கொடநாடு: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி
“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்.
ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப்பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்த கும்பல், காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொன்றுவிட்டு, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 24 மணிநேரமும் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு, ஒவ்வொரு கேட்டிலும் காவலாளி போன்ற கண்காணிப்புகளை மீறி நடந்த கொலை, கொள்ளை அங்கிருந்த எந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகவில்லை என்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை உதவியுடன் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதை 3 நாட்களில் போலீசார் கண்டறிந்தனர். ஆனால், போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்ட ஓரிருநாளில் அதாவது 2017 ஏப்ரல் 28-ம் தேதி, கொலை, கொள்ளைக்கு மூளையாக கருதப்பட்ட கனகராஜ், சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார். மறுநாள் அதிகாலையில், கனகராஜின் கூட்டாளியாக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த சயன், கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் சயனின் மனைவி வினுப்பிரியா மற்றும் மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் குமார் என்ற வாலிபர் 2017 ஜூலை 3-ம் தேதி கோத்தகிரியில் தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்தடுத்து கொடநாடு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி விசாரணையை தொடர்ந்த போலீசார், கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் சிலரை கைது செய்து வழக்கை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த விவகாரத்தில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது டெஹல்கா. கொடநாடு கொலையில் தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்தபடிதான் இருக்கிறது. 24 மணிநேரமும் சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு, ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் காவலர்கள் என பாதுகாப்பு மிகுந்த கொடநாடு எஸ்டேட்டில் ஒரே ஒரு காவலாளியை தாக்கிவிட்டு 11 பேர் கொண்ட கும்பல் நுழைவது சாத்தியமா?கொலை, கொள்ளை நடந்தபோது, கொடநாடு எஸ்டேட் முழுவதும் சிசிடிவி செயல்படாமல் போனது எப்படி?
கொள்ளை போன ஆவணங்கள் பற்றி போலீசார் வாய் திறக்காதது ஏன்? கொலை, கொள்ளை வழக்கை போலீஸ் நீர்த்துப்போகச் செய்வது போலீஸ் திட்டமா? கொலை, கொள்ளை நடந்த நான்கே நாட்களில் முதல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தது எப்படி? கனகராஜ் இறந்த சில மணிநேரங்களில் சயன் விபத்தில் சிக்கியது எப்படி? சிசிடிவி குறித்த விசாரணை தொடங்கிய சில வாரங்களில் கொடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்ரேட்டர் இறந்தன் பின்னணி என்ன? சிசிடிவி ஆப்ரேட்டர் தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? – இப்படி கொடநாடு மர்மங்களின் பின்னணியில் பல எப்படி வந்தபடியே இருக்கிறது.
இதுவரை இந்த விவகாரத்தில் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்திருக்கிறார்.
‘என் மீதான குற்றச்சாட்டுக்கள் எல்லாமே உண்மைக்குப் புறம்பானவை. இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுத்துவிட்டேன். விசாரணையில் உண்மைகள் வெளிவரும். இதில் யாரெல்லாம் பின்புலமாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்..’ என்று சொன்னபோது எடப்பாடியின் வழக்கமான சிரிப்பு மிஸ்ஸிங்.”
”இதில் யாரெல்லாம் பின்புலமாக இருந்தார்களோ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார் அல்லவா.. அவர் குறிப்பிடுவது தினகரனைத்தான் என்று சொல்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.
‘ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பம்தான் என எடப்பாடி தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக அமைச்சர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். எடப்பாடிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதங்களாக நடந்த ஆபரேஷன் தான் இது. எடப்பாடி மீது இப்போது சொல்லப்பட்ட புகார்களின் பின்னணியில் தினகரன் இருக்கிறார். டெல்லியில் இருந்து டெகஹல்கா டீம் கொடநாடு வந்தது, இப்போது எடப்பாடி மீது புகார் சொன்னது அத்தனையின் பின்னணியிலும் தினகரன் இருக்கிறார். எடப்பாடியை இந்த விவகாரத்தில் சிக்க வைக்க தினகரன் என்னவெல்லாம் செய்தார் என்பதை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிட எடப்பாடி திட்டமிட்டு வருகிறார்.
எடப்பாடி தொடர்பாக ஒரு பரபரப்பான செய்தி மாலையில் வரப்போகிறது என்பதை தினகரன் ஆதரவாளர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் காலையிலேயே சொல்லி இருக்கிறார். டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த சிலரை தினகரன் ஆட்கள் விமான நிலையத்தில் இருந்து கொடநாடு அழைத்து போனது வரை அத்தனைக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. முழுக்கவே இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்பட்டது. அதை மக்கள் மன்றத்தில் நாங்களும் எடுத்து வைப்போம்’ என்று சொல்கிறார்கள்”