கோடியில் குதிரையும் எருமையும்….
பொதுவாக நாம் அனைவரும் பழங்காலத்து அரண்மனை அல்லது பழங்காலத்து அரிய வகை பொருட்கள் பல கோடிகளுக்கு விலை போய் பார்த்திருப்போம். ஆனால் எப்போதாவது ஏதாவது விலங்குகள் கோடிக்கணக்கில் விலை போனதை பற்றி கேள்விப்பட்டது உண்டா? ஆம் இது போன்ற சம்பவம் ராஜஸ்தானில் தான் நிகழ்ந்து இருக்கிறது.
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையும், ரூ.23 கோடி மதிப்புள்ள எருமையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சண்டிகரைச் சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான ‘ஷாபாஸ்’ என்ற இரண்டரை வயது மார்வாரி இனக் குதிரை, கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. பல போட்டிகளில் வெற்றி பெற்ற இந்த குதிரைக்கு இதுவரை ரூ.9 கோடி வரை விலை கேட்கப்பட்டுள்ளது.
குதிரைக்குப் போட்டியாக, ராஜஸ்தானைச் சேர்ந்த ‘அன்மோல்’ என்ற எருமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மதிப்பு ரூ.23 கோடி என அதன் உரிமையாளர் கூறுகிறார். இந்த எருமை ஒரு ராஜாவைப் போல வளர்க்கப்படுவதாகவும், தினமும் பால், நெய் மற்றும் உலர் பழங்கள் போன்ற சிறப்பு உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கிய இந்த இந்த கண்காட்சி நவம்பர் 7 ஆம் தேதி நிறைவு பெற்றது . இது ராஜஸ்தானின் கால்நடை வளர்ப்பு பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. இந்த ஆண்டு 3,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.