அங்குசம் பார்வையில் ‘கிங்ஸ்டன்’
தயாரிப்பு : ‘ஜி ஸ்டுடியோஸ்’ & ’பேரலெல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ ஜி.வி.பிரகாஷ்குமார், உமேஷ் கே.ஆர்.பன்ஸல், பவானிஸ்ரீ. டைரக்ஷன் : கமல் பிரகாஷ். நடிகர்-நடிகைகள் : ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இ.குமரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி,ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன்,பிரவீன், ஒளிப்பதிவு : கோகுல் பினோய், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : எஸ்.எஸ்.மூர்த்தி, எடிட்டிங் : ஷான் லோகேஷ், ஸ்டண்ட் டைரக்டர் : திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் டிசைனர் : பூர்ணிமா ராமசாமி, பிராஸ்தட்டிக் மேக்கப் : பிரதீப் விதுரா, வெளியீடு : ‘கலர் ஃபிரேம்ஸ்’ அழகப்பன். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
தூத்துக்குடி அருகே உள்ள தூவத்தூர் கடல் கிராமம் தான் கதைக்களம். 1982-ல் அந்த கிராமத்தின் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கப் போனால் கொத்துக் கொத்தாக செத்து கரை ஒதுங்குகிறார்கள். இந்த கோர சம்பவம் தொடர்ச்சியாக நடக்கவே, ஏதோ கடல் பேயின் அமானுஷ்ய சக்தி தான் இதற்குக் காரணம் என மக்கள் நம்பி பீதிக்குள்ளாகிறார்கள். எனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என அரசாங்கம் அறிவிப்புப் பலகையை நட்டு, கடலோரம் தடுப்பு வேலிகளையும் அமைத்துவிடுகிறது. அந்தக் கடல் பேயின் அட்டகாசம் விலகியதா ? மக்கள் நிம்மதியடைந்தார்களா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கிங்ஸ்டன்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதே பேய் பீதியும் தடுப்பு வேலிகளும் தொடர்கதையாகவே இருப்பதால், [2025] மீன்பிடி பிழைப்பு இல்லாமல் தவிக்கும் மக்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தின் ராஜாவாக இருக்கும் தாமஸிடம் மீன்பிடி வேலைக்குப் போகிறார்கள் தூவத்தூர் மக்கள். தூவத்தூரிலிலிருந்து 60 கி.மீ.யில் இருக்கும் தூத்துக்குடி கடல்பகுதியில் வேலையைக் காட்டாத பேய், அந்த ஊரில் மட்டும் வேலையக் காட்டுகிறது? இதற்கு இடைவேளை வரை சுவாரஸ்யமாகவும் இடைவேளைக்குப் பின் ஓரளவு நம்பகத்தன்மையுடன் திரைக்கதையை நகர்த்தி சமாளித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ்.
தாமஸிடம் வேலைபார்க்கும் மீனவ இளைஞன் கிங் [எ] கிங்ஸ்டனாக ஜி.வி.பிரகாஷின் உடை, செம்பட்டை பாய்ந்த பரட்டைத்தலை [ சில சீன்களில் கருப்பு முடியுடன் வருகிறார். டைரக்டர் இதைக் கவனிக்கவில்லையா? அல்லது ஹேர்டிரெஸ்ஸரின் கேர்லெஸ்ஸா? எனத் தெரியவில்லை ] அச்சு அசல் தூத்துக்குடி வட்டாரப் பேச்சு, பணம் தான் பிரதானம் என்ற பாலிஸியுடன் அலைவது, தனது மக்களின் பீதிக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரிந்ததும் கடல் களத்தில் இறங்குவது, என நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஜி.வி.பி.க்கு நடிப்பில் இது 25—ஆவது படம். அதே நேரம் இரண்டு பாடல்களில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருப்பவர், பின்னணி இசையில் பல சீன்களில் ஓவராக அலறவிட்டுவிட்டார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஹீரோயின் திவ்யபாரதிக்கு இடைவேளை வரை அவ்வளவாக வேலை இல்லை. இடைவேளைக்குப் பின்பு கடைசி முக்கால் மணி நேரம், கடல் பேய்களுடன் ஆக்ஷன் சீக்வென்ஸில் மிரண்டு மிரட்டியிருக்கார்.
தூத்துக்குடி தாமஸாக வரும் சாபுமோன் அப்துசாமத், நல்ல ஹைட்டும் வெயிட்டுமாக வில்லன் ரோலுக்கு கரெக்டா மேட்சாகியிருக்கார். நல்ல செலக்ஷன். என்ன ஒண்ணு சாலமனுக்கு [ சேத்தன் ] இரண்டு ஃப்ளாஷ்பேக், இரண்டு முகம், ஸ்டீபன் போஸுக்கு [ அழகம் பெருமாள்] இரண்டு ஃப்ளாஷ்பேக், இரண்டு முகம் இதெல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் கடலில் தத்தளிக்கும் கிங்ஸ்டனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என்னோட ஃப்ளாஷ்பேக்கையும் கேளுன்னு தாமஸும் தன்னோட ஃப்ளாஷ்பேக்கை சொல்றதப் பார்த்ததும் கடல் பேயை நாங்க பார்த்த மாதிரி தூக்கிவாரிப் போட்டுருச்சு டைரக்டரே..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தில் ஆகச்சிறந்த உழைப்புப் பங்களிப்பை அளித்திருப்பது ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி தான். கடல் செட்டும் போட்டும் அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரமிப்பிற்கு உயிர் கொடுத்து திரையில் காட்சியாக காட்ட கேமராமேன் கோகுல் பினோயும் விஷுவல் எஃபெக்ட்ஸ் டீமும் ரொம்பவே பாடுபட்டிருக்கிறார்கள். இந்த மூவருக்கும் இந்த மூவரின் உழைப்புடனும் கடல் அட்டை கடத்தல், தங்கப்புதையல், கடல் அடக்கம் மூலம் பயமுறுத்தும் பேய் இவற்றுடனும் களம் இறங்கிய டைரக்டர் கமல் பிரகாஷுக்கும் இவர்களுக்கு கைகொடுத்து படத்தைத் தயாரித்த ஜி.வி.பிக்கும் பாராட்டுக்களை தாராளமாக சொல்லலாம்.
க்ளைமாக்ஸில் கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் போட், அதில் பிராஸ்தட்டிக் மேக்கப் பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொடூரமாக தாக்குவது இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் போனதால், ரசனையில் லைட்டான சலிப்பை ஏற்படுத்திவிட்டான் இந்த ‘கிங்ஸ்டன்’. இருந்தாலும் ஜி.வி.பி.யின் முதல் தயாரிப்பை மனமுவந்து வரவேற்போம்.
— மதுரை மாறன்.