எது திமுக சதி ? – இது திமுக சதியா ?
எதுவும் எழுதக்கூடாது… எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். அப்படி இருக்க வேண்டும் என்றால் பேஸ்புக், சோஷியல் மீடியா பக்கமே வராமல் இருந்தால்தான் முடியும். ஆனால் அது சாத்தியமில்லை. இங்கே வந்தால் கண்ணில் படுகிற பதிவுகள் எல்லாம் கரூர் சம்பவம்தான். விஜய் ஆதரவு, விஜய் எதிர்ப்பு பதிவுகளைப் படிக்கப் படிக்க தலைவலி தாங்க முடியவில்லை. நேற்று மாலை வெளியே போனபோது சாலை வெறிச்சோடிக் கிடந்தது. அது ஞாயிறு என்பதால். ஆனால் மனதுக்குள் கரூர் சம்பவத்தின் காரணமாக சாலையே வெறிச்சோடி விட்டதாகத் தோன்றிவிட்டது.
விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து வரவேற்றோ எதிர்த்தோ நான் பதிவுகள் எதுவும் எழுதியதே இல்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் ஜனநாயகம். ஆனால் அரசியலுக்கு வந்தபிறகு கொள்கை ரீதியாக என்ன செய்கிறார்கள் என்று பார்த்து எழுதுவதே என் வழக்கம். கமலஹாசனுக்கும் அதேதான்.
ஆனால் இப்போது திமுக சதி கான்ஸ்பிரசி தியரிகள் எல்லாம் படிக்கும்போது, தற்குறிகளின் வீடியோக்களைப் பார்க்கும்போது, நிஜமாவே மிடியல. ஒவ்வொரு வீடியோவாக, உள்ளூர்வாசிகளின் நேர்காணல்களாகப் பார்க்கப் பார்க்க ஒரு சைக்கோவைத் தலைவனாகக் கொண்ட தற்குறிகள் வெறியர்கள் கழகம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் சொல்வார்களே… disaster waiting to happen – என்று… அதுதான் இது.
எது சதி?
ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் – முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா? உங்களுடன் ஸ்டாலின் என்று ஸ்டாலின் போகவில்லையா? ராகுல் காந்தி போகவில்லையா? அது என்ன தவெக மட்டும் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம்? எதற்காக?

பள்ளி கல்லூரி விடலைகளுக்கு சனிக்கிழமைதான் விடுமுறை. வெறிபிடித்த ரசிகர்களிலும் பெரும்பாலோர் நடுத்தர, கீழ்நடுத்தர தொழிலாளர் வர்க்கம். சனி-ஞாயிறுகளில் நிகழ்ச்சி வைத்தால்தான் கூட்டம் வரும். வேறு நாட்களில் கூட்டம் வராது. அதற்காக வீக் எண் பார்ட்டி. இதுதான் அவர்களின் திட்டம்.
இது திமுக சதியா?
இதற்கு முன்னால் எத்தனையோ பேர் பாத யாத்திரைகள் நடத்தவில்லையா? ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். பல மாதங்கள். நாடு முழுக்கப் போனார். பயணித்த இடங்களில் எல்லாம் பல்லாயிரக் கணக்கில் தொண்டர்களும் ஆர்வலர்களும் இருந்தார்கள். முன்பின் தெரியாத சாமானியர்களோடு கைகோர்த்தும் அணைத்தும் நடந்தும் ஓடியும்… நான் தலைவன் – உங்களுக்கெல்லாம் மேலானவன். என்னை நீங்கள் அண்ணாந்து பார்க்க வேண்டும் என்று அவர் இருக்கவில்லை. அவரும் மக்களோடு மக்களாகத்தான் கலந்து நடந்தார்.

ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா?
கடந்த மாதம் பீகாரில் ஓட்டுத் திருடனுக்கு எதிராக ரோட் ஷோ. சுமார் 15 நாட்கள். போன இடமெல்லாம் பல்லாயிரம் பேர் என மக்கள் திரள். வேனிலும் போனார், நடந்தும் போனார், பைக்கிலும் போனார்.
ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா?
ஆனால் இந்த சைக்கோ என்ன செய்தான்? தன் ரசிகர்கள் தன்னை மலைப்புடன் பார்க்க வேண்டும், எவனும் என்னை நெருங்கிவிடக் கூடாது. அதற்காக கம்பிவேலிகள் போட்டதும் போதாமல், எவன் ஏறினாலும் வழுக்கி விழும் வகையில் அதில் கிரீசும் தடவி வைத்தவன். அப்படியும் சில தற்குறிகள் மேலேறி வந்தபோது, பவுன்சர்களால் தாக்கித் தூக்கி எறிய வைத்தவன். அப்படித் தூக்கி எறியப்பட்டாலும் ரசிகவெறியாக இருப்பவன் தற்குறி அல்லாமல் வேறென்ன? தன் தலைவன் யாராலும் நெருங்க முடியாதவன் என்ற பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்த, அவர்களை பைத்தியக்காரர்கள், தற்குறிகள் ஆக்கியவன் அக்கட்சித் தலைவன்.
இது திமுக சதியா?
இவனை சைக்கோ என்றால் சிலருக்குக் கோபம் வரலாம்.
ஒரு தலைவன் தன் தொண்டர்களை, ரசிகர்களைப் பார்த்தால் என்ன செய்வான்? கை அசைப்பான். வணக்கம் தெரிவிப்பான். நாற்புறமும் மக்களுக்குத் தன் முகத்தைக் காட்டுவான். இதுதானே வழக்கம்?
நேற்றிலிருந்து ஒரு வீடியோ சுற்றுகிறது. வேனுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். வெளியே ரசிகர்கள் கூட்டம். இவன் லைட்டை ஆப் செய்து, ஆன் செய்து விளையாடுகிறான். தற்குறி ரசிகர்கள் அதற்கும் விசிலடித்துக் கூச்சலிடுகிறார்கள். இவன் மந்தகாசப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் புன்னகையில், பாத்தியா… ரசிகர்களை என்ன மாதிரி முட்டாளாக்கி வச்சிருக்கேன் பாத்தியா என்கிற சாடிஸ்ட் பாவனைதான் இருக்கிறது.
இது திமுக சதியா?
இன்னொரு வீடியோ சுற்றுகிறது.
இவனுடைய வாகனத்தின் இடதுபுறம் ரசிகத் தற்குறிகள் கும்பலாக ஓடிவந்துகொண்டே செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தடுக்கி விழுகிறான். பின்னாலிருந்தவன் அவன்மீது தடுக்கி விழுகிறான். சிறிது பிசகியிருந்தாலும் வாகனத்தின் சக்கரத்தில் மாட்டியிருக்க வேண்டியவர்கள். ஆனாலும் வாகனம் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, கீழே விழுந்தவனை யாரும் தூக்கிவிடவும் வரவில்லை. அவனை மிதித்துக்கொண்டு முன்னே ஓடி செல்பி எடுக்கத்தான் போய்க் கொண்டிருந்தார்கள் தற்குறிகள்.
இது திமுக சதியா?
அதே வீடியோவில் வாகனத்தின் வலதுபக்கம் சில பைக்கர்கள். போனில் வீடியோவோ படமோ எடுத்துக்கொண்டே கும்பலாக வருகிறார்கள். அதில் ஒரு பைக்கில் வந்தவர்கள் இவனுடைய வாகனத்தில் மோதி அல்லது இடித்து கீழே விழுகிறார்கள். பின்னால் வந்த பைக்கும் அவர்கள் மேல் இடித்து விழுகிறார்கள். அந்த வீடியோவின் காட்சிப்படி பார்த்தால், அவர்கள் சக்கரத்துக்குள்தான் விழுந்திருக்க வேண்டும். தப்பினார்களா எப்படித் தப்பினார்கள் தெரியாது. ஆனாலும் வாகனம் நிற்கவில்லை.
இது திமுக சதியா?
நிகழ்ச்சி தாமதமானது குறித்து நிறையப்பேர் எழுதி விட்டார்கள்.
எந்தவொரு அரசியல் கட்சிக் கூட்டத்திலும் தலைவர் வருவது தாமதமாவது இயல்புதான். வழியெல்லாம் பல்வேறு கூட்டங்களில், போக்குவரத்து நெரிசலில் தாமதம் ஆகும்தான். 2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் சுமார் 2 மணிநேரம் தாமதமாகத்தான் வந்தார். ஆனால், விஜய்விஷயத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அவர் நேராக சென்னையிலிருந்து தனிவிமானத்தில் புறப்பட்டு நேராக நாமக்கல் வர வேண்டியவர். 8.45க்கு நாமக்கல்லில் கூட்டம் எனத் திட்டம். ஆனால் 8.45க்கு சென்னையிலிருந்தே புறப்படவில்லை. ஏன்? அவ்வளவு அலட்சியம்? திமிர்?அந்தக் காலை நேரத்தில் கூட்டம் சேராது, தாமதமாகப் போனால்தான் கூட்டம் இருக்கும் என்பதுதானே?
பிற கட்சிக்கூட்டங்களில் முக்கியத் தலைவர் வரும்வரை மக்களுடன் உரையாட, அவர்களை எங்கேஜ்டாக வைப்பதில் அந்தந்தப் பகுதித் தலைவர்கள், அமைச்சர்கள் ஈடுப்ட்டிருப்பார்கள். ஆனால் தவெக விஷயத்தில் அப்படி யாரும் கிடையாது. யாரும் இருக்கவும் முடியாது. ஏனென்றால், இது ஒற்றை நபரை முன்னிறுத்திக் கட்டப்படும் கட்சி. அந்த ஒற்றை நபருக்குக் கீழும் சரி, சமமாகவும் சரி, யாரையும் வைத்திருக்கவோ, வளர்த்தெடுக்கவோ சிந்தனையே இல்லாத கட்சிதான் தவெக. அப்படி கீழ்மட்டத் தலைவர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் தவெகவில் அப்படிக் கட்டுப்படுத்தக்கூடியவர்களும் இல்லை, கட்டுப்படுத்தக்கூடிய பேச்சுத்திறனும் ஆளுமையும்கூட இல்லை.
இது திமுக சதியா?
நைட்டே வந்து இடம் புடிச்சுட்டோம் என்கிறான் ஒருவன். ஆறேழு மணி நேரம் நகராமல் – நகர்ந்தால் இடம் போய்விடுமோ என்பதற்காக சோறு தண்ணீர் இல்லாமல் இருந்த இடத்திலேயே காத்திருந்திருக்கிறது கூட்டம். அப்படியே விஜய் வந்து இவர்கள் அவரைப் பார்த்து விட்டாலும் அதில் என்ன சாதனை இருக்கிறது? மனைவியையும் மகளையும் பறிகொடுத்த ஒருவரின் வீடியோ பார்த்தேன். மனைவி கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவர் கொடுத்திருக்கிறார். எவ்வளவு நேரமானாலும் பாத்துட்டுதான் வருவோம் என்கிறார்கள். இதைத் தற்குறிக் கூட்டம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?
ஏழெட்டு மணி நேரம் ரசிகர்களைக் காத்திருக்க வைத்தது திமுகவா?
நாங்கள் கேட்ட இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் அசம்பாவிதம் என்று சிலர் கிளப்பி விட்டிருக்கிறார்கள். தவெக காவல்துறைக்குக் கொடுத்த விண்ணப்பம், உண்மையைத் தெளிவாக விளக்கி விட்டது. பத்தாயிரம் பேர் வருவார்கள், இவ்வளவு இடம் போதும் என்று தமது கட்சியின் பொறியாளர் சொன்னதாக அதில் எழுதியிருக்கிறது. ஆனால், வந்தது 25 ஆயிரம் பேர் என்கிறார்கள். கட்சிக் கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கணிக்கக்கூட முடியாதவர்கள் என்ன அரசியல் சாதனை செய்யப்போகிறார்கள்?
சரி, இதுவரையான பிரச்சாரக் கூட்டங்களில் விஜய் என்னதான் அரசியல் பேசினான் என்று பார்த்தால்…
என்ன சிஎம் சார்… மிரட்டிப் பாக்கறீங்களா
அதுக்கெல்லாம் பயப்படற ஆளு இல்லே சார்
சும்மா அதிருதில்லே….
எங்கே செஞ்சுதான் பாருங்களேன்…
இந்த ரீதியில் தனது திரைப்பட வசனங்களின்பாணியில் வெறும் வாய்ச்சவடால்களையும், தற்குறிகளை உசுப்பிவிட்டு கைதட்டல் பெறும் வாசகங்களையும் மட்டுமேதான் உதிர்த்து வந்திருக்கிறான். அது அவனுடைய போதாமை. அவனுக்கும் அரசியல் தெரியாது, கூட இருப்பவர்களுக்கும் தெரியாது.
இப்படி வாய்ச்சவடால் பேசி உசுப்பி விட்டு தற்குறிகளாகவே வைத்திருப்பதற்கு திமுக என்ன செய்யும்?
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் குடித்துவிட்டு வீசிய பாட்டில் நீருக்கும், தின்றுவிட்டு வீசிய பழத்துக்கும் அன்றைய ரசிகர்கள் அடித்துக் கொண்டதாக செய்திகள் உண்டு. அது ரசிகர்களை முடடாள்களாகவே தொடர்ந்து வைத்திருப்பதற்கான உத்தி. படிப்பறிவில்லாத, எப்போதுமே நல்லவராகவே நடித்து தன் பிம்பத்தைக் கட்டியமைத்துக் கொண்ட எம்ஜிஆர் நிஜவாழ்விலும் நல்லவர் என்று நம்பிக் கொண்டு பின்னே சென்ற படிப்பறிவில்லாத ரசிகர்கள் அவர்கள். அதே பாணியை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்ப்பித்து கழுத்தில் போட்ட கொடியைத் தூக்கி எறிவது, தண்ணீர் பாட்டிலைத் தூக்கி எறிவது, எல்லாம் தனது ரசிகர்களைக் கேவலப்படுத்துவது என்றுகூடப் புரியாதா? வீசப்பட்ட தண்ணீர் பாட்டிலுக்காக அடிதடி நடந்திருக்கிறது.
இதில் திமுகவின் சதி என்ன?
தடுப்பு வேலிகளை உடைக்கிறார்கள். நாற்காலிகளை உடைக்கிறார்கள். எவர் வீட்டுக் கூரையிலும் ஏறுகிறார்கள், மரங்களில் ஏறுகிறார்கள், மின் கம்பங்களில் ஏறுகிறார்கள், இதுதான் என்று இல்லாமல் உயரமாக நிற்க எது வசதியான இடமோ அங்கெல்லாம் கூட்டமாக ஏறுகிறார்கள். எதற்காக? விஜய் என்ற தங்கள் நாயகனைப் பார்ப்பதற்காக. ஒரு போட்டோ எடுத்து விட வேண்டும் என்பதற்காக. பார்க்கும் வரை பின்னாலேயே போவார்கள். நேற்று ஊர்வலம் போகும்போது விஜய் தன் வாகனத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டதாகவும், வெளியே வந்த ரசிகர்களைப் பார்த்திருந்தால் பார்த்துவிட்ட கூட்டம் கலைந்து போயிருக்கும் என்றும் தவெகவில் இருக்கும் ஒருவரே ஊர்வலத்திலிருந்து போட்ட வீடியோவும் வந்திருக்கிறது.
இதில் திமுக சதி என்ன இருக்கிறது?
பேசிக் கொண்டிருக்கும்போதே நெரிசலும் உயிரிழப்பும் ஆரம்பமாகி விட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறான் என்பதற்கும் வீடியோ வந்து விட்டது. மயங்கிய அல்லது உயிரிழந்த ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டிருக்கும்போதும் வசனம் பேசிக் கொண்டிருக்கிறான். இவன் சைக்கோ அல்லாமல் வேறென்ன? பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் வந்தபோது ஆம்புலன்ஸ்களை தற்குறிகள் தாக்கியிருக்கிறார்கள். (எடப்பாடி புண்ணியம்)
இதில் திமுக சதி என்ன இருக்கிறது?
சொன்னதைவிட கூட்டம் அதிகமாக வந்திருந்தால் அவர்களை அனுமதித்திருக்கக்கூடாது. நிர்வாகம் கோட்டை விட்டுவிட்டது. காவல்துறை தடுத்திருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள்.
இந்த சம்பவத்திலும், பொதுவாகவே தவெக நிகழ்வுகளிலும் காவல்துறை மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதை உறுதியாகச் சொல்வேன். திருச்சி விமானநிலயத்தில் தற்குறிகள் நடந்து கொண்ட நடத்தைக்கு தடியடி நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால், தறிகெட்ட கூட்டத்தைத் தடுக்க நினைத்தால் அது வன்முறையாக வெடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். கரூரிலும் அதுவேதான் நடந்திருக்கிறது. காவல்துறை அதிகாரி, தொண்டர்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று தவெக நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவும் வந்திருக்கிறது. மயக்கமடைந்தவனுக்கு காவலர் ஒருவர் தன் கர்சீப்பை வைத்து விசிறி விடும் வீடியோவும் வந்திருக்கிறது. இவையெல்லாம் திட்டமிட்டு எடுத்த வீடியோக்கள் அல்ல. யாரோ தற்செயலாக எடுத்த வீடியோக்கள். உயிரிழப்பு நடந்த இடத்தில் இருந்தது வாதநாராயணன் மரம் போலத் தெரிகிறது. அது விரைவாக வளரக்கூடிய வெறும் நிழலுக்காக வளர்க்கப்படும் மரம். வலுவற்றது. அதில் ஏறி, மிகப்பலவீனமான ஒரு கூரையின்மேலும் ஏறி கீழே விழுந்து, கலவரமடைந்த மக்கள் நெரிசலுக்கு ஆளாகித்தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு கரூர் நிர்வாகத்தையோ காவல்துறையையோ குறைசொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க தற்குறிகளின் தவறு. அந்தத் தற்குறிகளின் தலைமைத் தற்குறிகளின் தவறு.
அவர்களை அரசியல் மயப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அது நல்ல கருத்து. ஆனால் ஆதங்கத்தால் எழும் கருத்துதானே தவிர, அவர்களை அரசியல்மயப்படுத்துவது சாத்தியமே கிடையாது. அது வெறும் ரசிகக் கும்பல். அதுவும்கூட திரைப்படக் கலை சார்ந்த ரசனைகொண்டதல்ல. திரைப்படக் கதாபாத்திரத்தின் அதிசாகசச் செயல்களை உண்மை என்று நம்பும் முட்டாள் கும்பல். அது அரசியல்மயமானால் தற்குறிகளாக தவெகவின் பின்னால் போகாது. தெளிவுபெற்று வேறு பக்கம் போய்விடும். தலமைக்கே அரசியல் தெளிவு கிடையாது. எனவேதான் அதை அரசியல்மயப்படுத்தும் சிந்தனையும் கட்சித் தலைமைக்குக் கிடையாது.
எத்தனையோ கட்சிகள் ஊர்வலங்களையும் பேரணிகளையும் நடத்துகின்றன. ஆனால் எந்த ஏற்பாடும் இல்லாமல், தன்னிச்சையாக வந்து செல்லும் தற்குறிகளை தன்னிச்சையாகவே நடந்துகொள்ளச் செய்யும் ஒரே கட்சி தவெகதான்.
அதனால்தான் நீதிமன்றமே தலையிட்டு பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தது. அந்த நிபந்தனைகள் எதுவும் செயல்படுத்த முடியாதவை கிடையாது. செயல்படுத்தும் திறன் அந்தக் கட்சிக்கு இல்லை என்பதுதான் உண்மை.
எனவே, அடுத்த நிகழ்வை எப்படியோ நடக்கட்டும் என்று தமிழ்நாடு அரசு விடவும் முடியாது. அனுமதிக்க மறுக்கவும் முடியாது. எனவே, நீதிமன்றத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும். அப்படியானால் நீதிமன்றம் இன்னும் சில நிபந்தனைகளை விதிக்கலாம்.
அதனால்தான் தவெக விக்டிம் கேம் ஆடப் பார்க்கிறது.
நீதிமன்றத்தை, கவர்னரை நாட முனைகிறது.
தன்னுடைய குறைகளை பரிசீலனை செய்ய முனையாமல் நழுவுகிறது.
இனி திமுக மீது, தமிழ்நாடு அரசின்மீது பழியைப் போடப் பார்க்கும்.
இதற்கு திமுகவின் எதிரிகளுடன் கைகோக்க முனையும்.
அடுத்து அது எங்கே கொண்டு போய் விடும் என்பதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கி விட்டன.
பி.கு.: தவெகவின் தறிகெட்டத்தனத்திற்கு மற்றொரு முக்கியக் குற்றவாளி – மீடியா. அதைப்பற்றி எழுதி ஆகப்போவது ஏதுமில்லை.
— R. ஷாஜகான் (புதியவன்)
Comments are closed, but trackbacks and pingbacks are open.