அங்குசம் பார்வையில் ‘குற்றம் புதிது’
தயாரிப்பு : ஜி.கே.ஆர்.சினி ஆர்ட்ஸ் தருண் விஜய், இணைத் தயாரிப்பு : எஸ்.கார்த்திகேயன், டைரக்ஷன் : நோவா ஆம்ஸ்ட்ராங்க். ஆர்ட்டிஸ்ட் : தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி,மதுசூதன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், நிழல்கள்ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், ‘பாய்ஸ்’ ராஜன். ஒளிப்பதிவு : ஜேசன் வில்லியம்ஸ், இசை : கரண் பி.கிருபா, எடிட்டிங் : எஸ்.கமலக்கண்ணன், எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர்; ஆனந்தகுமார், தியேட்டர் ரிலீஸ் : ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை. அவன் இல்லாததால் அவனது அறையை உடைத்துப் பார்க்கும் போது, தரையெல்லாம் ரத்தம், ஒரு பெண்ணின் பெருவிரல் துண்டாகிக் கிடக்கிறது. பக்கத்து அறையில் ஃபுட் டெலிவரி பாயாக இருக்கும் ஹீரோ தருண் விஜய்யிடம் ஸ்டேஷனில் விசாரித்துவிட்டு அனுப்பிவிடுகிறது போலீஸ்.
ஒரு கட்டத்தில் “நான் தான் அந்தக் கொலையைச் செய்தேன்” என கமிஷனரிடம் சரண்டாகிறார் தருண் விஜய். இதற்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது கணித ஆசிரியை, கல்லூரியில் படிக்கும் போது ஒரு ஃபிரண்ட் ஆகியோரைக்கொலை செய்து புதைத்திருக்கேன் என தருண் விஜய் சொன்னதும் அதிர்ச்சியாகிறார் போலீஸ் கமிஷனர்.
அவன் சொன்ன இடத்தைத் தேடிப் போனால் அந்த இரண்டு பேருமே உயிருடன் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கொலை செய்ததாக சொன்ன இளம் பெண்ணும் உயிருடன் வருகிறார். அப்படினா கொலையானது யார்? கொலையாளி யார்? என்பதன் புது ட்ரீட் தான் இந்த ‘குற்றம் புதிது’.
மூளைப் பிறழ்வு நோயாளியாக ஹீரோ தருண் விஜய், “அங்கிள் நான் ஒரு கொலை பண்ணிட்டேன். யார்ட்ட சரண்டராகணும்” என கமிஷனர் அலுவலக போலீஸ்காரர்களிடம் கேட்பது, “அந்த பொண்ணு பேரு தெரியாது, ஆனா போட்டோவைப் பார்த்தா கரெக்டா சொல்லிருவேன்” என கமிஷனிடம் ஒரு டைப்பாக பேசுவது, நீதிபதியைப் பார்த்து ”அங்கிள்” என அப்பாவியாக கூப்பிடுவது என வெரைட்டியாகத் தான் பெர்ஃபாம் பண்ணியிருக்கார்.
அசிஸ்டெண்ட் கமிஷர் மதுசூதன் ராவின் மகளாக சேஷ்விதா கனிமொழி, கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று படங்களில் நடிப்பில் தேறிவிடுவார் போல. கொலையான மகளை நினைத்து இடைவேளை வரை கதறிக் கதறி அழும் மதுசூதன்ராவ், உயிருடன் திரும்பி வந்ததும் மனைவி பிரியதர்ஷினி ராஜ்குமாருடன் சேர்ந்து அழுகிறார்.
க்ளைமாக்ஸ் ட்விஸ்டும் கதைக்களமும் புதிதுதான். ஆனா படம் ரொம்ப ரொம்ப மெதுவா நகர்ந்து சோதிக்குதே டைரக்டர் நோவா ஆம்ஸ்ட்ராங்க் பிரதர். ஆமா உங்க பேரு ஆம்ஸ்ட்ராங் தானே…அதென்னா ஆம்ஸ்ட்ராங்க்?
கதை புதுசு தான் டைரக்டரே.. அதுக்காக அரசு மனநல மருத்துவரே ஹீரோவின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டதாக சர்டிபிகேட் கொடுப்பது, ஏதோ கதா கலாட்சேபம் கேட்பது கொலையாளியை உட்கார வைத்து கமிஷனர் கேட்பது, அசிஸ்டெண்ட் கமிஷனரே கொலையாளிகளுக்கு ”டாட்டா” காட்டி அனுப்புவதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் டைரக்டர் பிரதர்.
— மதுரை மாறன்