நடிகர்களின் சமூகநல உதவி உருட்டுகள் – அம்பலப்படுத்திய யூடியூபர் !
நடிகர்களின் சமூகநல உதவி உருட்டுகள் – அம்பலப்படுத்திய யூடியூபர் – டிஜிட்டல் மீடியாவில் பேசப்படும் எதுவொன்றையும் ஆராயாமல், அப்படியே உண்மை என்று நம்பி பலருக்கும் பரப்பப்படுகிற காலம். டிஜிட்டல் மீடியாவில் உள்வாங்கும் கருத்துக்கள், விமர்சனப்பூர்வமான அணுகுமுறையின்றி அப்படியே அவனது கண்ணோட்டமாகவே மாறிவிடுகிறது.
ராகவா லாரன்ஸ் என்றால் திரைப்பட நடிகர் என்ற அடையாளத்தைவிட, “அவரு இல்லாதவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பன்ற நல்ல மனுசன்”னு சொல்ற அடையாளம்தான் முன்ன வந்து நிற்கும். அதுபோலத்தான், கே.பி.ஒய். பாலா. வகை மாதிரிக்கு இவர்கள் இருவரின் தயாள குணங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் ”விளம்பர அரசியலை” தயவுதாட்சண்யமின்றி போட்டு உடைத்து, போலி பிம்பங்களை சுக்கு நூறாக்கியிருக்கிறார், யூடியூபர் நோவா.
நடுத்தரமான குடும்பப்பின்னணியிலிருந்து படித்து மென்பொறியாளராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் நோவா (புனைப்பெயர் ). தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியால்தான் உயர்கல்வியே படித்ததாக குறிப்பிடும் அவர், தனக்கு உதவிக்கரம் நீட்டிய அந்த தொண்டு நிறுவனத்தின் பெயர்கூட தமிழகத்தில் பலருக்கும் தெரியாத சூழலில், இவர்களது ஊடக வெளிச்சம் தன் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கிறார்.
இவர்களது தொண்டு நிறுவனம் குறித்தான தரவுகளோடு, சில முன்னணி யூடியூப் சேனல்களை அணுகியபோது அவர்களது பல்வேறு காரணங்களைக்கூறி புறக்கணித்ததாகவும் ; அதன்பிறகே, தனது நோவா சேனலில் தானே பேசிவிடுவதென முடிவெடுத்து அந்த வீடியவோவை வெளியிட்டதாகவும் கூறுகிறார்.
கடந்த இரண்டே மாதத்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கண்டிருக்கிற, ”உதவி உருட்டுகள்” என்ற தலைப்பில் வெளியான அந்த 13 நிமிட வீடியோ தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த காணொளியைக் கண்ட பலரும் “நான் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்” என்பதாக பாராட்டியதாக தெரிவிக்கிறார், நோவா. அதேசமயம், ராகவா லாரன்ஸ் தரப்பிலிருந்து அந்த வீடியோவை நீக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
அப்படி என்னதான் இருக்கிறது, அந்த வீடியோவில் … யூடியூபர் நோவா அனுமதியோடு அக்காணொளியின் சுருக்கமான எழுத்துப்பதிவு … இதோ!
நாலு கேமிரா வைக்கிறோம். நாலு ஆங்கிள்ல ஷூட் பன்றோம். ரெண்டு ட்ரோன் பைலட்ட ஆர்கனைஸ் பன்றோம். மூனு வீடியோ எடிட்டர்ஸ் வைக்கிறோம். இத எல்லாத்தையும் ஒரு புட்டேஜா கலெக்ட் பண்ணி ஒரு வீடியோவா போடுறோம். அவனுக்கு ஹெல்ப் பன்றோம். இதுக்கு பேரு, ஹெல்ப்பா? பப்ளிசிட்டியா?
முதலில் உதவி அப்படிங்கறது என்னனு முதல்ல புரிஞ்சிக்கோங்க. உதவி பண்றவங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். உதாரணத்தோட சொல்லனும்னா, ஏ அப்படிங்கிற நபர் யாருன்னு யாருக்குமே தெரியாது. ஆனா, கோயிலுக்கு பசியா வர்றவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறார்னு வச்சிக்கோங்க. அவர் பன்ற உதவி அவரோட மனநிம்மதிக்காக பன்றாருனு வச்சிக்கலாம்.
அதுவே, பி அப்டிங்கிற நபர் அதே கோவிலுக்கு உதவி பன்றாரு. ஆனா, அவருகூட ஒரு கேமிரா டீம். அந்த நபர் வரும்போது பிரம்மாண்ட வரவேற்புன்னு ஒரு பப்ளிசிட்டியோட உதவி பன்றாருனு வச்சிக்கோங்க. இதுல யாரு உண்மையிலேயே உதவி பன்றாங்கன்னு நினைக்கிறீங்க? அந்த பி நினைச்சிருந்தா கோவிலுக்கு பன்னின அந்த உதவிய யாருக்கும் தெரியாம கூட பண்ணியிருக்க முடியும். ஆனா, அதை ஏன் பன்னல? யோசிக்க மக்களே!
கடவுள் 1 லாரன்ஸ்:
லாரன்ஸ் அப்படி என்னவெல்லாம் ஹெல்ப் பன்னிட்டு வர்றாருனு தெரிஞ்சுகிறதுக்காக, இன்டர்நெட்ல சர்ச் பன்னி பார்த்தோம். அவருக்குனு தனியா வெப்சைட் இருக்கானு. ஆனா, அப்படி எந்த ஒரு வெப்சைட்டும் கிடையாது.
லாரன்ஸ் சாரிட்டபிள்டிரஸ்ட்டாட்காம்னு இருக்கிற டொமைனுக்குள்ள ஏதும் இருக்கானு, நாங்க அதை வேபேக் மிஷின்ல கொண்டுபோய் பார்க்கும்போது, 2006 ல இருந்து 2016 வரை ஆக்டிவா இருந்திருக்கு. (நீங்க இன்டர்நெட்டில் என்னதான் டெலிட் செய்திருந்தாலும், அத வேபேக் மிஷின் மூலம் எடுத்துக்கலாம்.)
அந்த வெப்சைட்ல டிரஸ்ட் ஆரம்பிச்சப்ப கொடுத்த ரெஜிஸ்ட்ரேஷ்ன் நம்பர் இருக்கு. அந்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர எடுத்துட்டு போயி, என்.ஜி.ஓ. டாட்காம் அப்டின்ற கவர்மெண்ட் போர்ட்டல்ல போட்டு செக் பன்னினோம். அப்படி ஒன்னு இல்லவே இல்லை.
ஒருவேளை நம்மதான் தப்பா சர்ச் பன்னிட்டு இருக்கமோனு செக் பன்றதுக்காக, சூர்யாவோட அகரம் டிரஸ்ட்ட செக் பன்னி பார்த்தோம். சூர்யாவோட டிரஸ்ட் லாம் அந்த லிஸ்ட்ல வருது. ஆனால், என் தலைவன் லாரன்ஸோட டிரஸ்ட் மட்டும் அந்த லிஸ்ட்ல இல்லவே இல்லை.
ஸ்ரீரெட்டி பிரச்சினையில தலைவன் பேரும் அடிபட்டுச்சு. ஸ்ரீரெட்டி மாதிரி ஒரு நடிகையோ, ஒரு பொண்ணோ உங்க மேல ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாங்க. நீங்க என்ன பன்னுவீங்க. ஒன்னு ஆமானு சொல்லனும். இல்லை, இல்லைனு மறுக்கனும். ஆனா, என் தலைவன் வேற மாதிரி ஒரு ரிப்ளை கொடுத்திருப்பாப்ள.
ஸ்ரீரெட்டிக்கு அளித்திருக்கும் பதில் இதோ, என்று சிறு குழந்தைகளுக்கு உதவி செய்த புகைப்படத்தை போட்டிருக்கிறார். என்ன லாரன்ஸ் அண்ணே, குழந்தைகளை ஷீல்டு மாதிரி யூஸ் பன்றீங்களா?
என்னதான் விளம்பரத்திற்காக லாரன்ஸ் இதை செய்திருந்தாலும், நாணயத்தின் இருபக்கங்களைப்போல, இதனால் பயனடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை நான் ஒத்துக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன். வரவேற்று பாராட்டுகிறேன்.
இதுபோல சினிமா பிரபலங்கள் உதவி செய்வதற்கு பின்னால், செக்சன் 80 ஜி என்ற வரிச்சலுகை அடங்கியிருக்கிறது. நல்லா சம்பாதிக்கிற ஒரு செலிபிரட்டி இதுபோல டிரஸ்டுக்கு பணம் கொடுத்தா, அதன் மூலம் 50 முதல் 100 சதம் வரையில் வரிச்சலுகைகளை பெறுகிறார்கள். இது புரியாம நம்ம அணிலும், ஆந்தைகளும் என் தலைவன் எவ்ளோ உதவி பன்னிட்டு இருக்கானு சோசியல் மீடியாவில் ஃபயர்விட்டு திரிகிறார்கள்.
புதிய கடவுள் – 2 கே.பி.ஒய் பாலா !
செல்லமணி என்ற ஜூடோ பிளேயருக்கு உதவி செய்ததாக ஒரு இன்ஸ்டா பதிவை போட்டிருந்தார் பாலா. அத பத்தின வீடியோ ஒன்னையும் போஸ்ட் பன்னியிருந்தாங்க. அந்த வீடியோவுக்கு 1.5 மில்லியன் பார்வைகளும், 12 ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்ட்ஸ்களும் வந்திருந்தது. இதுல ஷாக் என்ன தெரியுமா? அந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான கமெண்டில் ஒருத்தன்கூட, அந்த பொண்ணை பாராட்டியோ, அந்த பொண்ணு செஞ்ச சாதனையை பாராட்டியோ கருத்து போடல.
இவங்க அந்த பொண்ணுக்காக ஹெல்ப் பன்னினாங்களா? இவங்க பப்ளிசிட்டிய டெவலப் பன்றதுக்காக அந்த பொண்ணு இவங்களுக்கு ஹெல்ப் பன்னுச்சா?
அதே மாதிரி ராஜேஸ்வரினு ஒரு பொண்ணுக்கு நேரா போயி லேப்டாப் கொடுத்தாரு. இதனை நான் குறை சொல்லல. இதை வீடியோ போட்டதுதான் தப்பு. அந்த ஜூடோ பிளேயருக்கு நேர்ந்த மாதிரி இந்த பொண்ணுக்கும் நேராதுனு என்ன உத்தரவாதம்? பாலா லேப்டாப் வாங்கிக் கொடுத்ததாலதான் அந்த பொண்ணு சாதனை பன்னுச்சினு சொல்வாங்க. ஆக, மறுபடியும் அந்த பொண்ணோட திறமையையும், உழைப்பையும் திருடி பாலாகிட்டதானே கொடுப்பீங்க.
ஒரு பத்து ரூபாய் கொடுத்து நான் ஜூஸ் பாக்கெட் வாங்கினா அது பிசினஸ். அதே மாதிரி, பத்தாயிரம் ரூபா கொடுத்து நீ ஹெல்ப் பன்றேனு வீடியோ போடுறதும் பிசினஸ்.
பத்து பேருக்கு ஹெல்ப் பன்னிட்டு ஆயிரம் பேருக்கு ஹெல்ப் பன்ன மாதிரி காட்டுவதால, உங்களால எல்லாம் முடியும்னு நம்புற இடத்துக்கு மக்கள் வர்றாங்க. கவர்மெண்ட் மேல இருக்கிற நம்பிக்கை குறையிது. உங்களால எல்லோருக்கும் ஹெல்ப் பன்ன முடியுமானு கேட்டா முடியாது. மக்களுக்கு தேவை நிரந்தர தீர்வுதானே ஒழிய. உங்களைப் போல சின்னச் சின்ன தீர்வுகள் கிடையாது.
சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டு வீடியோ போடுற செலிபிரிட்டிய பார்த்து கேக்குறேன். உங்களுக்கு உண்மையாலுமே இந்த சமூகத்தின் மேல அக்கறை இருந்தா, ஆயிரம் ரூபாய்க்கு ஹெல்ப் பன்னிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்ற எச்ச பொழப்பை விட்டுட்டு, உதவி கேக்குற மக்களோட நிலைமைய அடித்தளத்துல இருந்தே மாத்துங்க.
இந்த செலிபிரிட்டி வீடியோஸ்க்கெல்லாம் ஃபயர் விடுற மக்கள பார்த்து கேக்குற கேள்வி என்னன்னா, அரசாங்க நிவாரண பொருட்கள்ல அரசியல் தலைவர்களோட போட்டோ இருந்தா விளம்பர அரசியல்னு சொல்றீங்கள்ல. அதே உதவி பண்ணி வீடியோ போடுற இவனுங்கள எந்த கேள்வியும் கேட்காம இருக்கிற மக்களோட மனநிலைய பார்த்தா ரொம்பவே பயமா இருக்கு.
மக்களோட இயலாமைய மட்டும் பயன்படுத்தி சம்பாதிக்கிற உங்கள மாதிரி செலிபிரிட்டி பன்றது தப்புனு நான் சொல்றதால நான் கெட்டவன்னா … என்னவிட இந்த உலகத்துல மோசமான கெட்டவன் எவனுமே இருக்க மாட்டான்.
தொகுப்பு : இளங்கதிர்.