முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு ஆறு ஆண்டு ஜெயில் !
வரதட்சனை கேட்டு சித்திரவதை ! முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு ஆறு ஆண்டு ஜெயில் !
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, காதலித்து கரம்பிடித்த காதல் மனைவியை கைவிட்டு, இரண்டாவதாக திருமணம் செய்த ஆசாமிக்கு ஆறு ஆண்டு சிறைதண்டனை விதித்திருக்கிறது, குளித்தலை குற்றவியல் நீதிமன்றம்.
கரூர் சின்னமுத்தான்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சிவகங்கையை சேர்ந்த 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பெண் தலித் சாதி பையன் ஆதிக்க சாதி என்பதால், இருவரின் திருமணத்துக்கு பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில், சென்னைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், காதல் மனைவியின் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைபடுத்தியிருக்கிறார். காதல் மனைவி மற்றும் குழந்தைகளை கைவிட்டு, திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார்.
இதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 2019 ஆம் ஆண்டில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகனுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், முன்ஜாமின் வாங்கிக்கொண்டு வழக்கை எதிர்கொண்டு வந்தார் பாலமுருகன். இந்நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிருபணமானதையடுத்து, காதலை மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள்; முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததற்கு மூன்று ஆண்டுகள் என மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குளித்தலை குற்றவியல் நீதிமன்றம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.