அங்குசம் பார்வையில் ‘கல்கி 2898 கி.பி.’ – திரை விமர்சனம் –
அங்குசம் பார்வையில் ‘கல்கி 2898 கி.பி.’ – திரை விமர்சனம் – தயாரிப்பு: ‘வைஜெயந்தி மூவிஸ்’ சி.அஸ்வினி தத். டைரக்ஷன்: நாக் அஸ்வின். ஆர்ட்டிஸ்ட்ஸ்—பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம். டெக்னீஷியன்ஸ்—இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு: டிஜோர்ட்ஜ் ஸ்டோஜிலிகோவிக், எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ், தமிழ்நாடு ரிலீஸ்; ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் என்.வி.பிரசாத், பி.ஆர்.ஓ.— ’யுவிகம்யூனிகேஷன்ஸ்’ யுவராஜ்.

மகாபாராதப் போரில் அஷ்வத்தாமனை வீழ்த்தும் பகவான் கிருஷ்ணர், “ ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து வானில் அஸ்வினி நட்சத்திரம் தோன்றும் போது மீண்டும் நீ பிறப்பாய். அப்போது என்னை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகளிடமிருந்து என்னைக் காக்கும் அபாரா சக்தி உனக்கு கிடைக்கும். இது தான் உனக்கு நான் தரும் சாப விமோச்சனம்” என்கிறார். இதெல்லாம் நாம சொல்லல. டைரக்டர் நாக் அஸ்வின் என்ற அறிவாளி சொன்னது.
அந்த அறிவாளி சொன்னபடியே வானில் அஸ்வினி நட்சத்திரம் தோன்றுகிறது. அந்த அஸ்வத்தாமன் தான் இதோ இந்த அமிதாப்பச்சனாக பூமியில் தோன்றுகிறார். சுமதி [ தீபிகா படுகோன் ] வயிற்றில் வளரும் பகவான் கிருஷ்ணர் என்ற சிசுவை அழிக்கத் துடிக்கிறார் தீய சக்தியான சுப்ரீம்யாஸ்கின் [ கமல்ஹாசன் ]. பாரதப் போரில் கிருஷ்ணர் சொன்னது போல, கிருஷ்ணரையே காக்கும் வேலைகளில் இறங்குகிறார் அஷ்வத்தாமன். இதெல்லாமே 2898-ல் நடக்கிறது.

அதாவது இன்னும் 874 ஆண்டுகள் கழித்து நடந்தால் எப்படி இருக்கும் என்பதை டிசைன் டிசைனா வாகனங்கள், மிக அதிநவீன ஆயுதங்கள், பிரமிக்க வைக்கும் வி.எஃப்.எக்ஸ் எஃபெக்ட், விஷுவல் ட்ரீட் இவற்றின் துணையுடன் சகட்டுமேனிக்கு கற்பனை செய்து, அள்ளிவிட்டு நம்மைக் கதற வைக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின்.
இராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே வரலாற்று ரீதியான ஆதாரங்கள், சாட்சிகள் எதுவுமில்லை. இரண்டுமே நல்ல வளமான கற்பனைக் கதைகள், கண்டமேனிக்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக் கதைகள் தான். அப்படிப்பட்ட மகாபாரதக் கட்டுக் கதையை கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கம்பி கட்டும் கதைகளாக்கியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின். படம் முழுக்கவே கணினி தொழில்நுட்பம் தான் கைகொடுத்திருக்கிறது. அதனால் நாம் மேல சொன்ன ஒரு வரிக்கதையை, அதாவது பகவான் கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரிப்பார் என்ற கட்டுக் கதையை நன்றாகவே சொல்லியிருக்கிறார் நாக் அஸ்வின்.
”2000—ல் ஏசு கிறிஸ்து மீண்டும் அவதரிப்பார், அப்போது பூமியை பெரும் அழிவிலிருந்து காப்பாற்றுவார்” என்ற பரபரப்பு கற்பனைக் கதைகளை 1980—களில் பரப்பினார்கள். பரப்பியவர்ளுக்குத் தெரியாது 2000 இவ்வளவு சீக்கிரத்தில் வரும், அதிலும் 2024 படு சீக்கிரத்தில் வரும் என்று.

அதனால் டைரக்டர் நாக் அஸ்வினோ ரொம்பவே உஷாராகி, 2898-க்கு கதையைக் கொண்டு போய்விட்டார். உலகின் முதல் நகரமும் கடைசி நகரமும் காசி தான் என்கிறார் டைரக்டர். இதை உனக்குச் சொன்ன ஆராய்ச்சியாளன் யாரு டைரக்டரே. 1000 கோடி ரூபாய் பட்ஜெட்ல [ அப்படின்னு சொல்றாய்ங்க ] காவி அடிக்கிறதுக்கு இப்படியெல்லாமாய்யா அள்ளிவிடுவ. அப்புறம் இன்னொரு அபத்திலும் அபத்தம் படு அபத்தம். உலகில் எல்லா மதத்தினரும் பகவானின் கல்கி அவதாரத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்னு துணிஞ்சு அள்ளிவிட்ருக்கியே. உன்னையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்குறது?
இந்த முதல் பாகத்தில் சுப்ரீம் யாஸ்கினான கமலுக்கு இரண்டு சீன்கள் தான். இவருக்கு வேலையே இரண்டாம் பாகத்தில் தானாம். [ இது வேறயா ]. இந்த பாகத்தில் அஷ்வத்தாமன் அமிதாப்பச்சனுக்குத் தான் அதிக வேலை. அவரும் கொடுத்த வேலையை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்துள்ளார். பிரம்மானந்தம் ரேஞ்சுக்கு பிரபாஸை காமெடி பீஸாக்கிவிட்டார் டைரக்டர். அப்படி என்னய்யா பிரபாஸ் மேல உனக்கு கடுப்பு.
மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனும் கேமராமேன் டிஜோர்ட்ஜும் தான் கல்கி அவதாரத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்கள். மொத்தத்தில் மிகமிகமிக காஸ்ட்லியான வீடியோ கேம்ஸில் காவி அடித்து விளையாடிக்கிறார் சங்கி நாக் அஸ்வின்.
ஆமா காவிப் படத்தில் ஏன் கமல்ஹாசன்? 120 கோடி சம்பளம்னா காவியாவது? சங்கியாவது?
–மதுரை மாறன்
கல்கி 2898 பற்றி சிறந்த விமர்சனம்.
காவிமயத்தை தோலுரித்து காட்டிவிட்டார்.
கட்டுரையாளர் மதுரைமாறன்