கரூர் மைனர் சிறுமியின் காதல் விவகாரம்… கொலையா தற்கொலையா?
கரூர் மைனர் சிறுமியின் காதல் விவகாரம்… கொலையா தற்கொலையா?
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சவரிமேடு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46), இவர் தனது மகள்கள் விக்னேஸ்வரி, தேவிகா (16) ஆகியோருடன் வசித்து வருகிறார். கலைவாணி சற்று மனநிலை பாதிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கலைவாணியின் கணவர் தங்கராசு இவர்கள் மூவரையும் பிரிந்து சென்றுள்ளார். அதனையடுத்து, கூலி வேலை செய்து தனியாக மகள்களை வளர்ந்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் மூத்த மகள் விக்னேஸ்வரி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இளைய மகளான தேவிகாவும் பதினோராம் வகுப்பு முடித்து விட்டு கடந்த ஓராண்டாக தனது அக்காவுடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
தேவிகா அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (18) நங்கவரம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் குணசேகரின் மகனை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து கவுன்சிலர் குணசேகருக்கு தெரியவர தேவிகா – கஜேந்திரன் காதலிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தேவிகாவின் குடும்பத்தினரிடம் எச்சரித்துள்ளார். இந்நிலையில், கடந்த 24ந்தேதி இரவு 11 மணியளவில் தேவிகாவை தொடர்பு கொண்ட காதலன் கஜேந்திரன் நேரில் சந்திக்க வேண்டுமென கூறியதையடுத்து, தனது அக்கா விக்னேஸ்வரி துணையுடன் கஜேந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கஜேந்திரன் வீட்டு வாசல் அருகே சென்ற போது சிலர் அடாவடியாக வந்து தேவிகாவின் தலைமுடியை பிடித்து உள்ளே இழுத்து சென்றுள்ளனர். விக்னேஸ்வரியையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்கா விக்னேஸ்வரி இதுகுறித்து தகவலை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து தேவிகாவை மீட்க உறவினர்களுடன் கஜேந்திரன் வீட்டை சூழ்ந்துள்ளனர்.
ஆனால், கவுன்சிலர் குணசேகரன் எங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து, தேவிகாவின் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் தேவிகா கிடைக்கவில்லை. இதனையடுத்து, அடுத்த நாள் 25ந்தேதி காலை தேவிகாவை கண்டுபிடித்து தரக்கோரி குளித்தலை காவல் நிலையத்தில் கண்ணீருடன் தாய் கலைவாணி புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தேவிகாவின் உறவினர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தநிலையில், 26ந் தேதி காலை சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தேவிகா சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது.
மேலும், இது குறித்து குளித்தலை காவல்துறையினருக்கும், முசிறி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராவிற்கு பின் தற்கொலை என மருத்துவர் அறிவித்துள்ளார், போலீசாரும் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிகாவின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என 2 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற 500க்கும் மேற்பட்ட தேவிகாவின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேவிகா காணாமல் போன 4 நாட்களுக்கு பின் காவல்துறையினர், நங்கவரம் பேரூராட்சி திமுக வார்டு கவுன்சிலரும் வரிவிதிப்பு நியமனக்குழு உறுப்பினருமான குணசேகர் (53), இவரின் மகன் கஜேந்திரன் (18), குணசேகரின் மைத்துனர் முத்தையன் (51) ஆகிய 3 பேர் மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
தேவிகாவின் உடலை மறு உடற்கூராய்வுக்கு உட்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அவரது உடல் 14 நாட்களுக்கு பிறகு நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தடையவியல் வல்லுநர்கள் முன்னிலையில் நடைபெற்று பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு சவாரி மேட்டிற்கு கொண்டுவரப்பட்டு இன்று (8.06.2023) காலை 10 மணி அளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேவிகாவின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட பாமக மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு கைது செய்துள்ளனர். இதனை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இறந்தவர் இளம் பெண் என்பதால் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
-நௌஷாத்