அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!
அன்று ஒரு சாதாரண நாளே. மதிய உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது, கொள்ளு பருப்பு செய்யலாம் என்று நினைத்தேன். கிச்சனுக்குள் சென்றேன். கொள்ளு பாத்திரத்தில் பார்த்தால் கொஞ்சமே இருந்தது. அருகிலுள்ள கடைக்குச் சென்று சிறிது வாங்கி வந்து, பழையது சேர்த்து குக்கரில் ஊறவைத்து, விசில் வைத்து விட்டேன். அதற்குள் பொரியலுக்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து விசில் வர ஆரம்பித்தது . “ஒன்று… இரண்டு…” மூன்றாவது விசில் வரப் போகும் தருணம் திடீரென்று “டப்பார்!” என்ற பெரிய சத்தம்!
ஒரு கணம், என்ன நடந்தது என்று புரியவில்லை. குக்கர் வெடித்தது. கைப்பிடி பாய்ந்து என் முகத்தின் மிக அருகே உரசி சென்று விழுந்தது. நல்ல விதமாக என் முகத்தில் குக்கர் மூடி படவில்லை. அப்படிப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் இப்பொழுது நினைத்தால் கூட என் உடல் நடுங்குகிறது. என் கண்ணாடியை உரசியதில் கண்ணாடி மட்டும் பறந்தது. கொள்ளு பருப்பு சூடாக என் முகத்திலும் கைகளிலும் தெரித்தது. அந்த வெப்பத்தால் சுடும் உணர்வு வந்ததும் பயந்து, அலறியபடி உடனே வெளியே ஓடி, தண்ணீர் ஊற்றி என்னை கழுவிக்கொண்டேன். பாதிப்பு அதிகம் இல்லை.. சூடாக பட்டதால் அங்கு அங்கு சிவந்து, லைட்டாக எரிச்சல் இருந்தது..
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே சென்றேன். கிச்சன் முழுவதும் கஜாலாக , சுவற்றில், அடுப்பில், மேல்தளத்திலும் கூட கொள்ளு பருப்பு தெறித்திருந்தது. அந்தக் காட்சியை பார்த்தபோது என் மனதில் ஒரே ஒரு எண்ணம் “இவ்வளவு அருகில் நின்ற எனக்கு குக்கர் எனது உடம்பில், முகத்தில் அல்லது கண்களில் பட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும்?”
அந்த ஒரு நொடி, வாழ்க்கை எவ்வளவு நொடிப்பொழுதில் மாறிவிட முடியும் என்பதை உணர்ந்தேன். சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது. குக்கர் வெடிப்பது பெரும்பாலும் தண்ணீர் குறைவாகவோ, வால்வு அடைபட்டதாலோ அல்லது ரப்பர் ரிங் பழுதாக இருப்பதாலோ தான். ஒவ்வொரு முறையும் குக்கர் பயன்படுத்தும் முன் இந்தச் சிறு விஷயங்களைச் சரிபார்த்து கொள்ளுங்கள். ஒரு நொடிக் கவனக்குறைவு உயிர் முழுவதையும் ஆபத்தில் ஆழ்த்தும்!
இதுபோல் தீ காயம் பட்டால் முதல் உதவியாக கோதுமை மாவு, இட்லி மாவு, தக்காளி போன்றவையை தீ காயம் பட்ட இடத்தில் தடவினால் கொப்பளம் போடாமல் இருக்கும்!
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.