கலைஞர் 100… கடுகடுப்பில் உதயநிதி…
கலைஞர் 100… கடுகடுப்பில் உதயநிதி…
தமிழ் சினிமா உலகம் சார்பில் இந்த ஜனவரி 06-ஆம் தேதி ‘கலைஞர் -100’ விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னின்று நடத்தியவர்கள் தயாரிப்பா ளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளியும் ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியும். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பூந்தமல்லியில் 500 கோடி பட்ஜெட்டில் சினிமா நகரம் அமைக்கப்படும் என அறிவித்து, கோலிவுட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆனால் விழாவிற்கு எதிர்பார்த்த மக்கள், ரசிகர்கள் கூட்டம் வராததற்கு முரளியும் ஃபெப்சியின் தலைவர் செல்வமணியும் தான் காரணம் என ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். “முதல்வர் கலந்து கொள்ளும் விழா, ரஜினி, கமல் போன்ற பெரிய தலைகள் கலந்து கொள்ளும் விழா (சென்னையில் இருந்தும் விஜய் ஆப்சென்ட்டானது தனிக்கதை, வேறு கணக்குக் கதை) கலைஞருக்கு பெருமை சேர்க்கும் விழா, இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம, தான் தோன்றிக் தனமாக செயல்பட்டு, இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் முரளியும் செல்வமணியும்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தியிருந்தால் மழை பயம் இல்லாமல் மக்களும் ரசிகர்களும் பெருமளவில் மகிழ்ச்சியுடன் வந்திருப்பார்கள். ஆனால் இருவரும் மழைக் காலம் என தெரிந்தும் ரேஸ் கோர்ஸ் திறந்த வெளி மைதானத்தில் வைக்கிறார்கள். சரி, அவர்கள் இஷ்டப்படி எங்கே வேணும்னாலும் வைக்கட்டும். மக்கள் கூட்டம் வருவதற்கான வாய்ப்புகள், ஏற்பாடுகளைப் பண்ணனுமா இல்லையா?
24 சங்கங்கள் அடங்கிய ஃபெப்சியின் தலைவராக மூன்றாவது முறையாக இருக்கிறார் செல்வமணி. ஒரு சங்கத்தில் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு சங்கத்தில் இருந்து கண்டிப்பாக ஐநூறு, அறுநூறு பேராவது வரணும்னு சொல்லிருந்தாக் கூட பத்தாயிரம் பேர் வந்திருப்பார்கள். அதேபோல் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் ரசிகர் மன்றங்களுக்கு விழா அழைப்பிதழை தாராளமாக அனுப்பியிருந்தால் ஏராளமாக வந்திருப்பார்கள்.
இப்படி எதிலுமே சிரத்தை இல்லாமல், முதல்வரிடம் நல்ல பேர் வாங்கினால் போதும் என நினைத்தார்கள். ஆனால் முரளியும் செல்வமணியும் அசிங்கப்பட்டது தான் மிச்சம்.
இவர்கள் இருவரும் சேர்ந்து சொதப்பியதில் ரொம்பவே கடுகடுப்பில் இருக்கார் உதயநிதி. இனிமேல் சினிமா விழாக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வருவது சந்தேகம் தான்.
-மதுரை மாறன்