கரூர் பெருந்துயரம் – ஊடக ஆசிரியர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்!
கரூரில், விஜயின் பரப்புரையில் 41 பொதுமக்கள் உயிரிழந்தற்கு ஊடகங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. விஜய் விவகாரத்தில் ஆரம்பித்திலிருந்தே தமிழ் காட்சி ஊடகங்கள் மிக மோசமாகவே செயல்பட்டன. முதல்வர் ஸ்டாலினோ, அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியோ பொதுக்கூட்டம் நடத்தினால், அவர்கள் பேசும்போது மட்டுமே ஊடகங்கள் அதை ஒளிபரப்பு செய்யும். ஆனால், விஜயை பொருத்தவரையில், அவரது வாகனத்தின் ஒவ்வொரு நகர்வும் நேரலையில் அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தன. ஊடக வணிகம் மிகவும் சிக்கலானது.

திமுக, அதிமுக கூட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பமோ அதே முக்கியத்துவம்தான் விஜய் கூட்டத்துக்கும் கொடுப்போம் என்று ஒரு செய்தி சேனல் முடிவெடுக்கும் என்றால், அது வணிகரீதியாக கோடிக்கான ரூபாய் இழப்புக்கு தயாராக இருக்க வேண்டும். யதார்தத்தில் அது அவ்வளவு எளிதல்ல. அதேசமயம், ஊடக ஆசிரியர்கள் தங்களுடைய ஊடக நெறியில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், இந்த ரேட்டிங் போட்டிக்கு எதிராக களமாட முடியும்.
உண்மையில், விஜயின் கூட்டத்தை ஊடகங்கள் அவ்வளவு எளிதில் தவறவிட முடியாது. ஆனால், பிரச்சினை எங்கே என்றால், ஊடகங்கள் விஜயை கவனப்படுத்திய விதமும் அவரை பொஷிசனிங் செய்த விதமும்தான். மக்களின் குரலாக ஒலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள், உண்மையில் மக்களின் தரப்பிலிருந்து விஜயை அணுகவில்லை. மாறாக, விஜய் ஒரு சேனல் நடத்தினால் எப்படி தன் கூட்டத்தைக் கொண்டாடி வெளிப்படுத்துவாரோ, அதே போல்தான் தமிழ் ஊடகங்களும் எந்தக் கூச்சமும் இல்லாமல் அவரை அணுகின. விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் நேரலையாக்கி, ரேட்டிங் வெறியில் அவருக்குப் பெரும் ஹைப் ஏற்றின. ஊடகங்கள் விஜய்க்கு வழங்கிய இந்த அதீத முக்கியத்துவம், அவரது நிகழ்ச்சிக்கு பெருங்கூட்டம் கூட ஒரு முக்கிய காரணம்.
பொறுப்பான ஊடகங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
பெங்களூரில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. விஜய் போன்ற நடிகர் களம்காணும் அரசியல் கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் திரள்வார்கள் என்பது தெரியும். அப்படி இருக்கையில், பெருந்திரளான மக்கள் கூடுவதற்கு ஏற்ற இடங்களில்தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா, அங்கு அசம்பாவிதங்களுக்கான வாய்ப்புகள் என்ன என்பதையெல்லாம் ஊடகங்கள் கவலையுடன் விரிவாக அலசி, அரசின் பாதுகாப்பு ஏற்பாட்டையும், கூட்டம் நடத்தும் கட்சிக்கான பொறுப்பையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், ஊடகங்கள் செய்துகொண்டிருந்தது என்ன? விஜய் எழுந்துவிட்டார், விஜய் குளித்துவிட்டார், விஜய் வாகனம் கிளம்பிவிட்டது, இதோ நெருங்கிவிட்டார், இதோ இப்போது பேசப்போகிறார், இதோ, இதோ, இதோ என்று விஜய்க்கு பிஆர் வேலை செய்துக்கொண்டிருந்தன. இப்போது இந்தச் துயரச் சம்பவத்துக்கு யார் காரணம் என்று ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. பிறரை கேள்வி கேட்பதை தன்னுடைய கடமையாக முன்னிருத்தும் ஊடகங்கள், தங்களை ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்துவதேயில்லை. முறைப்படி, விஜயின் கூட்டங்களை கையாண்ட விதம் குறித்து ஊடகங்கள் தங்கள் மீதே விவாதம் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், ஊடகங்களோ, சமூகத்தில் நிகழும் எல்லா பிரச்சினைகளுக்கும் பிறரை பொறுப்பாக்கி கேள்வி கேட்டுவிட்டு, எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் தங்கள் தவறுகளை மறைத்து நழுவிவிடுகின்றன. உண்மையாக, ஒரு ஊடகம் தன்னை தார்மீகமானது என்று கருதிக்கொள்ளுமானால், இந்த துயர நிகழ்வுக்கு தன்னுடைய பங்கை நினைத்து குற்ற உணர்வு கொள்ள வேண்டும். தன்னுடைய பொறுப்பற்ற செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.
ஊடகத் துறையில் அங்கம் வகிக்கும் ஒருவனாய், இந்தத் துயரம் என் நெஞ்சை கனக்கச் செய்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நினைத்து மட்டுமல்ல, ரேட்டிங் வெறியில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சிந்தனையில் நாம் எதைத் திணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தும் வருத்தம் கொள்கிறேன்.
- முகமது ரியாஸ் – பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.