கனவுகளும் நீதியும் கவுசல்யாவின் பயணங்கள்
கனவுகளும் நீதியும் கவுசல்யாவின் பயணங்கள். ஆனால் அந்த பயணம் அவ்வளவு எளிது அல்ல. வசை சொற்கள், அவதூறுகள் , அவமானங்கள், நீசத்தனமான ஒடுக்குதல், ஆபாச பரப்புரைகள் என்று பல நெருக்கடிகளை சந்தித்து இருக்கிறார்.
கவுசல்யாவின் நீதி பயணத்தில் 2016 ம் ஆண்டு முதல் உடன் இருக்கிறேன்.நிறைய கற்று கொள்ளுகிறார்.தோல்வியை பாடமாக எடுத்து கொள்ளுகிறார்.எதிரிகளின் தாக்குதலை துணிச்சலுடன் எதிர் கொள்ளுகிறார்.பலவீனங்களை மனம் விட்டு அலசுகிறார்.பலத்தை இழக்காமல் இருக்க நேச சக்திகளை விரிவும் படுத்தி இருக்கிறார்.
மத்திய அரசு பணி .இதன் மூலம் நிறைய நெருக்கடிகளை கொடுத்தார்கள்.இந்த பணியால் தனக்கு பிடித்த சமூக நீதி களத்தில் செயல்பட முடியவில்லை. வேலையை விட போகிறேன் சார் என்றதும் பதறி விட்டேன். ஆயினும் அவளது முடிவு அவளது சுதந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த முடிவில் விளிம்பு நிலை சமூகங்களின் சுதந்திரமும் அடங்கி இருக்கிறது. முடிவினை பார்த்து எடு கவுசி என்றேன்.
வர்த்தகம் சுய பொருளாதாரம் அவளது கனவாக இருந்தது.அந்த கனவுக்கு சிறகு முளைக்க தொடங்கியது.
ஆறு மாதம் அழகு கலை குறித்த படிப்பினை கவுசல்யா கற்று கொண்டார்.இன்று ழ என்கிற பெயரில் அழகு நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது.அசந்து போனேன். மரபும் நவீனமும் கலந்த அழகு நிலையம் மிக அருமையாக இருந்தது.
tony and guy போன்ற சர்வதேசிய அளவிலான வடவமைப்பு. அண்ணல் அம்பேத்கர் , பன்மை தன்மை பொருளாதாரம் குறித்து அதிகம் பேசினார்.
அதனால்தான் பொருளாதாரத்தில் என்னுடைய ஆசான் அம்பேத்கர் என்று நோபல் பரிசு வாங்கிய அமிர்தியாசென் கூறினார்.
அதைத்தான் கவுசல்யா கையில் எடுத்து இருக்கிறார்.கவுசல்யா எடுத்து இருப்பது பொருளாதாரா நீதி. அவளது உழைப்பில் கிடைக்க கூடிய லாபத்தின் ஒரு பகுதியை மக்களுக்கும் சமூகத்திற்கும் கொடுக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது.
அந்த லட்சியத்தின் இலக்காக இன்று கவுசல்யாவிடம் ஒரு மாற்றத்தை கண்டேன்.வந்து இருந்த அணைத்து விருந்தினர்களுக்கும் கவுசல்யா புத்தர் சிலைகளை வழங்கினார். அறமும் அன்பும் நீதியும் அதன் அடையாளமாக வியாபித்து இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கேரளாவிலிருந்து வந்து இருந்த திரைப்பட கலைஞர் பார்வதி அவர்களுக்கு நிறைய நன்றி.
கவுசல்யாவின் உன்னதமான கனவுக்கு தோழமை பாராட்ட வந்து இருந்தார்.நீங்கள் வந்தது சந்தோசம் என்றேன்.
உண்மையில் எனக்குதான் சந்தோசம் என்றார். பத்திரிகையாளர் தான்யா அவர்கள் முயற்சியில் இந்த வருகை அமைந்து இருந்தது. தான்யா அவர்கள், அவர் சார்ந்து இருக்க கூடிய newsminutes இணைய இதழ் கவுசல்யா குறித்து 2016 ம் ஆண்டு முதல் தொடர்ந்து எழுதி கொண்டு வருகிறது.
அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள்,நலம் விரும்பிகள் திரண்டு இருந்தனர்.
கனவு மெய்ப்படும் கவுசி. வாழ்த்துக்கள் பா.
எவிடன்ஸ் கதிர்.