குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம்!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது. அந்த குரங்கு அருகே இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் வளர்த்த 20 நாட்களே ஆன பூனை குட்டி ஒன்றை குரங்கு தூக்கிச் சென்றது. இதைகண்டு இந்த குட்டியின் தாய் பூனை அழுகையுடன் சத்தத்தை எழுப்பி குடும்பத்தினரை எச்சரித்துள்ளது. அப்போது பூனை தொடர்ந்து சத்தம் போடுவதை குடும்பத்தினர்கள் கவனித்து வெளியில் வந்து பார்த்தபோது, குரங்கு கையில் அந்த பூனை குட்டி இருந்துள்ளது.
அந்த குரங்கை பார்த்தப்படி தாய் பூனை அழுது சத்தமிட்டிருந்திருக்கிறது. அப்போது அருகில் இருந்த மக்கள் சுற்றி திரண்டதால், குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு நகரத் தொடங்கியது. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவும் குரங்கை பார்த்து தாய் பூனை சத்தமாக அழுது கொண்டிருந்திருக்கிறது. அந்த பூனை குட்டியை மீட்க கிராம மக்கள் பல முயற்சிகளை செய்துள்ளனர்.
அப்போது பசி மற்றும் அங்கு ஏற்பட்ட மழையில் நனைந்து பூனை குட்டி அழும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அந்த உள்ளூர் தன்னார்வலர்கள் தலைமையில் மீட்பு முயற்சிகளும் மணிக்கணக்கில் நடந்தது. ஆனால் அந்த குரங்கு மேலும் கிளைகளை தாவியதால் அதனை பிடிக்க முடியவில்லை, பூனை குட்டியையும் மீட்க முடியவில்லை. எனினும் பூனை குட்டி திருப்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் கிராமவாசிகள் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர்.
— மு. குபேரன்.