ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!
கரூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றிருந்த கே.ஜோஷ்தங்கையா, ஒரே வழக்கில் கைதான 9 பேருக்கும் குண்டாஸ் போட்டு கணக்கை தொடங்கியிருந்தார். தற்றோது, நங்கவரத்தைச் சேர்ந்த ரவுடி முருகானந்தம் என்பவர் பத்தாவது நபராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான். மாவட்டத்தின் போலீசு அதிகாரியின் அணுகுமுறையை பொருத்து இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், சட்டம் – ஒழுங்கை சர்ச்சைகளின்றி நிலைநாட்டும் விதமாக எஸ்.பி. ஜோஷ் தங்கையா தனிச்சிறப்பான முறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்கிறார்கள். இரவு நேரங்களில் போலீசு ரோந்து பணியை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருப்பதாக சொல்கிறார்கள். நாலு போலீசார் கூட்டமாக நின்று வாகன சோதனையில் ஈடுபட்டாலே, லைசன்ஸ் இல்லாதவர்களும் வண்டிக்கு இன்சூரன்ஸ் செய்யாதவர்களும், ஹெல்மெட் போடாதவர்களும்கூட குற்றவாளியைப் போல பயந்து வந்த வேகத்தில் திரும்ப ஓட்டமெடுக்கும் நிலையை பார்த்திருக்கிறோம். ஆனால், பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களே நற்சான்றிதழ் வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தி வருகிறார். மஃப்டியில் எஸ்.பி. கரூர் நகரை வலம் வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதுபோன்ற வாகன சோதனையில்தான், சமீபத்தில் பத்து கிலோ அளவுக்கு குட்கா கடத்திய நபரை கைது செய்திருந்தார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ரவுடி என்று கெத்து காட்டி தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கண்காணித்து குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான், தனிநபர் பகையா? மணல் கடத்தல் விவகாரமா? என தமிழகமே விவாதம் நடத்திய வாங்கல் மணிவாசகம் கொலை வழக்கில் சிக்கி கைதான 9 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவி அதிரடி காட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், நங்கவரம் போலீஸ் லிமிட்டில் அமைந்த நங்கவரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். “C” Category ரவுடியான முருகானந்தத்திற்கு, குளித்தலை, லாலாபேட்டை, நங்கவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஆகிய காவல் நிலையங்களில் 06 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில்தான், தெற்கு மாடு விழுந்தான் பாறை கிராமத்தில் வசிக்கும் தனது உறவினரான ராஜா என்பவரின் தந்தை செல்வராஜ் என்பவரை கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கத்தியால் குத்திய வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான், அவனது பழைய வரலாறுகளை ஆராய்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தார் எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா. எஸ்.பி.யின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் அளித்த நிலையில் குண்டாஸில் கைதாகியிருக்கிறார் முருகானந்தம்.
கடந்த ஜூலை-21 ஆம் தேதி எஸ்.பி.யாக பதவியேற்று முழுமையாக ஒரு மாத காலம்கூட முடிவடையாத நிலையில், மாவட்டத்தில் 10 பேரை குண்டாஸில் அடைத்திருக்கிறார். இதுபோன்று, தமக்கு எதிராக பழைய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மீண்டும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசு வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
— ஆதிரன்.