கந்த சஷ்டி விரதம் வழிபாட்டு முறைகள்!
ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமான தாக சொல்லப்படும் விரதம் கந்த சஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதைத்தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை (கருப்பையில்) வரும் என்ற பழ மொழியாக கூறுவார்கள். கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்காரம் வரை மிக எளிமையான சைவ உணவினை குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். மாலையில் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.
கந்த சஷ்டி விரதம்:
முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த விரதமாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம் ஆகும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, நோய்கள் தீர, வேலை என எந்த குறை தீர வேண்டும் என்றாலும் முருகப்பெருமானை மனதார வேண்டி இந்த மகா கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கந்த சஷ்டி விரதம் பல முறைகளில் கடைபிடிக்கலாம். இவற்றில் உங்களுக்கு வசதியான முறையில் சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம். வீட்டில் இருந்தோ அல்லது கோவிலில் சென்று தங்கியோ சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம். வீட்டில் இருந்தபடியே விரதம் இருப்பவர்கள் கலசம் அமைத்தோ படம் மட்டும் வைத்தோ விரதம் இருக்கலாம்.
வீட்டில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:
வீட்டில் கலசம் வைத்து விரதம் இருப்பவர்கள் கலசத்தில் தண்ணீர் நிரப்பி வாசனை திரவியம், மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சை பழம், ஒரு ரூபாய் நாணயம், 2 ஏலக்காய் ஆகியவற்றை போட்டு அதன் மீது மாவிலை அல்லது தாம்பூலத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதற்கு பிறகு கலசம் வைத்து கந்த சஷ்டியின் ஏழு நாட்களும் வழிபட வேண்டும். படம் வைத்து வழிபடுபவர்கள் ஒரு பலகையில் சிவப்பு நிற வஸ்திரம் விரித்து அதன் மீது வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபட வேண்டும். காப்பு கட்டாமலும் தினமும் முருகனுக்கு நெய்வேத்தியம் படைத்தும் வழிபடலாம்.
காப்பு கட்டி நல்ல நேரம்:
அக்டோபர் 22 ஆம் தேதி காப்பு கட்டி கலசம் அமைத்து கந்த சஷ்டி விரதம் துவங்குவதற்கான நல்ல நேரம். காலை 4 மணி முதல் 6:00 மணி வரை காலை 6 முதல் 7:00 மணி வரை காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை. பொதுவாக விரதம் துவங்கபவர்கள் காலை 6 மணிக்கு முன்பாக துவங்கி விடுவது சிறப்பு. காப்பு கட்டுவதாக இருந்தால் நீங்கள் பூஜை அறையில் கட்டிக் கொள்ளலாம் அல்லது பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலில் சென்று கோவிலில் பூஜை செய்யும் அய்யர் மூலமாகவும் கட்டிக் கொள்ளலாம்.
விரதம் துவங்கும் முறை:
காலையில் எழுந்து முதலில் குலதெய்வத்தை வழிபட்டு விட்டு விநாயகரை வணங்கி விட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு விரதத்தை துவங்கலாம். முதலில் என்ன நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப்பெருமானிடம் மனதார சொல்லிவிட்டு அந்த வேண்டுதல் நிறைவேறவும் இந்த விரதம் நல்லபடியாக நிறைவடைந்து அதன் முழு பலனும் கிடைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு விரதத்தை துவங்கலாம். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு சிறப்பு நிற மலர் சாட்டி சர்க்கரை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் அல்லது கோதுமை பொங்கல் இவற்றால் ஏதாவது ஒரு நெய்வேத்தியம் படைத்து வழிபடலாம். நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்ற திருப்புகழை பாராயணம் செய்து அதை தினமும் காலையிலும், மாலையிலும் சொல்லி முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானை வழிபடும் முறை:
வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி அதன் மீது ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு விளக்கு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்லலாம். கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்காமல் நாள் முழுவதும் முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். கலசம் அமைக்கும் போதும் படம் வைத்து வழிபடும் போதும் எப்போதும் ஓம் சரவணபவ மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பு. இது தவிர கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் என முருகப் பெருமானுக்கு விருப்பமான பாடல்களை தினமும் காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
இப்படி ஆறு நாட்களும் செய்து முடித்து ஏழாவது நாள் முருகர் திருமண வைபவ நிகழ்ச்சி நடைபெறும். முருகப்பெருமானின் கோவிலுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானின் திருமண வைபோக நிகழ்ச்சியை கண்டு முருகனை தரிசித்து விட்டு விரதத்தை முடிக்கலாம் அல்லது வீட்டில் இருந்து விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் வீட்டிலே அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகர் சிலைக்கு பூஜை செய்து விட்டு வந்து விரதத்தை முடிக்கலாம். விரதம் முடிப்பவர்கள் உண்ணும் உணவு காய்கறி கலவை நிறைந்த கூட்டு பொறியல் அப்பளம் பாயாசம் சாதம், பருப்பு கூட்டு போன்றவற்றை சமைத்து வாழை இலையில் உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.