அங்குசம் பார்வையில் ‘குமார சம்பவம்’
தயாரிப்பு : வீனஸ் இன்ஃபோடெய்னெமெண்ட் கே.ஜே.கணேஷ், டைரக்ஷன் : பாலாஜி வேணுகோபால், ஆர்ட்டிஸ்ட் : குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணன், குமரவேல், ஜி.எம்.குமார், பாலசரவணன், லிவிங்ஸ்டன், வி.தாரணி, கெளதம் சுந்தர்ராஜன், ஆர்ஜெய், வினோத் சாகர், ஷிவா அரவிந்த், சார்லஸ் வினோத், வினோத், விஜய் ஜாஸ்பெர், வினோத் முன்னா, சரவணன், கவிதா. ஒளிப்பதிவு : ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி, இசை : அச்சு ராஜாமணி, எடிட்டிங் : ஜி.மதன், ஆர்ட் டைரக்டர் : ஜி.மதன், காஸ்ட்யூம் டிசைனர் : நந்தினி நெடுமாறன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
மக்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பதுடன் பொதுநல வழக்குப் போட்டு மக்களுக்கு நீதி வாங்கித் தரும் கம்யூனிஸ்டாக பெரியாரிஸ்டாக குமரவேல். இவருக்காக கோர்ட்டில் வாதாடும் வக்கீலாக கெளதம் சுந்தர்ராஜன். ஒரு நாள் இரவு திடீரென குமரவேல் கொலை செய்யப்படுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டு ஓனர் என்ற வகையில் குமரன் தங்கராஜனை ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிக்கிறார் பைல்ஸ் ஆபரேஷன் செய்திருக்கும் இன்ஸ்பெக்டர் ஷிவா அரவிந்த். கொலையாளி குமரன் தானா? இல்லை வேறு யாராவதா? என்பதை இரண்டு மணி நேரம் ஃபுல் & ஃபுல் காமெடி ஜானரில் கலகலப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் பாலாஜி வேணுகோபால்.
வசனமெல்லாம் சும்மா பட்பட்டுன்னு சட்சட்டுன்னு வந்து விழுகுது. உதாரணர்த்திற்கு சில..
” ஃப்ரெண்டுன்னா…”
“ஃப்ரெண்டுன்னா ஃப்ரெண்டு தான் சார். இப்ப நீங்க இன்ஸ்பெக்டர்னா இன்ஸ்பெக்டர், கமிஷனர்னா கமிஷனர். இது மாதிரி தான் ஃப்ரெண்டு ஃப்ரெண்டு” “இது போலீஸ் ஸ்டேஷன், சர்வீஸ் ஸ்டேஷன் இல்ல”
“நீங்க மக்களுக்கு சர்வீஸ் பண்றதா தானே சொல்றீங்க”
‘சிசிடிவி கேமரா இல்லேன்னு தெரிஞ்சதும் திருடன் உடனே வர்றான். நீங்க ஏன் உடனே வரக்கூடாது”
இப்படி படம் முழுக்க கிரேஸி மோகன் பிராண்ட் காமெடி சரவெடி பட்டாசு தான். இருந்தாலும் இடைவேளை வரை, அதாவது ஜி.எம்.குமார் எபிசோடில் கொஞ்சம் டி.வி.ரியல் டைப் எட்டிப்பார்க்கத்தான் செய்யுது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு பாலசரவணன், சி.பி.ஐ.அதிகாரி வேசம் போடும் வினோத்சாகர், பாயல் ராதாகிருஷ்ணனுடன் கூட்டணி போட்டு காமெடி தர்பாரே நடத்தியிருக்கிறார் ஹீரோ குமரன் தங்கராஜன். சினிமா டைரக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் இளைஞனாக குமரன் தங்கராஜன் எந்த சீனிலும் திணறவில்லை, மிகை நடிப்பில்லை.
இதனாலே பளிச்சென மனதில் ஒட்டிக் கொள்கிறார் குமரன் தங்கராஜன். அதே போல் ஹீரோயின் பாயல் ராதாகிருஷ்ணனும் பளிச்சென இருக்கிறார், குமரனின் தங்கையாக வரும் தாரிணி நச்சுன்னு இருக்கார். குமரனின் மாமாவாக வருபவர், இவரின் மகனாக சயின்ஸ் பித்தனாக வரும் நடிகர், பைல்ஸ் ஆபரேஷ் பண்ணிவிட்டு, தையல் பிரிக்காமலேயே அவஸ்தை ஆக்ஷன் கொடுக்கும் ஷிவா அரவிந்த், தயாரிப்பாளராக வரும் லிவிங்ஸ்டன் என எல்லோருமே கலகலப்புக்கு க்யாரண்டி தருகிறார்கள்.
கதைக்குள் அப்பப்ப வந்தாலும் வரதப்பனாக வரும் குமரவேல் படம் முழுக்க நிறைந்திருக்கிறார், நடிப்பிலும்.
“கதை சொல்லும் போது பொணம்கூட எந்திருச்சு நிக்கணும்டா” என லிவிங்ஸ்டன் சொல்ல, ஆஸ்பத்திரியில் பக்கத்து பெட்டில் கோமாவில் கிடக்கும் பாயலின் பாட்டிக்கு கை அசைவது, “நான் செத்ததை வச்சுத் தான் கதை ஆரம்பிச்சுது. ஆனா எப்படி செத்தேன்னு நானே சொல்றேன்” என குமரவேல் சொல்வது, குமரன் –பாயல் டூயட்டில் போட்டோவில் இருக்கும் பாட்டியின் பல்வேறு ரியாக்ஷன் என டைரக்டர் பாலாஜி வேணுகோபாலின் செமத்தியான டச்..சும்மா நச்சுன்னு இருக்கு.
இதில் நடித்திருக்கும் நடிகர்-நடிகைகள் யாரும் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றாலும், கிரேஸி மோகன் பிராண்ட் காமெடி டயலாக் படார் படாரென வந்து விழும் போது, அதை உள் வாங்கி கூடுதல் எஃபெக்ட் கொடுக்க சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் இருந்திருந்தால் படம் இன்னும் படுஜோர் காமெடி ஜானரில் கலக்கியிருக்கும்.
இருந்தாலும் இந்த ‘குமார சம்பவம்’ தரமான சம்பவம் தான்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.