர் நலன் புலத் தலைவர் முனைவர் நரேந்திரன் ராஜகோபால் தலைமையில் ஸ்வீடனிலிருந்து இணைய வழியாக கோபல்ல கிராமம் நாவலைப் பொறியாளர் பி.இளமாறன் சிறப்பாக அறிமுகம் செய்தார். தமிழ் மன்றப் பொறுப்பாளர்கள் வரவேற்புரையாற்றியும், இணைப்புரை வழங்கியும், நன்றியுரையும் ஆற்றினர். மாணவியர்களின் நாட்டியமும் நடந்தது. கலை, இலக்கியப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
“பன்முக ஆளுமை கி.ரா.”வை முன்வைத்து முனைவர் இரா.காமராசு சிறப்புரை ஆற்றினார். உரையில்,“அழகான, பிரமிப்பு தரும் கலையரங்கு…புதிதாகக் கட்டப்பட்டது…அதற்கு “கி.ரா.”வின் பெயர் சூட்டி இருந்தமைக்குத் தமிழ் மக்கள் சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்தார்”. மேலும், கி.ரா.வின் கதைகளை முன்வைத்து அவரின் எழுத்தாளுமையைச் சுட்டிக்காட்டி இரா.காமராசு சிறப்புரையாற்றினார்.
விழா நிகழ்வை தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் அ.கற்பகராஜ், முனைவர் இரா.நவீன்ராஜ் ஒருங்கிணைத்தார்கள். தமிழ் மன்ற மாணவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.