சிலம்பம் கற்கும் அமெரிக்க தம்பதிகள் !
மதுரையில் சிலம்பம் கற்கும் அமெரிக்க தம்பதிகள் ! தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு கிடைத்த அங்கீகாரம்!
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சிலம்ப ஆசிரியர் முத்துமாரி இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்ற பெயரில் இலவச சிலம்ப பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்ச்சியில் தேர்வான மாணவர்களுக்கு மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் தல்லாகுளம் மாநகராட்சி ஈகோ பார்க்கிலும் சிலம்ப பயிற்சி நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியரான ஹபீப் சலீம், தனது மனைவி கிம் இருவரும் மாஸ்டர் முத்துமாரியிடம் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனர்.
அங்குசம் சார்பில், சிலம்பம் பயிற்சி பெறும் அமெரிக்க தம்பதிகளிடம் கலந்துரையாடினோம். “அமெரிக்கா நியூயார்க்கில் வசித்து வருகிறோம். அமெரிக்காவில் தற்போது விடுமுறை என்பதால் நான் எனது குடும்பத்தினருடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ளேன்.
அமெரிக்காவில் விளையாட்டு என்றால் டபிள்யூ டபிள்யூ, பாக்சிங் விளையாட்டுகள் தான் அதிகம் கற்று தருகின்றனர். இதுபோல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்வது கடினம். இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலம்பம் விளையாடுவதை பார்த்ததும் எங்களுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தது. அதனால் நானும், எனது மனைவியும் இங்கு சிலம்ப விளையாட்டு பயிற்சி கற்று வருகிறோம். எனதுபெற்றோரும் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்” என்றார்.
”சிலம்ப விளையாட்டில் சான்றிதழ் பெறுவோருக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழக அரசுமுன்னுரிமை வழங்கி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறோம்.” என்கிறார், சிலம்ப ஆசான் முத்துமாரி.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான சிலம்பத்தின் பெருமை கடல்கடந்தும் பரவியிருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஷாகுல், படங்கள் : ஆனந்த்.