அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘கர’

திருச்சியில் அடகு நகையை விற்க

யாரிப்பு: ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே.கணேஷ், இணைத் தயாரிப்பு: குஷ்மிதா கணேஷ். டைரக்டர்: விக்னேஷ் ராஜா, ஆர்டிஸ்ட்: தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், கருணாஸ், ஸ்ரீஜாரவி பிரித்வி பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, ஷரவணசக்தி. கதை: ஆல்ஃபிரட் பிரகாஷ் & விக்னேஷ் ராஜா. ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: ஸ்ரீஜித் சாரங், ஸ்டண்ட்: தினேஷ் காசி, ஆர்ட் டைரக்டர்: மாயபாண்டி, காஸ்ட்யூம் டிசைனர்கள்: தினேஷ் மனோகரன், காவ்யா ஸ்ரீராம், பிஆர்ஓ: சதீஷ் & சிவா(எய்ம்), ரியாஸ் அகமது

கர
கர

 

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

ஏப்ரல் 30-ஆம் தேதி ரிலீசாகியிருக்கும் ‘கர’ படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பு, ஏப்.29 பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தி மோடி சர்க்காரின் டிஜிட்டல் இந்தியாவின் மானத்தை சல்லிசல்லியாக நொறுக்கி, சந்தி சிரித்ததை எழுதினால் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை ஜீத்து முண்டா. இவரது சகோதரி கல்ரா முண்டா, அந்த மாநிலத்தின் கிராமின் வங்கியில் சேமிப்புக் கணக்கில் 20 ஆயிரம் ரூபாய்[ வெறும் 20 ஆயிரம் ரூபாய் தான்] வைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் திடீரென இறந்துவிட, அந்த 20 ஆயிரம் ரூபாயை மீட்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அலைந்து நொம்பலப்பட்டார் ஜீத்து முண்டா. 20 ஆயிரத்துக்குச் சொந்தக்காரர் நேரில் வந்தால் தான் கொடுப்போம் என வங்கியின் பொறுக்கிகள் சொல்ல, சகோதரி செத்துப் போனதை ஜீத்து முண்டா சொல்ல, ”அதெல்லாம் தெரியாது, முடியாது” என வங்கிப் பொறுக்கிகள் மீண்டும் மீண்டும் சொல்ல….
வெறுத்துப் போன ஜீத்து முண்டா வேறு வழியே இல்லாமல், நான்கு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட தனது சகோதரி கல்ரா முண்டாவின் எலும்புக்கூட்டைத் தூக்கிக் கொண்டு போய் வங்கியில் போட்டார். அதன் பின் தான் போலீஸ் வந்து ஜீத்து முண்டாவை சமாதானம் செய்து அந்த 20 ஆயிரத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி அனுப்பி வைத்துள்ளது. ஜீத்துவுக்கு கிடைக்க வேண்டிய பணம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த கேடுகெட்ட நாய்களான வங்கி அதிகாரிகளைத் தூக்கிப் போய் லாடம் கட்டியிருக்க வேண்டாமா? அதெல்லாம் செய்யமாட்டார்கள், ஏன்னா அங்கே இருப்பது பாஜக ஆட்சி. உத்தம சீலர் மோடியின் ஆசி பெற்ற முதல்வர் இருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் ராஜா & நடிகை மமிதா பைஜு
இயக்குனர் விக்னேஷ் ராஜா & நடிகை மமிதா பைஜு

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்ஷி, லலித் மோடி போன்ற அயோக்கிய நாய்கள் பல ஆயிரம் கோடிகளை வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு நாட்டைவிட்டு ஓடிப்போய் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அங்கே குடி, குட்டி, கும்மாளமாக வாழ்கிறார்கள். ஆனால் இங்கே மோடி சர்க்காரின் டிஜிட்டல் இந்தியாவில் ஜீத்து முண்டாக்கள் தான் உழைத்துச் சேமித்த வெறும் 20 ஆயிரத்திற்காக எலும்புக்கூட்டுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்ப ‘கர’ விமர்சனத்திற்கு வந்தா கரெக்டா இருக்கும்.
இராமநாதபுரம் மாவட்டம் தான் கதைக்களம். அங்கே திருவெறும்பூர் எம்.எல்.ஏ.[காங்கிரஸ்] ஒருவரின் வீட்டில் இரவு நேரம் திருடப் போய் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார் கரசாமி[எ] கர [ தனுஷ்]. இவரது கூட்டாளி முருகேசன் [ பிரித்வி பாண்டியராஜன்] தப்பிவிடுகிறார். எம்.எல்.ஏ.வீட்டில் திருடியவனை விசாரித்து பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காகவே வருகிறார் டிஎஸ்பி சுராஜ் வெஞ்சரமூடு.
டிஎஸ்பியைத் தாக்கிவிட்டு எஸ்கேப்பாகும் கரவும் அவரது காதலி செல்லியும்[ மமிதா பைஜு] ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கிறார்கள். ஒருகட்டத்தில் தனியாக ஓட்டல் வைக்கும் ஆசையுடன் அங்கிருக்கும் வங்கி மேனேஜரைப் பார்க்கிறார்கள். அவரோ ஷுரிட்டி கேட்கிறார். தனது அப்பா கந்தசாமி[ கே.எஸ்.ரவிக்குமார்] பேரில் ஐந்து ஏக்கர் நிலம் இருப்பது நினைவுக்கு வர, மீண்டும் திருவெறும்பூருக்கே வருகிறார் கர. அந்த நிலத்தை அப்பாவிடம் கேட்கும் போது அங்கே இருக்கும் வங்கியில் விவசாய லோனுக்காகவும் டிராக்டர் வாங்கியதற்காகவும் அஞ்சு ஏக்கரும் அடமானத்தில் இருப்பதாகச் சொல்கிறார் கந்தசாமி. இவரின் நிலம் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் எல்லா விவசாயிகளின் நிலமும் அடமானத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தான் கந்தசாமி வாங்கிய லோனுக்காக அவரது நிலம் ஜப்திக்கு வருகிறது. அதன் பின் கர எடுக்கும் முடிவு என்ன?

 

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கருப்பசாமியை நினைத்து திருட்டுக்காரியத்தில் இறங்கும் ‘கர’வாக தனுஷ். நடிப்பில் அசுரன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மனுஷன். அவரது எண்ட்ரி சீனே சிம்பிளாகத் தான் இருக்கு. ஊருக்குப் போய் தனது அப்பாவைப் பார்க்காமல் பஸ் ஏறும் போது அதே பஸ்ஸிலிருந்து இறங்கும் தனது அப்பாவைப் பார்த்து பின்வாங்குவதும், “தம்பி கொஞ்சம் தள்ளிக்கப்பா” எனச் சொல்லும் கே.எஸ்.ரவிக்குமார், தனுஷின் முதுகுப்பக்கத்தைப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் நில்லுப்பா” எனச்சொல்லி, அவரது முகத்தைப் பார்த்ததும் கண்ணீர் உகுப்பதும் என இந்த சீனில் தனுஷும் சரி, ரவிக்குமாரும் சரி, நம்மை உருக வைத்துவிட்டார்கள்.
முன்னோர்கள் புதைக்கப்பட்ட அந்த நிலத்தில் ரவிக்குமாரை இடது பக்கம் தோளைத் திருப்பி தனுஷ் பார்க்கும் சீன் செம கிளாஸ். தனது மாமா காசி[கருணாஸ்]யுடன் சேர்ந்து வங்கியைக் கொள்ளையடிக்க உள்ளுரிலேயே துப்பாக்கி வாங்குவது, வங்கி மேனேஜரிடமே அலாரம் சிஸ்டம் குறித்து கருணாஸ் கேஷுவலாக விசாரிப்பது, அதன் பின் வரிசையாக அந்த மாவட்டத்தில் இருக்கும் பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கீழக்கரை, அபிராமம், பார்த்திபனூர் கிளைகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது என தனுஷ் போடும் பிளான்கள் எல்லாமே நம்பகத்தன்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கு. [அந்த மாவட்ட ஊர்களை ரொம்பவும் டீடெய்லாகச் சொன்னதற்கு டைரக்டர் விக்னேஷ் ராஜாவுக்கும் உறுதுணையாக இருந்த கதாசிரியர் ஆல்ஃபிரட் பிரகாஷுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்]

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

கரிசல் பூமியின் செல்லியாக மமிதா பைஜுவுக்கு சீன்கள் குறைவு தான் என்றாலும் அவர் வரும் சீன்கள் எல்லாமே நிறைவு. தனுஷின் அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார். வயது முதிர்ந்த கேரக்டரை தளர் நடையிலும் எளிய உடையிலும் முகபாவனையிலும் வசனத்திலும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி அசத்திவிட்டார் அனுபவஸ்தரான ரவிக்குமார். தனுஷின் அம்மாவாக ஸ்ரீஜாரவிக்கு க்ளைமாக்ஸில் வெயிட்டான சீன்.
தனுஷின் மாமாவாக கருணாஸின் பாடிலாங்குவேஜ், தனுஷ் கூடவே இருந்து கொள்ளைத் திட்டத்தை சக்சஸாக முடிப்பது என கவனம் ஈர்க்கிறார் கருணாஸ். ஃபர்ஸ்ட் அட்டெம்ப்டுக்கு முன்பு காரில் உட்கார்த்திருக்கும் போது, “என்னய்யா சத்தம்”னு தனுஷ் கேட்க, “அது ஒண்ணுமில்லடா.. பயத்துல என் கால்தான் ஆடுது” என கருணாஸ் சொல்லும் போது தியேட்டரில் செம கிளாப்ஸ். தனுஷின் கூட்டாளியாக பிரித்வி பாண்டியராஜனும் சரி, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கருப்பு மேக்கப்புடன் வரும் எம்.எஸ்.பாஸ்கரும் சரி, கொடுத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார்கள்.
டிஎஸ்பியாக சுராஜ் வெஞ்சரமூடுவைப் பத்தி சொல்லவா வேண்டும்? சொல்லித்தான் ஆகவேண்டும். ஒவ்வொரு பிராஞ்சாக கணக்குப் போட்டு அந்த வங்கியின் மேனேஜர்களை உஷார்படுத்த, தனுஷோ கச்சிதமாக காரியத்தை முடிக்க, லோன் வாங்கி லோல்பட்டவர்களின் லிஸ்டை எடுத்து ஸ்கெட்ச் போட, அதிலும் தனுஷ் எஸ்கேப்பாக லேசான கடுப்புடன் சிகரெட்டை பத்தவைத்தபடி ரீஜினல் மேனேஜர் ஜெயராமை ஜீப்பில் போட்டுக் கொண்டு சுத்துவது, க்ளைமாக்ஸில் தனுஷ் கையில் விலங்கு மாட்டிவிட்டு, “இப்ப உன்னைப் பிடிச்சா, உன் போட்டோ தான் பேப்பர்ல பெருசா வரும், நீ ஹீரோ ஆகிருவே, நான் வில்லனாகிருவேன்” எனச் சொல்லி கைவிலங்கை கழட்டிவிடும் போது போலீஸ் அதிகாரியின் விளம்பர வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் சுராஜ் வெஞ்சரமூடு.
ரீஜனல் மேனேஜர் முத்துச் செல்வனாக ஜெயராம் எண்ட்ரியான பிறகு தான் சும்மா ஜெட் வேகத்துல போகுது ஸ்கிரிப்ட். லோன் அப்ளிகேஷன்ல என்ன இருக்குன்னு லோன் வாங்குறவனுக்கே தெரியக்கூடாது என நியூ அப்பாயிண்மெண்டுகளுக்கு டிரெய்னிங் கொடுப்பது டைரக்டரின் செம டச். டிராக்டர் லோன் கொடுத்துவிட்டு, அதே டிராக்டரை ஜப்தி பண்ணும் ஜெயராமுக்கு அதே டிராக்டரால் ஏற்படும் கதியும் விக்னேஷ் ராஜாவின் சூப்பர் டச்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

இரண்டு பாடல்களிலும் ஒட்டு மொத்த படத்தின் பின்னணி இசையிலும் ஜொலிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 90-களின் கலர் ஷேடைக் கொண்டு வந்து அசத்தியிருக்கும் கேமராமேன் தேனி ஈஸ்வர், சோளக்காட்டுக்குள் வேகமாக ஓடி, ஒரு சின்ன கட்டிடத்தின் மீது தாவி, வங்கிப் பணம் வரும் ஜீப் மீது தனுஷ் விழும் காட்சியில் பிரமிக்க வைக்கிறார் தேனி ஈஸ்வர். இந்த சீக்வென்ஸை கம்போஸ் பண்ணிய ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கு சபாஷ். 2 மணி நேரம் 41 நிமிடங்கள் படத்தில் முதல் பாதி சற்றே ஸ்லோவாக போவது போலத் தெரிந்தாலும் இந்தக் கதை இப்படித்தான் போக வேண்டும் என டைரக்டரின் ஸ்கிரிப்ட் ஓட்டத்தை அறிந்து கத்திரியை கண்ட்ரோல் பண்ணியிருக்கார் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங். செட் எது? லைல் லொக்கேஷன் எது? என்பது தெரியாத அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் மாயபாண்டி.
“அவன் லோன் கொடுத்து ஏமாத்தல, நம்பிக்கை கொடுத்து ஏமாத்திட்டான்” என க்ளைமாக்ஸில் சுராஜ் வெஞ்சரமூடுவிடம் தனுஷ் பேசும் வசனம், டிஜிட்டல் இந்தியாவுக்கு செருப்படி. வெல்டன் விக்னேஷ் ராஜா.
வங்கிப் பொறுக்கிகளால் சூறையாடப்படும் ஏழைகளின் வாழ்க்கையைப் பேசுகிறான் இந்த ‘கர’சாமி.

அங்குசம் பார்வையில் ‘கர’ 78/100

– ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.