அங்குசம் பார்வையில் ‘கொம்புசீவி’
தயாரிப்பு: ‘ ஸ்லைடர் சினிமா’ முகேஷ் த.செல்லையா, டைரக்டர்: பொன்ராம். ஆர்டிஸ்ட்: சரத்குமார், ஷண்முக பாண்டியன், தாரனிகா, சுஜித் சங்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், கல்கி ராஜா, பாகுபலி பிரபாகர், கஜராஜ், ஜார்ஜ் மரியான், தருண் கோபி, ராமச்சந்திரன். ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம், இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்: தினேஷ் பொன்ராஜ், ஸ்டண்ட்: சக்தி சரவணன் & ஃபீனிக்ஸ் பிரபு, ஆர்ட் டைரக்டர்: சரவணன் அபிராமன், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வைகை டேம் கட்டுமானப்பணியின் போது ஆண்டிப்பட்டியைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தங்களின் வாழ்வாதாரத்திற்கும் வயிற்றுப்பாட்டுக்கும் ரொம்பவே திண்டாடிய அம்மக்கள், டேமில் தண்ணீர் இல்லாத போது, அங்கே விவசாயம் செய்தனர், இப்போதும் செய்து வருகின்றனர். மழைக்காலத்தில் பெரு மழை பெய்தால் பயிர்களெல்லாம் தண்ணீரில் மூழ்கிவிடும். எனவே தங்களின் பிழைப்புக்கு சாராயம் காய்ச்சுதல், கஞ்சா பயிரிட்டு வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு கடத்தி தங்களின் வயிற்றைக் கழுவி, பிள்ளைகளை படிக்க வைத்து, செய்முறையும் செய்வார்கள்.
தண்ணீர் வற்றினால் மீண்டும் விவசாயம், மழை பெய்தால் மீண்டும் சாராயம், கஞ்சா இப்படித்தான் அம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சங்கடங்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
இதான் இந்த ‘கொம்புசீவி’யின் முக்கியமான, அழுத்தமான கதை. வாழ்வாதாரத்திற்காக அந்தப் பகுதி மக்கள் படும் இன்னலை எவ்வளவு அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் டைரக்டர் பொன்ராமோ தனது பெர்மெனெண்ட் பிராண்டான காமெடி டிராக்கில் கதை சொல்ல முயற்சித்து, நம்மை ஓவராக சீவிவிட்டார். சீரியஸ் சீன்களை காமெடியாக்கி, காமெடி சீன்களை சீரியஸாக்கி என பொன்ராம் நடத்திய விபரீத விளையாட்டு ஒட்டு மொத்தப் படத்தையும் ரசிக்கவிடாமல் ரொம்பவே இம்சித்துவிட்டது.
சின்ன வயசுலேயே பெற்றோரை இழந்த பாண்டியை [ ஷண்முக பாண்டியன்] எடுத்து வளர்க்கிறார் ஒத்தப்புலி [ சரத்குமார்]. “மாப்ளே” என பாசம் காண்பிக்கும் சரத், “மாமா” என அன்பு செலுத்தும் ஷண்முக பாண்டியன். இந்த இருவரும் சேர்ந்து படம் முழுக்க கஞ்சா கடத்துகிறார்கள், போலீஸ் ஸ்டேஷனை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். அவ்வப்போது பாடல் சீன்களில் நடந்து வருகிறார்கள்.
இந்த இருவரில் சரத் தான் டாப். ஃபைட் சீன் ஆரம்பிக்கும் முன்னால “தம்பி உன்னோட பிளட் குரூப்” என்னன்னு ஜாலியாக கேட்டு அதன் பின் அடிபின்னுவது செம ரகளை. அதே போல் தேனி வட்டார பாஷையிலும் மனுஷன் வெளுத்து வாங்குறார். நம்ம கேப்டன் மகன் ஷண்முக பாண்டியனுக்குத் தான் நடிப்பு இன்னும் வசப்படமாட்டேங்குது. அதான் நமக்கும் வருத்தமா இருக்குது. “நாட்டாமை’ டீச்சர் ராணியின் மகள் தாரனிகா தான் ஹீரோயின். ஒத்தப்புலியையும் பாண்டியையும் அடக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரா வர்றார். போலீஸ் உடையிலும் நடையிலும் மிடுக்கு இல்ல, நடிப்பில் சரக்கும் இல்ல. பத்து கிலோ கஞ்சா வாங்குறதுக்காக ஷண்முக பாண்டியனுடன் கலர் கலரான காஸ்ட்யூமில் ஊர் ஊராகப் போய் டூயட் பாடுவதுடன் அவருக்கு வேலை முடிஞ்சு போச்சு.
இடைவேளைக்குப் பிறகு படம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் வரை சரத், ஷண்முக பாண்டியன், முனீஸ்காந்த், கல்கி ராஜா கூட்டணி ஒரு லாரியில் அஞ்சாயிரம் கிலோ கஞ்சாவை ஏத்திக்கிட்டு ஆந்திராவுக்கு கடத்தும் ஒரே சீன் தான். அதை பிச்சுப் பிச்சுக்காட்டி நம்மை டென்ஷனாக்கிட்டாரு டைரக்டர் பொன்ராம். இசை யுவன் சங்கர் ராஜாவாம். அவருக்கு என்னாச்சுன்னு தெரியல? பாடல்களும் சொதப்பி, பேக்ரவுண்ட் ஸ்கோர்லயும் ஓவரா அலறவிட்டு நம்ம காதுகளை பஞ்சராக்கிட்டாரு இளைய இசைஞானி.
’கொம்புசீவி’—ஜாக்கிரதை
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.