*நம்பிக்கையை விதைக்கும் சூரி & குமார்!*–‘மாமன்’ ஹைலைட்ஸ்!
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’மாமன் ‘ . இதில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘மாமன்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு ( மே.06) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சிலர்…
*இயக்குநர் பாண்டிராஜ்*
“கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களில் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வாங்கன்னு சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என்னுடன் பயணிக்கிறார்.
இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ‘ பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ‘ என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.
எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்”.
*சிறுத்தை சிவா*
” சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்”.
*நடிகை சுவாசிகா*
“படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர்.

இந்த ப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்”.
*பாடலாசிரியர் விவேக்*
“சில பேர் வெற்றி பெறுவார்கள் . தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம் . ரசிப்போம். ஆனால் சூரி சார் உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டிருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன். அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கருதுகிறேன். இதில் நானும் சிறு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்”.
இசையமைப்பாளர் *ஹேஷாம் அப்துல் வஹாப்*
“என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் படம் இது. இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த ப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் நன்றி”.
*ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி*
“இந்தப் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக பலரும் இங்கு சொன்னார்கள். இதற்கு காரணமாக இருந்த எடிட்டர் கணேஷ் சிவா அவர்களுக்கும், இசையமைப்பாளர் ஹேஷாமிற்கும் நன்றி. ரெண்டு நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டுமோ அதனை சரியாக சொல்லியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.
*ராஜ்கிரண்*
“இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமிதமாக நினைக்கிறேன். படத்தின் நாயகன் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும் , அக்காவாக நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார். இந்த விழாவை சிறப்பிக்க வருகை தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி”.
*பொன் ராம்*
”சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார.விடுதலை படத்தில் நடித்த போது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்”.
*மாரி செல்வராஜ்*
“சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது”.
*லோகேஷ் கனகராஜ்*
“சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.
நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். வரும் பத்து கதைகளில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள். அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்*
” இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அந்த வெப்சீரிஸை பாராட்டி என்னை உயர்த்தி விட்டவர்கள் ஊடகத்தினர். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது. இதனால் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்” .
*ஹீரோ சூரி*
“இப்படத்தின் 20 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான உரிமையை பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரத்திற்கு முதல் நன்றி.
இந்த விழாவிற்கு வருகை தந்த இயக்குனர்கள் சிறுத்தை சிவா, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் ஆகியோரு க்கும் தயாரிப்பாளர்கள் டி.சிவா, அருண் விஷ்வா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த அப்பா ராஜ்கிரண் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களைத் தான் சொல்லி இருக்கிறேன்.
குடும்பத்தில் அம்மா, அப்பா தாத்தா, பாட்டி அண்ணன், தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான். தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.
உங்கள் குடும்பத்துடன் மே 16ஆம் தேதி திரையரங்கத்தில் மாமனை பார்க்கப் போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும்”.
— மதுரை மாறன்.