அங்குசம் பார்வையில் ‘காதலிக்க நேரமில்லை’ 68 / 100
அங்குசம் பார்வையில் ‘காதலிக்க நேரமில்லை’ 68 / 100
தயாரிப்பு : ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ . டைரக்ஷன் : கிருத்திகா உதயநிதி. இணைத் தயாரிப்பு : எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை. இசை : ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர்-நடிகைகள்: ரவி மோகன் [ ஜெயம் ரவி, தைப் பொங்கலில் இருந்து தனது பெயரை ரவி மோகன் என அழைக்குமாறும் எழுதும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். டைட்டில் கார்டிலும் இப்படித்தான் போடுகிறார்கள் ] , நித்யா மேனென், டி.ஜே.பானு, வினய், ஜான் கொக்கென், லால், யோகிபாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி வைத்தியநாதன், ரோஹன் சிங். ஒளிப்பதிவு : கேவ்மெரிக் ஆரி, எடிட்டிங் : லாரன்ஸ் கிஷோர், காஸ்ட்யூம் டிசைனர் : கவிதா ஜே. & திவ்யா லக்ஷணா. நடனம் : ஷோபி பால்ராஜ், சாண்டி, லீலாவதி, ஆர்ட் டைரக்டர் : சண்முகராஜா. புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ் : ஈ. ஆறுமுகம், டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜர் : சி.ராஜா. பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ]
சினிமா, நாடகம், தெருக்கூத்து போன்ற கலைகள் மக்களுக்கானது, மக்களில் இருந்து உருவாக்கப்படுவது. இதில் மசாலா கலந்த வணிக சினிமாவும் வருகிறது, ஆர்ட் ஃபிலிமுக்கும் கமர்ஷியல் சினிமாவுக்குமிடையிலான ‘பேரலல்’ சினிமாவும் வருகிறது. இந்த இரண்டு வகை சினிமாக்களும் அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்து, வெகுஜனங்களால் வரவேற்கப்படுகிறது, வியாபார ரீதியாக வெற்றியும் பெறுகிறது. ஒரு சில நேரங்களில் அவை நிராகரிக்கப்பட்டும் இருக்கின்றன. இவையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றன, ரசிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த மனித சமூகத்தில் எப்போதாவது மட்டுமல்ல, அவ்வப்போது கலாச்சாரம், பண்பாடு, உறவுமுறைகளில் இருக்கும் இடியாப்பச் சிக்கல் இவையெல்லாம் உடைக்கப்படும் சில சம்பவங்கள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும். அப்படிப்பட்ட ‘மைனாரிட்டி இன்ஸிடெண்ட்ஸ்’ தான் மெஜாரிட்டியான மக்களால் விவாதிக்கப்படுகிறது, கண்டனத்திற்குள்ளாகிறது. இன்னும் சொல்லப் போனால், பாஸிட்டிவாகவோ, நெகட்டிவாகவோ.. அதுவே பேசு பொருளாகிறது. அப்படிப்பட ‘மைனாரிட்ட்டி இன்ஸிடெண்ட்சை’ சினிமாவாக்கி, அதை மெஜாரிட்டி மக்களைப் பேச வைப்பது தான் இயக்குனர்களின் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது.
அந்த வகையில் கிட்டத்தட்ட இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் சினிமா தான் ‘காதலிக்க நேரமில்லை’. இதில் பல்வேறு முரண்பட்ட விஷயங்களை துணிச்சலுடன் பேசி, வெகுஜனங்களையும் பேச வைக்கும் ’நியூ ட்ரெண்ட்செட்’ மனநிலையை சினிமா ரசிகர்களின் மத்தியில் உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஆர்க்கிடெக்டாக இருக்கிறார் ரவி மோகன். இவரது நண்பர்கள் வினய்யும் யோகிபாபுவும். இதில் வினய் ஓரினச் சேர்க்கையில் விருப்பமும் அதே ‘கே’ யை திருமணம் செய்து கொள்ளும் மனநிலையிலும் இருப்பவர். ஆனால் மூவருமே ‘ஸ்பெர்ம்’ [ விந்து] டொனேட் பண்ணுகிறார்கள். அதே போல் இன்னொரு கட்டுமான நிறுவனத்தில் ஆர்க்கிடெக்டாக இருக்கும் நித்யா மேனென், ஜான்கொக்கெனைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.
ஒருநாள் வேறொரு பெண்ணுடன் பெட்ரூமில் ஜான்கொக்கென் படு நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் நெருப்பாகிவிடுகிறார் நித்யா. “அடச்சீ… போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” என்ற மனநிலைக்கு வந்து, ஆம்பள துணையில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்து “ஸ்பெம்’ டொனேட்டர் மூலம் ஆண் குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இதனால் மகளை வெறுத்து ஒதுக்கிறார்கள், பெற்றோர்களான மனோவும் லட்சுமி ராமகிருஷ்ணனும்.
‘ஐ டோண்ட் கேர்’ என்ற பாலிஸியுடனும் எட்டு வயது மகனுடனும் [ ரோஹன் சிங்] தனியாக வாழ்கிறார் நித்யா மேனென். இந்த நிலையில் தான் ரவிமோகனை ஒரு பாரில் சந்திக்கிறார் நித்யா மேனென். அவர்களிடையே நட்பு தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தனது வீட்டிற்குள்ளும் ரவிமோகனை அனுமதிக்கிறார் நித்யா. இவரின் எட்டு வயது மகனும் ரவியிடம் அட்டாச்சாக இருக்கிறான்.
இப்படிப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே வருகிறார் ரவியின் எக்ஸ் என்கேஜ்மெண்ட் டி.ஜே.பானு. அதன் பின் நடக்கும் ஆச்சர்ய சம்பவங்கள் தான் இந்த ‘காதலிக்க நேரமில்லை’.
இந்தப் படத்தைப் பொறுத்த வரை நடிப்பில் முதலிடத்திற்கு வர, நித்யா மேனெனும் ரவிமோகனும் சரிவிகிதத்தில் சரியான விதத்தில் போட்டி போட்டு பரிட்சை எழுதியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த டிஜிட்டல் உலகின் இளம் மங்கையாக நித்யா பல சீன்களில் அனாயசமாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் என்றால், ரவிமோகனும் அதற்கு இணையாக… இன்னும் சொல்லப் போனால் நித்யாவுக்கு ’இணை’யாக, சில சீன்களில் தனியாகவும் பல சீன்களில் நித்யாவுடன் இணைந்தும் சூப்பர் ஸ்கோர் பண்ணிவிட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆரம்பத்தில் வரும் வினய், திடீரென காணாமல் போனாலும் க்ளைமாக்ஸில் அவரைக் கொண்டு வந்து ‘கே மேரேஜ்’ நடத்தி, அதையும் எந்தவித உறுத்தலோ, ஆபாசமோ இல்லாமல் காட்டியிருப்பதில் நிமிர்ந்து நிற்கிறார் கிருத்திகா உதயநிதி. இதை படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே தெளிவுபடுத்திவிட்டார் கிருத்திகா.
நித்யாவின் சித்தியாக வரும் வினோதினி வைத்தியநாதனின் பேச்சு வழக்கிலிருந்து தான் , அவர்கள் ‘அவாள்’கள் என்பதை பார்வையாளனுக்குப் புரிய வைத்ததிலும் கிருத்திகா உதயநிதியின் தனித்துவம் தெரிகிறது. அதே போல் சிறுவன் ரோஹன் சிங்கிற்கும் ரவிமோகனுக்குமிடையே உள்ள உறவின் சாட்சியாக ஃபுட்பால்- ஐ கனெக்ட் பண்ணியதிலும் கிருத்திகாவின் ‘டச்’ டாப்லெவல் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஆங்கில வசனம் ஆதிக்கம் செலுத்துவது தான் உறுத்தலாக இருக்கிறது.
படத்தின் இன்னொரு நாயகன் என்றால் அது ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதில் சந்தேகமேயில்லை. தனது பின்னணி இசையால் பெரும்பலம் சேர்த்திருக்கிறார் ரஹ்மான். அதிலும் குறிப்பாக ரவிமோகனிடம் கருத்துமாறுபாடு ஏற்பட்டு நித்யாமேனென் கிளம்பிச் செல்லும் சீன், ரவிமோகன் –டி.ஜே.பானு இவர்களுக்கிடையிலான கான்வெர்ஷேன் சீன், ஃபுட்பால் கிரவுண்டில் நித்யாவும் ரவியும் பேசிக் கொள்ளும் சீன் இதிலெல்லாம் இசைத்தென்றலாக மனதை ஆக்கிரமிக்கிறார் ‘இசைப்புயல்’ ரஹ்மான்.
கேமராமேன் கேவ்மிக் ஆரியும் காஸ்ட்யூம் டிசைனர்கள் கவிதா, திவ்யா லக்ஷணாவும் எடிட்டர் லாரன்ஸ் கிஷோரும் ஆர்ட் டைரக்டர் சண்முகராஜாவும் கிருத்திகா உதயநிதியின் நவீன சிந்தனைக்கு புதிய உதயம் தந்திருக்கிறார்கள்.
‘காதலிக்க நேரமில்லை’ கருத்தில் சில குறை இருந்தாலும் தரத்தில் எந்தக் குறையுமில்லை. நல்ல சினிமா ரசிகர்களுக்கு மனநிறைவைத் தர தவறவில்லை.
மதுரை மாறன்