போதைப் பார்ட்டியால் சிக்கியவர்களும், சிக்கியவர்களால் சிக்கப் போகிறவர்களும்! குலை நடுக்கத்தில் கோலிவுட்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பையின் கடல்பகுதியில் மிகவும் ஆடம்பரமான சொகுசுக் கப்பலில் [ கப்பலின் ஒரு நாள் வாடகையே 2 கோடி ரூபாய்] தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது நெருங்கிய நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் உயர்ரக ‘ட்ரக்’ விருந்து நடத்தினார். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். விருந்து நடந்து கொண்டிருந்த நள்ளிரவில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் படை, அதிரடியாக கப்பலுக்குள் புகுந்து ஆர்யன் கான் உட்பட ஒன்பது இளைஞர்களையும் இளம் பெண்களையும் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. போலீசின் எஃப்.ஐ.ஆரில் ஆர்யன் கானின் பெயர் தான் ஏ.1 ஆக இருந்தது.

15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, விரிவான விசாரணையைத் துவங்கியது ‘நார்கோட்டிக் கண்ட்ரோல் ஸ்குவாட்’. கைதானவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, மேலிடத்தில் தனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து கெஞ்சிக் கதறினார் ஷாருக்கான் பேச வேண்டியதை பேசினார், கொடுக்க வேண்டியதை கொடுத்தார். இதனால் ஐந்தாவது நாளிலேயே மீண்டும் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்திய போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் பெயர் குற்றப்பத்திரிகையில் ஒன்பதாவது இடத்திற்கு இடம் மாறியது.
“நாங்கள் விசாரித்த வரையில் ஆர்யன் கான் உட்பட பிடிபட்ட ஒன்பது பேருக்கும் இந்த ‘ட்ரக்’ விருந்தில் சம்பந்தமில்லை என்பது தெரியவருகிறது. அங்கு ‘ட்ரக்’ சப்ளையே நடக்கவில்லை” என பல்லைக் காட்டியது போலீஸ் படை. இதனால் அனைவரையும் விடுவிக்க வேண்டிய சூழலுக்குள்ளானது நீதிமன்றம்.
மொத்தம் 30 கோடி ரூபாய் பணப்புழக்கம் நடந்தது அம்பலத்திற்கு வந்தது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் ‘ட்ராக்’ மாறியது சந்தி சிரித்தது.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள ஃபைவ் ஸ்டார் பஃப் ஒன்றில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘ட்ரக்’ பார்ட்டி கொடுத்து சிக்கினார் நடிகை சஞ்சனா கல்ராணி. சிலபல தமிழ்ப்படங்களில் நடித்து, நடிகர் ஆதியை கல்யாணம் பண்ணியுள்ள நடிகை நிக்கி கல்ராணியின் தங்கச்சி தான் இந்த சஞ்சனா கல்ராணி. ஷாருக்கானின் செல்வாக்கிற்கு ஆர்யன் கான் ஒரே வாரத்தில் கேஸிலிருந்து விடுதலையானார். ஆனால் செல்வாக்குப் புள்ளிகளைப் பிடிக்க சஞ்சனா கல்ராணிக்கு ரூட் தெரியாததால் 15 நாட்களில் வெளிவந்தார். இது கூட நிக்கி கல்ராணியின் தொடர்புகளால் தான் முடிந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனார் வில்லன் நடிகர் மன்சூரலிகானின் மகன் துக்ளக் அலிகான். இப்போது தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கி சென்னை புழல் ஜெயிலில் உள்ளார். ஸ்ரீகாந்த் ‘அடிக்ட்’டான ‘ட்ரக்’கின் பெயர் கோக்கைன். ஒரு கிராம் 12 ஆயிரம் என்கிறார்கள். ஆனால் ஆர்யன் கான் யூஸ் பண்ணிய ‘ட்ரக்’கின் விலை ஒரு கிராம் 1 லட்ச ரூபாய். [அப்படின்னா 30 கோடி என்ன 50 கோடி கூட புழங்கியிருக்கும்].
ஸ்ரீகாந்துக்கு ‘ட்ரக்’ சப்ளை பண்ணிய அதிமுக ஐடி விங்கின் பிரசாத்தும் இப்போது புழல் ஜெயிலில் தான் இருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் நடந்த அடிதடி வெட்டுக்குத்து ஆள் கடத்தல் வழக்கில் தான் பிரசாத்தும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியிலிருந்து அதிமுகவிற்குத் தாவிய அஜய் வாண்டையார் என்பவரும் புழல் ஜெயிலில் உள்ளனர். இப்போது ‘ட்ரக்’ வழக்கிலும் மேற்படி இருவரையும் சேர்க்க முடிவு செய்துள்ளது போலீஸ்.

இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து கோக்கைன் வாங்கிய நடிகர் கிருஷ்ணாவை போலீஸ் நெருங்குவதையடுத்து தலைமறைவாகிவிட்டார். இந்த கிருஷ்ணா அஜீத்தின்’பில்லா’ பட டைரக்டர் விஷ்ணுவர்த்தன் தம்பி.
இந்த இரண்டு நடிகர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து ‘ட்ரக் யூஸர்ஸ்’ நடிகர்களும் நடிகைகளும் கதிகலங்கிப் போயுள்ளனர். இதில் மிக முக்கியமானவர் ‘கான்ஃபெரன்ஸ்’ நடிகர். சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் தான் இவரின் ‘ட்ரக்’விருந்து ஸ்பாட். இவர் நடத்தும் ‘ட்ரக்’ பார்ட்டியில் கலந்து கொள்ளும் ஸ்பெஷல் கெஸ்ட் எல்லோருமே இவரைவிட பத்து-பதினைந்து வயது மூத்த நடிகைகள் தான். இவர் என்றால் அவர்களுக்கும் அவர்கள் என்றால் இவருக்கும் அலாதிப் பிரியமாம்.
இந்த அலாதி பிரியம் வலையில் சிக்கியவர்கள் பவர்ஃபுல் நேஷனல் பார்ட்டியின் சீனியர் நடிகை, இவருக்கு எல்லாமுமாக இருக்கும் டான்ஸ் பெண்மணி, இப்பெண்மணி மூலம் டெல்லி லிங்க்கில் இருக்கும் ‘விடோ’ நடிகை, நேஷனல் பார்ட்டியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த மாஜி நடிகைகள், அமெரிக்காவில் ஒரு கணவர், சென்னையில் ஒரு கணவர் என ஃப்ரீடமாக இருக்கும் வாய்க் கொழுப்பு சங்கி நடிகை, இசையை கணவனாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை, அரசியல் கட்சி ஒன்றை நள்ளிரவில் ஜாயிண்ட் பண்ணியவரின் மகள், இளம் மியூசிக் டைரக்டர் ஒருவர், இப்படி ஏகப்பட்ட கோலிவுட் பிரபலங்கள் ஸ்ரீகாந்த் சிக்கியதால் குலை நடுங்கிப் போயுள்ளனர்.
— கரிகாலன்