பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்
தெய்வாம்சம் பொருந்திய அந்த ஊரில் இயற்கை அளித்த கொடையாள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த மக்களை இரண்டு அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தான் இயற்கையும் தெய்வாம்சமும் நிறைந்த ஊரை காப்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார். அவரிடம் அந்தப் பகுதி மக்கள் அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும் படி வேண்டினர். தேவர்களும் கூட பொது மக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதை அடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக குண்டங்களை உடைத் தெறிந்தனர். இதை அடுத்து காசிப முனிவர், தேவர்கள், பக்தர்கள் அனைவரும் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் நிரஞ்சனேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர். அப்போது, அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் என்றது அந்த குரல். தேவர்களும் மக்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் முருகப் பெருமான் மயில் வாகனத்துடன் சென்று இரண்டு அரக்கர்களையும் துரத்தினார்.

அவர்கள் மக்கள் நடமாடும் கொக்குகள் நிறைந்த குளக்கரையுமான இடத்தில் மறைந்து இருந்தனர். அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட முருகப் பெருமான் முதலில் மலையனை தன்னுடைய வேலாயுதத்தால் வதம் செய்தார். அந்த இடம் தற்போதும் மலையான் குளம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாயன் இனி மக்களுக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடினான். முருகப்பெருமான் நிரஞ்சனேஸ்வரரிடம் திரும்பி வந்தார். தங்களின் கட்டளையை நிறைவேற்றியதாக கூறிவிட்டு வேலாயுதத்தை ஓரிடத்தில் ஊன்றினார். அந்த இடமே வேலூர் என்றானதாக தல வரலாறு சொல்கிறது.
வடநாடு சென்று வெற்றி வாகை சூடி திரும்பிக் கொண்டிருந்தான். ராஜேந்திர சோழன் வழியில் இயற்கை வளமும் இறையருளும் நிரம்பிய வேலூர் கிராமத்தை கண்டான். அதன் அழகை ரசித்துக்கொண்டே வந்தவனுக்கு ஒரு அசரீரியின் ஒலி கேட்டது. நீ பார்க்கும் இடத்தில் தெய்வாம்சம் பொருந்திய கொம்பு ஒன்று கிடைக்கும். அதனை எடுத்துச் சென்று தீவு போன்ற பகுதியில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் குடிகொண்டிருக்கும் ஈசனின் முன்பாக நட வேண்டும் என்றது அந்த குரல். அப்போது இருள் சூழும் நேரமாகிவிட்டதால் மன்னன் தன் படை பரிவாரங்களுடன் ஓர் இடத்தில் தங்கி கண்ணயர்ந்தான். கண் விழித்துப் பார்த்தபோது அங்கே ஒரு கொம்பு துளிர்விட்டு இலையுடன் காணப்பட்டதை கண்டு வியந்தான். பின்னர் அசரீரி சொன்னதைப் போலவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நட்டு அங்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பினார். மன்னன் நட்ட கொம்பு துளிர்ந்து மரமாக வளர தொடங்கியது. அதுதான் இன்றும் இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
கோவில் அமைப்பு:
ஆலயத்தை சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு திசையால் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் கோவில் வலப்புறத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள சுந்தர விநாயகரை தரிசனம் செய்யலாம். பின்னர், கிழக்கு நுழைவு வாசலில் உள்ளே நுழைந்தால் கருவறையின் இருபுறமும் துவார பாலகர்கள் ஈசனுக்கு காவலாக நிற்கின்றனர். முன்னதாக வலது புறத்தில் கணபதியையும் இடது புறத்தில் முருகப் பெருமானையும் தரிசனம் செய்யலாம். கருவறையில் நிரஞ்சனேஸ்வரர் வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களின் குறைகளை களைந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றியும் அருள்பாலிக்கிறார். ஈசனின் முன்பாக இருக்கும் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை சொன்னால் அது விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.
கருவறை சோஷ்தத்தில் மகா கணபதியும் தக்ஷிணாமூர்த்தியையும் லிங்கத்பவம் மூர்த்தியையும் மூலவருக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பிரம்மன் சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நீளாயதாட்சினி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். தெற்கு வாசலை கடந்து வெளியே வந்தவுடன் கோவிலை சுற்றி வரும் வழியில் காலபைரவர் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அவருக்கு அருகில் நவகிரக சன்னதி காணப்படுகிறது. மேலும் கோயிலில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் தலவிருட்சமான அரசமரம் ஆலய புஷ்கரணி ஆக அருகில் இந்த மரம் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் திருநாள், பிரதோஷம், தமிழ் புத்தாண்டு, ஆனி மாத தேய்பிறை, ஏகாதசி, சிவராத்திரி, மாசி மகம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் பெரியோர் சாபம் பொய்சாட்சி சொன்னதால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்டவை விலகும் என்பது ஐதீகம்.

இந்த ஆலய தல விருட்சத்தை வணங்கினால் நீண்ட ஆயுள் கிடைப்பதுடன் செல்வம் பெருகும் என்கிறார்கள். காலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் அரச மரத்தை வளம் வந்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொட அனுமதி உள்ளது மற்ற நாட்களில் தொடக்கூடாது. இந்த மரத்தின் குச்சி மற்றும் மரப் பொருட்களை யாகம் செய்யும் போது மட்டுமே எடுத்து தீயில் போட்டு எரிக்கிறார்கள். விரதம் இருந்து 108 முறை மரத்தை சுற்றினால் மன ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள். வேளாண்குடி மக்கள் நிறைந்த ஊரில் கோவில் கொண்டவராக நிரஞ்சனேஸ்வரர் திகழ்கிறார். பாவங்களை நீக்கும் தலமாக விளங்கும் நீலாய தாட்சினி சமேத நிரஞ்சனேஸ்வரர் கோவிலுக்கு சென்று அருள் பெறுவோம்.
– பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.