நொறுங்கிப்போய் கிடக்கிறேன்!
ஹரணி அன்பால் எனையாண்ட அறிவுத் திருமகன். அன்பழகன் என்ற இயற்பெயருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைத்தொடர்புக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்த பேராசிரியர் பெருந்தகை. ஆனால் உடல்மொழியாலோ, பேச்சு செயல்களினாலோ தன் பேராசிரியர்தனத்தை வெளிப்படுத்தாதவர்.
ஆற்றல்மிகு தமிழ்ப்படைப்பாளி.
புதினம் (நாவல்), சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், பக்திப் பனுவல்கள், சிறுவர் இலக்கியம், வெண்பா உள்ளிட்ட மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூ கவிதை, தன்முனைக்கவிதை இவற்றோடு தானே உருவாக்கிய என்பா என்று தமிழின் சகல படைப்புத்தளங்களிலும் வலிமைமையாக, இடையறாது இயங்கி வந்தவர். சொந்தமாக பதிப்பகம் கண்டு அச்சிட்டு, தன் நூல்களை பரவலாகக் கொண்டு சென்றவர்.
அண்மைக்காலத்தில் தன்படைப்புகளுக்காக நெய்வேலி புத்தகத் திருவிழா போன்ற பலவற்றால் பாராட்டப் பெற்றவர். 40 ஆண்டுகளாக கையில் எழுதி ஜெராக்ஸ் படிகள் எடுக்கப்பட்ட இதழாகவே வெளிவரும் தாழம்பூ இதழின் அட்டையில் தன் படம் இடமபெற்றதை ஒரு குழந்தையின் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர்.
நண்பர் சுகன் உடல்நலம்கெட்டு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இருந்தபோது, வந்து பார்த்ததுடன், மருத்துவச் செலவுக்காக 5000 ரூபாயை என்னிடம் சத்தமில்லால் தந்து சென்ற கருணையாளர்.
கடந்த ஆண்டு நான் என் தஞ்சாவூரில் என் தலைமகள் இல்லத்தில் தங்கி இருந்த போது, அங்கு வந்து சந்தித்து ஆயிரம் ரூபாய் விலையுள்ள நூல்களை எனக்கு இலவசமாக வழங்கினார். உரிய தொகையைப் பெற்றுக்கொள்ள உறுதியாக மறுத்து விட்டார். அதேசமயம் என் மகளின் கைவினைப் பொருள்களைக் கண்டு, அவரை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றில் சிலவற்றைத் தொகைகொடுத்து வாங்கிச் சென்ற அன்பிற்கினியார்.
அவருடைய தன்முனை நூலுக்கு என்னை அணிந்துரை எழுத வைத்தார். அந்த அணிந்துரையைப் படித்துவிட்டு, “இந்தப் பிறவிக்கு இது போதும் வெற்றி ஐயா!” என்று நெக்குருகி அவர் தொலைப்பேசியில் கூறியது இன்னும் என்நெஞ்சத்தில் பசுமைமாறாமல் இருக்கிறது.
அவரிடம் நான் வள்ளலாரைக் கண்டேன். பேண்ட் அணிந்த வள்ளலாராகவே அவர் வாழ்ந்தார் என்பேன். அவருடைய உழைப்புக்கும், படைப்புத் திறமைக்கும் உரிய இடத்தைஐத் தமிழ்நாடு அவருக்குத்தரவில்லை என்று என்று நான்தான் வருந்தினேனேயன்றி, அவர் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கிடைத்த அங்கீகாரங்களில் மனநிறைவு கொள்ளும் இயல்பினைப் பெற்றிருந்தார். மிகமிக மென்மையான மனிதர். மேன்மையான மனிதர்.
நேற்று தஞ்சையில் நடைபெற்ற இரு ஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரைச் சந்திக்கவும், அவரின் நூல் திறனாய்வு உரையைக் கேட்கவும் மிக ஆவலுடன் இருந்தேன். அவர் வராத ஏமாற்றத்துடன் இருந்த நான், . விழாநிறைவில் அவருடைய திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் அறிவிப்பில் திடுக்கிட்டுப் போனேன்.
நூல்கள் திறனாய்வுக்காக, நல்ல தயாரிப்புடன், தன் கரந்தை நண்பரை இருசக்கர ஊர்தியில் அழைத்துக் கொண்டு அரங்கம் வந்தவர் தன் தோள்பட்டையில் கடுமையான வலி இருப்பதாக கூறியதும் உடன்வந்தநண்பர் அவரை உடனே மருத்துவரைச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
ஹரணி நேராக மருத்துவரிடம் செல்லாமல் வீட்டுக்குப் போய், அங்கிருந்து மருத்துவமனைக்குப் புறப்படுகையில் உடனடியாக மரணம் அவரைக் கொத்திக் கொண்டு போய்விட்டது.
தன் வீட்டு மாடியில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகத்தை மிகச் செம்மையாக பராமரித்து வந்தார். சுகன் மகளின் திருமண அழைப்பிதழைச் தருவதற்காக சென்ற போது அந்த நூலகத்தைக் கண்டு பிரமித்துப் போனேன்.
தன்மகன் குகன் திருமண அழைப்பிதழை என் வீட்டுக்கு வந்து பரிசுப் பொருளுடன் வழங்கி அழைப்பு விடுத்தார். ஆனால் அதே நாளில் நான் வேறு நிகழ்வுக்காக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயத்தில், அழகான வாழ்த்து மடலைத் தயாரித்து நண்பர்கள் மூலம் மணமக்களிடம் வழங்கும்படிச் செய்தேன்.
கடந்த ஆண்டு அவருடைய பிறந்தநாளின்போது இனிய தோழர் கவிஞர் மதுமலர் லேனாவுடன் நேரில் சென்று பயனாடைப் போர்த்தி வாழ்த்தி வந்தேன். இன்று அதே இல்லத்தில் கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்கிக் கொண்டிருந்தவருக்கு மலர்மாலையிட்டுக் கண்ணீர் வணக்கம் செலுத்திவந்தேன். காலம் கொடூரமானது.
என் சொந்த உடன்பிறப்பை இழந்தது போன்ற மீளாத் துயருடன்….
— வெற்றிப்பேரொளி






Comments are closed, but trackbacks and pingbacks are open.