காஞ்சியிலிருந்து … அண்ணா இல்லத்திலிருந்து … புது கணக்கை தொடங்கிய மல்லை சத்யா !
மறுமலர்ச்சி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாளையொட்டி மாநாடு ஒன்றை நடத்தினார்.
மாநாட்டு மேடையில் தந்தை பெரியார், காரல் மார்க்ஸ், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பிரபாகரன், ஈரோடு கணேசமூர்த்தியின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

இம் மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட, மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் முன்னணி தலைவர்களாக திகழ்ந்த திருப்பூர் துரைசாமி, புலவர் செவந்தியப்பன், நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் அழகு சுந்தரம், வல்லம் பஷீர், செங்குட்டுவன் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் காஞ்சி வளையாபதி, செங்கை ஊனை பார்த்திபன், தென் சென்னை செல்வபாண்டியன், மத்திய சென்னை இளவழகன், திருவள்ளூர் கெளரி குமார், கராத்தே பழனிச்சாமி, பாண்டியராஜன் வழக்கறிஞர் சதீஷ் பாபு, காஞ்சி மாநகர செயலாளர் வெங்கடேசன் காஞ்சி அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்த வீட்டிலிருந்து, மல்லை சத்யா தலைமையில் பேரணி மாநாடு திடல் நோக்கி பேரணி புறப்பட்டது. காஞ்சி மாநகராட்சியில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மேளதாளங்கள் முழங்க கருஞ்சட்டை படை வீரர்கள் மாஸ்டர் ஜனார்தனன் தலைமையில் சுடர் ஏந்தி பேரணி 10 மணியளவில் மாநாட்டு விழா பந்தலை வந்து அடைந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்தோடு தொடங்கிய மாநாட்டில் நாட்டியத் தாரகை சகோதரி மீனாட்சி குழுவினரின் தமிழ் உணர்வு பாடல்களுக்குப் பரதநாட்டியம் நடைபெற்றது.
காலை அமர்விற்கு கராத்தே பழனிச்சாமி தலைமை தாங்கினார். காஞ்சி மாவட்ட செயலாளர் வளையாபதி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் ஒ வி ஜெயக்குமார், திருச்சி பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், பேராசிரியர் தும்பா பிரான்ஸிஸ், அரியலூர் மாணிக்கவாசு, வகை முத்தழகன், அனல் கண்ணான், மாஸ்டர் ஜனார்தனன், விக்னேஷ் காமராஜ், காஞ்சி அருள், மருது ஆறுமுகம் தஞ்சை திருமதி பத்மா, திருமதி ஜமுனா செல்வி செந்தமிழ் இனியா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

பகல் 2.30 மணியளவில் சென்னை மணிமாறன் கலைக்குழுவினரின் கொள்கைப் பாடல்கள் நடைபெற்றறது. மாலை அமர்வு 4.30 மணிக்குத் தொடங்கியது. பேராசிரியர் அப்துல்காதர் தலைமை தாங்கினார்.
வெளிநாடுகளிலிருந்து மாநாட்டில் பிரதிநிதிகளாக இங்கிலாந்து அப்துல் பாஷித் சையத், பிரான்ஸ் வழக்கறிஞர் திலிப் குமார், இந்தோனேசியா பெருந்தமிழன் விசாகன், சிங்கப்பூர் பாண்டியரஜன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து அண்ணா திருவுருவ சிலையை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
மாநாட்டில் வழக்கறிஞர் அழகு சுந்தரம், பேராசிரியர் வாசுகி பெரியார் தாசன், வல்லம் பஷீர் அவர்கள் டிஆர்ஆர் செங்குட்டுவன் புலவர் செவந்தியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.
இரவு 7 மணியளவில் மாநாட்டில் மல்லை சத்யா தலைமையில் தொடங்கப்படவுள்ள அரசியல் இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பாகம் கருப்பு. மூன்று பாகம் சிவப்பு. மூலையில் ஏழு நட்சத்திரம் பதிக்கப்பட்ட கொடியைத் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி தொழிற்சங்கத் தலைவர் திருப்பூர் துரைசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
கொடியில் உள்ள ஏழு நட்சத்திரம் திராவிட இயக்க சாசனத் தலைவர்கள் 1. டாக்டர் நடேசனார் 2. சர் பிட்டி தியாகராயர் 3. டாக்டர் டி எம் நாயர் 4. தந்தை பெரியார் 5. பேரறிஞர் அண்ணா 6. அண்ணல் அம்பேத்கர் 7. கார்ல் மார்க்ஸ் இவர்களை குறிப்பதே ஏழு நட்சத்திரங்களாகும் என்று அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் துரைசாமி வழிகாட்டுதலில் புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு நவம்பர் 20-ஆம் நாள் கட்சியின் பெயரை அறிவிக்கும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் திராவிட ரத்னா விருது திராவிட இயக்க மூத்த முன்னோடி அய்யா திருப்பூர் துரைசாமி 2. திராவிட இயக்கப் போர்வாள் வைகோ 3. பேராசிரியர் அப்துல் காதர் 4. நாஞ்சில் சம்பத், 5. புலவர் செவந்தியப்பன் 6. பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன் 7. வல்லம் பஷீர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வைகோவிற்கு வழங்கப்பட்ட விருதை மல்லை சத்யா பெற்றுக்கொண்டார். வைகோ திருச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருப்பதால் அவருக்கான விருது அவரிடம் நேரில் வழங்கப்படும் என்று மல்லை சத்யா அறிவித்தார். விருது பெற்றவர்கள் உரையில் அனைவரும் வைகோவை தலைவர் என்றும் முன்னாள் தலைவர் என்றும் அழைத்தனர். 32 ஆண்டுகால தங்களின் அரசியல் வாழ்வை வைகோ வீணடித்துவிட்டார் என்று குறிப்பிட்டனர்.
வல்லம் பஷீர் உரையாற்றும்போது, ,“இங்கே உரையாற்றிய ஒருவர் துரை வையாபுரி வைகோவை விரைவில் கட்சியிலிருந்து நீக்கிவிடுவார். நம்மிடம் வைகோ அடைக்கலம் தேடி வருவார் என்று குறிப்பிட்டார். நாம் இப்போது திராவிட இயக்கத்திற்கு வலுசேர்க்கம் வகையில் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம். அனாதைகளுக்கு ஆசிரமம் தொடங்கவில்லை” என்ற குறிப்பிட்டபோது அரங்கம் அதிர்ந்தது.

நாஞ்சில் சம்பத் பேசும்போது, “மல்லை சத்யா நேற்றுவரை எனக்குத் தம்பியாக இருந்தார். இன்றுமுதல் அவர் எனக்குத் தலைவர்” என்று கூறி கடந்த கால நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். மாநாட்டில் வைகோ மகன் துரை வையாபுரிக்காக மதிமுகவை நடத்துகின்றார். அதற்காக பலரையும் கட்சியிலிருந்து நீக்குகிறார். இந்த இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு உழைத்தவர்களை உதாசீனம் செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு அழைத்துவரப்பட்ட துரை வையாபுரிக்கு துரை வைகோ என்று பெயரிட்டு பட்டாபிஷேகம் நடத்துகின்றார். இது ஓர் அப்பட்டமான வெட்கப்பட வேண்டிய வாரிசு அரசியல் என்று உரையாற்றினர்.
மாநாட்டின் இறுதியாக மல்லை சத்யா, “தலைவர் வைகோவிற்காக வாழ்ந்த நான் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டேன் என்பது என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் தலைவர்களாக இருந்த அனைவரும் இப்போது இந்த மாநாட்டில் ஒன்றுகூடியுள்ளனர். திராவிட இயக்கக் கருத்துகள் காக்கப்பட ஓர் அரசியல் கட்சியின் பெயர் நவம்பர் 20ஆம் நாள் அறிவிக்கப்படும்” என்று நன்றியுரை கூறினார்.
மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முன்னாள் இன்னாள் மதிமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்சியிலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட மிசா சாக்ரடீஸ், எமக்குட்டி, காமராஜ், புரட்சிமணி ஆகியோருக்கு மாநாட்டில் சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு மக்கள் நல அமைப்புகள் மல்லை சத்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். தொண்டை மண்டல ஆதீனம், பௌத்த அமைப்பினர், கிறித்தவ அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர் என பலரும் மாநாட்டிற்கு வருகை தந்து மல்லை சத்யாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய மாநாடு இரவு 11 மணி வரை நடைபெற்றது. மாநாட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அரங்கம் நிரம்பிய நிலையில் அருகில் இருந்த சத்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் எல்இடி திரையில் மாநாட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது. அதுபோலவே இரவு உணவும் வழங்கப்பட்டது. மாநாட்டில் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்றவாதி என்ற புகழைப் பெற்ற வைகோ அரசியல் வாழ்வில் உச்சத்தைப் பெற்றிடாத சூழ்நிலையில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி அரசியல் அமைப்பைத் தொடங்கியிருப்பது வைகோவிற்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
— காஞ்சியில் இருந்து சிறப்பு செய்தியாளர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.