கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !
கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !
தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.
கலைமகள் சபா சங்கத்தின் தோற்றம் :
ரியல் எஸ்டேட் பிசினஸ் தமிழகத்தில் பிரபலமாவதற்கு முன்பாக, அதன் தொடக்க காலத்தில் ”முதலாளிகள் இல்லாத முதல் உலகம்” என்ற முழக்கத்தோடு, வீட்டுமனைத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் கலைமகள் சபா. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு, 17.02.1984 இல் 16/84 என்ற பதிவெண் கொண்ட சங்கமாக அது தொடங்கப்பட்டது.
சொசைட்டி விதியின்படி பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பதால், சங்கத்திற்கென்று தனித்துவமான துணை விதிகளையும், முறையான நிர்வாக அமைப்புகளையும் கொண்டதாக இருந்தது. சங்கத்திற்கு என்று தலைவர், உபதலைவர், செயலர் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடி முடிவெடுத்தார்கள். சங்கத்தின் பொதுமேலாளர் தகுதியில் எஸ்.ஜான் என்பவர் நியமிக்கப்பட்டு, அவரை கலைமகள் சபா சங்கத்தின் பவர் ஏஜெண்டாக இருந்து தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு இருக்கிறார். உறுப்பினர்களிடமிருந்து வசூலித்த தொகையிலிருந்து வாங்கப்பட்ட நிலங்கள் அத்தனையும், உறுப்பினர்களின் கூட்டுஉரிமையில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
முதல் 5000 உறுப்பினர்கள் முழுப்பங்கு உறுப்பினர்கள். இவர்களின் பங்கு மதிப்பு 16 இலட்சங்கள். 8 இலட்சங்களை பங்கு மதிப்பாக கொண்டவர்கள் அரைப்பங்கு உறுப்பினர்கள். 2 இலட்சங்களை பங்கு மதிப்பாக கொண்டவர்கள் அரைக்கால் பங்கு உறுப்பினர்கள். அதுவரையில் வாங்கி குவிக்கப்பட்ட நிலங்களை 20 ஆண்டுகளின் முடிவில் அதாவது 25.02.2006 அன்று பங்கிட்டு கொள்வது என்பதாக வரையறுக்கிறது, கலைமகள் சபா சங்கத்தின் துணை விதிகள். இதன்படி, சுமார் 6 இலட்சம் பேர் வரையில் கலைமகள் சபாவில் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள்.
உறுப்பினர்களின் நல்லது – கெட்டதுகளில் பங்கெடுத்த சங்கம் !
வெறுமனே, நிலங்களை வாங்கிப்போட்டு அவற்றை பிளாட்டுகளாக மாற்றுவதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, கலைமகள் சபா உறுப்பினர்களின் நல்லது – கெட்டதுகளிலும் பங்கெடுக்கும் வகையில் இயங்கி வந்திருக்கிறது. உறுப்பினர்களின் இல்ல திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா, கல்வி உதவித்தொகை, எதிர்பாராமல் மரணிக்கும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சங்கத்தின் சார்பில் வழங்கி வந்திருக்கிறார்கள்.
சங்கம் தொடங்கிய 1984 முதல், 1997 – ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் கலைமகள் சபா உறுப்பினர்களின் 12,745 திருமணங்கள்; 14,450 புதுமனை புகு விழாக்களுக்கான நிதி அளித்திருக்கிறார்கள். 1241 குடும்ப கலை விழாக்களை நடத்தியிருக்கிறார்கள். 2292 மரணித்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இவற்றை நிர்வகிப்பதற்கென்றே தனித்தனி வங்கிக் கணக்குகளையும் பராமரித்து வந்திருக்கிறார்கள்.
கலைமகள் சபா வழக்கில் சிக்கியபோது, அதாவது 1998 இல் அதுவரை 13,500 ஏக்கர் நிலங்கள் கலைமகள் சபாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 120 கோடி ரூபாய் வங்கி இருப்பாக இருந்தது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, புதுதில்லி ஆகிய இடங்களில் 40 சொந்தமான கட்டிடங்கள் இருந்தன. நிலங்களும்கூட, ஒன்றுக்கும் ஆகாத இடங்களில் வாங்கிப்போடப்பட்டவை அல்ல. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை என்பதாக ஏதோ ஒரு நெடுஞ்சாலையின் ஓரமாக அமையும் வகையிலான இடங்களைத்தான் தேர்ந்தெடுத்து வாங்கிப் போட்டிருக்கிறார்கள்.
வழக்குக்கு மேல் வழக்கு இடியாப்ப சிக்கலில் சங்கம் !
இந்த பின்னணியில்தான், 1998 இல் அதுவரை கலைமகள் சபாவின் பொது மேலாளராக இருந்து சங்கத்தின் சார்பில் நிலங்களை பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வந்த பொதுமேலாளர் ஜான் மீது மோசடி மற்றும் நிதி கையாடல் குற்றச்சாட்டு எழுகிறது. போலீசு புகாராக மாறுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கலைமகள் சங்கமும் அதன் சொத்துக்களும் முடக்கப்படுகிறது.
இதற்கிடையே, நீதிமன்றம் தலையிட்டு மூவரை கொண்ட ரிசீவர் கமிட்டியை அமைக்கிறது. கலைமகள் சபாவின் சொத்துக்களை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ரிசீவர் கமிட்டி, கலைமகள் சபாவுக்கு சொந்தமான சுமார் 870 ஏக்கர் நிலங்களை விற்றுவிடுகிறார்கள். இது பஞ்சாயத்து ஆகிறது. இதற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுகிறது. மீண்டும் நீதிமன்றம் தலையிட்டு கடந்த 1.11.2021 இல் ரீசீவர் கமிட்டி கலைக்கப்படுகிறது.
கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !
அதற்கு பதிலாக, கலைமகள் சபாவின் சொத்துக்களை பராமரிப்பதற்கென்று பதிவுத்துறை உதவித்தலைவர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியை தனி அலுவலராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. கடந்த கால முறைகேடுகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த தனி அலுவலரும் ஓராண்டுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இதுவரையில் 4 பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தற்போது, பதிவுத்துறையின் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.தான், கலைமகள் சபாவின் தலைவராக இருந்து நிர்வகித்து வருகிறார்.
இதுஒருபுறமிருக்க, கலைமகள்சபாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் மோசடியான முறையில், பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த விவகாரமும் இந்த வழக்கை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த கருப்பண்ணன் தொடர்ந்த வழக்கில், கலைமகள் சபா தொடர்பான சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு தமிழகத்தில் 33 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
கலைமகள் சபா உறுப்பினர்களின் ஆதங்கம் !
இதன் தொடர்ச்சியாகவே, தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தின் சார்பில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், முதலீட்டாளர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறார் தலைவர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
இந்த இடத்திதல், கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.ரெங்கராஜ் சில கேள்விகளை எழுப்புகிறார். “கலைமகள் சபா சங்கத்தின் உறுப்பினர்கள்தான் நிலத்தின் உண்மையான உரிமைதாரர்கள். எங்கள் கருத்தை கேட்காமலேயே எப்படி தன்னிச்சையான முடிவை எடுக்க முடியும்? குறைந்தபட்சம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை கூட நடத்தவில்லை. இதுவரை கட்டிய சந்தா பணத்தை வாங்கிக்கொள்ளவா, இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம்?” என்பதாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ”உறுப்பினர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும். உறுப்பினர்களாகிய எங்களையும் உள்ளடக்கிய துணைக்குழுவை அமைத்து எங்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.” என்பதாக முன்வைக்கிறார்.
தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் தனிப்பட்ட முன்னெடுப்புகள் !
கலைமகள் சபா சொத்துக்களை நிர்வகித்துவரும் அரசு தரப்பில் பேசினோம். ”தற்போதைய தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனிப்பட்ட முன்னெடுப்புகள்தான் இவையெல்லாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியராக இருந்த பழக்கத்தில் தனது ஐ.ஏ.எஸ். நண்பர்களின் உதவியை நாடியும்; தற்போது பதிவுத்துறை தலைவராக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பதிவாளர்களை அணுகியும் சில முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்.

வங்கியில் சேமிப்பாக உள்ள பணத்திற்கு வருடந்தோறும் வருமான வரித்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அவர்களுக்கு அந்தப் பணத்தை கட்டுவதற்கு பதில், அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கே பிரித்துக் கொடுக்கலாம் என்ற அடிப்படையில் இருந்துதான், அந்த இணையதளத்தில் உறுப்பினர்களின் வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்ய சொல்லியிருக்கிறார். மற்றபடி, இதுதான் இறுதி தீர்வு. இவ்வளவுதான் என்று அவராக எதுவும் முடிவெடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்கவும் முடியாது. நீதிமன்ற தலையீட்டில் இந்த வழக்கு விவகாரம் இருப்பதால், நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அவரால் எந்த முடிவையும் எடுத்துவிடவும் முடியாது. இதனை புரிந்து கொள்ளாமல், கேள்வி எழுப்புகிறார்கள்.” என்பதாக சொல்கிறார்கள்.
என்னதான் பிரச்சினை ?!
குறிப்பாக, இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? கலைமகள் சபா விவகாரத்தில் தீர்வு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? நீதிமன்றம் சொல்வது என்ன? வழக்கு தொடுத்தவர்களின் கோரிக்கைகள் என்ன? 25-ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தடையாக இருப்பது என்ன? என்ற பல கேள்விகள் நம் முன் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் அரசுதான் தெளிவை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய தலைவர் என்ற முறையில், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். இடமிருந்து விரிவான விளக்கமான அறிவிப்பு வெளியானால் மட்டுமே கலைமகள் சபா விவகாரம் தொடர்பான குழப்பம் நீங்கும். அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகுமா? பொறுத்திருந்துதான் பார்ப்போமே !
— அங்குசம் புலனாய்வுக்குழு.