எளிய மனிதர்களிடத்தில் அன்பை செலுத்தும் அண்ணன்…
வெற்றிலை கறை படிந்த பற்கள், வெள்ளந்தியான புன்னகை, கசங்கிய சட்டையில் சற்றே தயங்கிவாறு கூட்டத்தினுள் தள்ளி நின்று அண்ணனை பார்த்து கொண்டிருந்தார் MGR.
MGR எங்கள் ஆண்டிமடம் கடை வீதியில் அனைவராலும் அறியப்பட்ட நபர். தெரிந்தவர்களிடம் அருகில் நின்று வணக்கம் வைப்பார். அவர்களாக பணம் தந்தால் வாங்கிக் கொள்வார். இன்னும் தெரிந்தவர்களாக இருந்தால் தேநீர் வாங்கித்தர சொல்வார். வாங்கித் தந்தால் மகிழ்வுடன் குடித்துச் செல்வார்.
இதை ஊரிலுள்ள எவரும் தொந்தரவாக நினைத்ததில்லை, MGR-ம் தொந்தரவாக நடந்து கொண்டதில்லை.
மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வந்திருந்த அண்ணனிடம் உள்ளூர் மக்கள் பலரும் அருகில் வந்து பேசிச் சென்றபடி இருந்தனர். அப்படிதான் MGR-ம் பேச வந்து கூட்டத்தினுள் தயங்கி நின்று கொண்டிருந்தார்.
அதுவரை அமர்ந்திருந்த அண்ணன் MGR-ஐ கண்டதும் எழுந்து நின்று ‘வா MGR’ என்றார்.
என்னை இன்னமும் மறக்கலையே ?
நீ, ஆண்டிமடத்துக்கே VIP, அது எப்படி மறக்கும்? சாப்டியா?
சாப்பாடுலாம் வேணாம். உங்களைப் பார்த்தால் போதும்.
அதான், பார்த்துட்டல்ல. முதல்ல போய் சாப்டு.
மேல கறி சோறு, நான் மாலை போட்ருக்கேன்.
என்னைத் திரும்பி பார்த்தார், அண்ணன்.
அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்து சைவமும் உண்டுண்ணே என்றேன்.
அதெல்லாம் வேண்டாம். காசு வேணுமா? வேணாம்.
எல்லோரும் உங்ககூட போட்டோ எடுக்கறாங்க, நானும் ஒரு போட்டோ எடுக்கனும் என்றார் MGR.
அட, இதுக்கு ஏன் அங்கேயே நின்னுட்ருக்க. கிட்ட வா, என MGR-ன் கையைப் பிடித்து இழுத்து அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அண்ணன்.
அந்நொடி இருவரின் முகங்களிலும் மகிழ்ச்சி தழும்பி நின்றது. அவர்களைப் போலவே, பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குள்ளும் மகிழ்ச்சிதான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
MGR விடைபெறும்போது அவரது சட்டைப்பையில் சில பணத்தாள்கள் திணிக்கப்பட்டது. இப்போது MGR-க்கு அளவில்லா மகிழ்ச்சி.
இங்கு நான் அண்ணன் என குறிப்பிட்டது இன்றைய தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சா.சி.சிவசங்கர் அவர்களை.
சமூகத்தில் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் தனது இயல்பை மாற்றிக் கொள்ளாது, எளிய மனிதர்களிடத்தில் அன்பை செலுத்துவதில் அண்ணன் எப்போதுமே தனித்துவமானவர்.
— பாலசுப்ரமணியன்.ச , Video Journalist.