வெற்றிலையால் சிவந்த உதட்டிலிருந்த தெரித்த உரிமை முழக்கம் !
வெற்றிலையால் சிவந்திருக்கும் உதட்டிலிருந்து வெளிப்படும் சொற்கள் கேட்பவர்களின் காதுகளுக்கு ராகம் போல இருக்கும். கருத்துகளோ உள்ளத்தில் தாளம் போடச் செய்யும். அவர்தான் எல்.கணேசன்.
எல்.ஜி. என்பதே அவருடைய பெயர், பட்டம், அடையாளம் எல்லாமும் ஆனது.
1965 மொழிப்போர்க் களத்தின் மாணவப் படையில் முன்னணி வீரராக எல்.ஜி. திகழ்ந்தார். துரைமுருகன், காளிமுத்து, ரகுமான்கான், நா.காமராசன், செல்வராசன், அ.ராமசாமி எனப் பின்னாளில் அரசியல் களத்திலும் கல்வித்துறையிலும் முத்திரை பதித்தவர்களை மொழிப் போர்க்களத்தில் வழிநடத்திய தளகர்த்தர் எல்.ஜி.

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பட்டாளத்தை அணி திரட்டி போராட்டம், கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தி தமிழ்க் கனலை மூட்டியவர். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை அழைத்து மாணவர்களிடம் உரையாட வைத்து, அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்களையும் தமிழ் மொழி உணர்வாளர்களாக மாற்றியவர். அடுத்த தலைமுறை உருவானபோது அவர்களிடமும் அந்த உணர்வை ஊட்டினார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பாக உரையாற்றும் திறமை அவருக்கு உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும், ஈழத்தமிழர் உரிமைக்கான போராட்டங்களையும் வீரியத்துடன் முன்னெடுத்தார். எமர்ஜென்சி காலத்தில் ஓராண்டு காலம் மிசா சிறைவாசியாக இருந்தார்.
1987ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காக எல்.ஜி.யும் திருச்சி மலர்மன்னனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்காக போடப்பட்ட வெடிகுண்டு வழக்கை எதிர்கொண்டு, நிரபராதி என்பதை நிரூபித்தார்.
ம.தி.மு.க. உருவானபோது அதன் அவைத்தலைவராக செயல்பட்டவர் எல்.ஜி. பின்னர், மீண்டும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார்.

சட்டப்பேரவை (எம்.எல்.ஏ), சட்டமேலவை (எம்.எல்.சி), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (லோக்சபா எம்.பி), நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) என நான்கு பொறுப்புகளிலும் தன் முத்திரையைப் பதித்த பெருமைக்குரிய அரசியல்வாதி இவர்தான். 1989-ல் 13 ஆண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் என்ற பொறுப்பை எல்.ஜி.க்கு வழங்கினார் கலைஞர்.
திராவிடக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி வாழ்ந்த எல்.ஜி. தன் மகனுக்கு வைத்த பெயர், அண்ணா.
முதுமையினால் எல்.ஜி.யின் வாழ்வு முடிந்திருக்கலாம். அவரது வரலாறு நிலைத்திருக்கும்.
போய்வாருங்கள் அய்யா
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.