அங்குசம் பார்வையில் ‘ரகு தாத்தா’ திரைப்படம் திரை விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘ரகு தாத்தா’ திரைப்படம் திரை விமர்சனம் ! – தயாரிப்பு: ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர். டைரக்ஷன் : சுமன் குமார். நடிகர்—நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, இஸ்மத் பானு, ஆனந்தசாமி, ஜெயக்குமார், ஆதிரா லட்சுமி. தொழில்நுட்பக் கலைஞர்கள் –ஒளிப்பதிவு; யாமினி யக்ஞமூர்த்தி, இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங் : டி.எஸ்.சுரேஷ், நிர்வாகத் தயாரிப்பாளர் : ரியா கொங்கரா. பி.ஆர்.ஓ. யுவராஜ்.
கதை 1970—க்குப் பிறகு நடக்குது. குறிப்பா எந்த வருசம்னு டைரக்டர் சொல்லல, நமக்கும் தெரியல. பிரதமர் இந்திராகாந்தின்னு ஒரு இடத்தில் வசனம் வருவதால், 1980—ன்னு நாம நினைச்சுக்கிட்டோம். வள்ளுவன் பேட்டை [ இந்த ஊர் எங்க இருக்குன்னு கேட்கக்கூடாது ]யில் கல்லூரி மாணவியாக இருக்கும் போதே இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் கயல்விழி பாண்டியன்[கீர்த்தி சுரேஷ்]. இவரது தாத்தா ரகோத்தமனும்[ எம்.எஸ்.பாஸ்கர் ] இந்தி எதிர்ப்பு போராளி. அந்த ஊரில் உள்ள ‘ஏக்தா சபா’ என்ற இந்தி சபாவையே இழுத்துமூடும் அளவுக்கு உணர்வுள்ள தமிழ்ப் போராளிகள்.
படித்து முடித்தவுடன் கயல்விழி பாண்டியனுக்கு அந்த ஊரில் இருக்கும் ‘மெட்ராஸ் செண்ட்ரல் பேங்க்’ கிளையில் வேலை கிடைக்கிறது. வங்கி மேலாளரின் இந்தி ஆதரவையும் எதிர்க்கிறார் கயல்விழி. அப்படிப்பட்ட கயல்விழிக்கு வங்கியில் புரமோஷன் கிடைக்க இந்தியில் பரிட்சை எழுத வேண்டிய கட்டாயம் வருகிறது. ஆனால் அதையும் மறுக்கிறார். இதற்கிடையே அரசாங்க பொறியாளராக இருக்கும் தமிழ்ச்செல்வன்[ ரவீந்திர விஜய் } கயல்விழியை விரும்புகிறார்.
கல்யாணமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தாத்தாவின் கடைசி ஆசைக்காக சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இதன் பின் தமிழ்ச்செல்வனின் அயோக்கியத்தனத்தை ஒரு கடிதம் மூலம் தெரிந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷ், புரமோஷனுக்காக இந்திப் பரிட்சை எழுத சம்மதிக்கிறார். கயல்விழி பாண்டியனான கீர்த்தி சுரேஷ் ஏன் இந்த முடிவை எடுத்தார்? இதான் படத்தின் கதை.
எழுத்தில் படிப்பதற்கு எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமா இருக்கு பார்த்தீகல்ல. ஆனா படத்தின் டைரக்டர் சுமன்குமார், இரண்டு மணி நேரம் நம்மள படுத்தி எடுக்குறாருங்க. இப்ப தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஏழு ஆண்டு, எட்டு ஆண்டுகள் ஒளிபரப்பாகுற நாடகங்கள் கூட தேவலைன்னு தோணுது. அந்தளவுக்கு நாடகத்தனம், சிறுப்பிள்ளைத்தனமான காட்சிகள், எரிச்சலைக் கிளப்பும் வசனங்கள்ன்னு கொலையா கொல்றாரு டைரக்டரு. கீர்த்தி சுரேஷ் சென்னையில் வளர்ந்த பெண் என்பதால், சுமன்குமார் வாயால் சொன்ன கதையை நம்பி ஏமாந்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்செல்லாம் இருக்கே க்ளைமாக்ஸ்.. அய்யய்யோ அந்தக் கொடுமையை எழுதுனா நமக்கு ரத்தக் கொதிப்பு எகிறிரும்.
படமே நாடகத்தனமா இருக்கு, இதுல நாம ஏன் மெனக்கெட்டு மியூசிக் போட்டுக்கிட்டுன்னு நினைச்சுட்டாரு போல ஷான் ரோல்டன். அந்தக் காலத்து நாடகத்துல ஆர்மோனியம், தபேலோ, பேங்கோஸ், பின்பாட்டு டைப்ல போட்டு ஃபில்லஃப் பண்ணிட்டாரு ஷான் ரோல்டன்.
மொத்தத்துல இந்த ‘ரகு தாத்தா’
போங்கப்பா..ஏய்..
-மதுரை மாறன்