மாமன் திரைப்படம் இரண்டு நெருடல்கள் -பிரபல எழுத்தாளரின் ஆதங்கம்
நேற்று மாமன் திரைப்படம் சென்றிருந்தேன் மகள்களுடன்…..
இரண்டு நெருடல்கள் திரைப்படத்திலும் திரையரங்கத்திலும்….
நீண்ட நாளாக குழந்தையில்லாமல் இருக்கும் அக்காவிற்கு பிறக்கும் குழந்தையின் பேரில் தீராத பாசம் வைக்கும் தாய்மாமன். அவனுக்கும் திருமணம் நடக்கிறது. ஐந்து வருடங்கள் தொடரும் காதல். திருமணமேடையில் கூட அக்காவின் மகனை நடுவில் வைத்து தாலிகட்டும் மணமகன். அதற்கு ஒரு சிறு மறுப்புகூட தெரிவிக்காமல் சந்தோஷமாய் தாலி ஏற்கும் மணமகள். முதல் நாள் இரவிலும் அதே பிரச்சனை. தொடர்ந்து மூன்று மாதங்கள்… வீட்டுப் பெரியவர்கள் ஸாரி என்று ஒரு வார்த்தையில் முடிக்கிறார்கள். படிச்சிருக்கே, யோசிக்கிற….எல்லாத்தையும் அனுசரித்து போகணும் என்ற வார்த்தைகள்.
தொடர்ச்சியாக அந்த குழந்தை என்று சொல்லப்படும் சிறுவன் பண்ணும் அழிச்சாட்டியத்தில் தாத்தாவின் அறைக்கு நகரும் ஜோடி, பெரிதாய் சப்தம் கேட்டு அந்த அறையை விட்டு வெளியே வரும்போது, கிட்டத்தட்ட 30பேருக்கும் மேல வெளியே இருக்கும் உறவுகள். இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று ஏறஇறங்க பார்க்கும் கண்கள். அவர்களின் கற்பனைக்குள் நடக்காத அந்த உறவு பற்றிய விவரங்கள்.
படத்தில் குழந்தையின் அன்பு, மாமாவின் அன்பு அக்காவின் ஆளுமை. எல்லாம் தாண்டி மனைவி என்ற ஒரு கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட வில்லியாக சித்தரித்து. அதுவும் கல்யாணம் ஆனாலே இப்படிதாண்டா.. நிம்மதி போயிடும் என்ற காட்சிக்கு முந்தைய காட்சியில்,
வீட்டுலே இத்தனை நாளா நடக்கறது கூட எனக்குப் பெரிய விஷயமா படலை. ஆனா எனக்கு இதுலே எத்தனை வருத்தம் இருக்கும் ஏன் ஸாரி, நானிருக்கிறேன் விடு பார்த்துக்கலான்னு சொல்லலைன்னு மனைவி கேட்கிற கேள்விக்கு, இது ஒரு பெரிய விஷயமா எனக்கு ஸாரி கேட்கத் தோணலைன்னு கணவனின் பதில்…அதற்கு அவள் கோபப்பட்டு இறங்கிப் போவதைப் போன்ற காட்சிக்குப் பிறகுதான்…மேற்கண்ட கல்யாணம் பண்ணா எவன் நிம்மதியா இருக்க முடியும் என்ற காட்சி.
பெரும்பாலும் இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு, கல்யாணம் ஆகி சிலவருடங்களுக்குப் பிறகு, அதான் இரண்டு பெத்துட்டாங்க இல்லை இன்னும் என்ன ? என்ற கேள்விகளை சந்திக்காத தம்பதிகளே இருக்க முடியாது. தாம்பத்தியம் என்பது வெறும் ஒரு அறைக்குள் மட்டும்தானா.
தன் கணவன், தன் கணவனின் குடும்பம், தன் கணவனின் உறவுகள் என்று வாழவேண்டும் என்று சொல்லப்படும் பெண்ணிற்கு, தன் கணவன் என்று சொல்லிக் கொள்ளும் சுதந்திரத்தை கணவனே தருவதில்லை. இதேபோல் அந்த பெண்ணிற்கும் ஒரு அன்பான உறவு இருந்திருக்கலாம் அல்லவா அது அக்காவோ, தங்கையோ, ஏன் அம்மாவாகவோ இருந்திருக்கலாம். அதையும் விட்டுத்தானே அவளும் வருகிறாள்.
மனைவிக்கு கணவன் முக்கியமானவனாக இருக்கவேண்டும். ஆனால் கணவனுக்கு மனைவி மேஜைமேல் விரிக்கப்படும் ஒரு அலங்காரப் பொருளாய் மட்டுமே இருக்கிறாள். என் மனைவி என்றும், நான் ஆண்மகன் என்று சொல்லிக்கொள்ளும் கெளரபோர்வை அவள்.
தன் குழந்தையை கவுன்சிலிங் கூட்டிப் போக சொல்லிவிட்டாள் என்று தம்பி மனைவியின் மேல் கோபப்படும் அக்கா. கல்யாணம் ஆனதும் பொண்டாட்டி பேச்சை கேட்குறே என்று சொல்லி தம்பியை திட்டுகிறாள். ஆனால் பிரச்சனை பண்ணாதேம்மா என்று சொல்லும் கணவனை கண்களாலேயே அடக்குவதைப் போன்ற காட்சி. அம்மா, அக்கா, மனைவி,பெண் என்ற எல்லா இடத்திலும் தனக்கே முன்னுரிமை தரவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்சனை. தன் மகளுக்கு பணிவிடைகள் செய்யும்போது உச்சிக் குளிரும் மாமியார்கள். தன் மருமகளுக்கு மகன் செய்யும் சிறு புன்னகையைக் கூட ஒப்புக்கொள்ள முன் வருவதில்லை. எல்லாம் தனக்கானது என்ற குணம். எல்லாரையும் சொல்லவில்லையென்றாலும் பலர் இப்படிதான் இருக்கிறார்கள்.
வீட்டுலே என்னால பிரச்சனை வேண்டாம்பா….நானே எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேட்கறேன்னு மனைவி சொல்லும்போது கணவனின் முகத்தில் அப்பிடியொரு பூரிப்பு. அதுவும் எப்படிப்பட்டவர்களிடம் இருந்து. தன் பிள்ளைக்காக, தம்பி இறந்துவிட்டான் என்று பூ போட்டு கும்பிடும் அக்கா, நான் கணவன் குடும்பம் என்று இருக்கிறேன் ஆனால், என் தம்பி அவன் மனைவிக்கோ பிறக்கும் குழந்தைக்கோ எந்த சந்தோஷத்தையும் தரக்கூடாது என்று நினைக்கும் அக்காவிற்கு. அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று தப்பு செய்யாத மனைவி சொல்லும் போது சந்தோஷமாய் தலையசைக்கும் கணவன்.
மனைவியின் பிரசவத்தின் போது, என் தம்பி பிள்ளையை நான் பார்க்கிறேன் என்று உரிமை கொண்டாடும் அக்கா, தம்பி வந்ததும், உனக்காக நான் எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேட்கிறேன்னு என்று சொல்லும் இடத்தில், நீ ஏன்கா மன்னிப்பு கேட்கணும் என்று பொங்கும் தம்பியிடம் ஒரேயொரு கேள்வி.
ஊரான் பெண் என்றால் அத்தனை இளப்பமா….? மனைவி என்றாகிவிட்டால், அத்தனை இளக்காரமா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
தாலி கட்டும்போது கூட நான்தான் கட்டுவேன்னு சொல்ற பையன், நீ அத்தைக்கு செயின் போடு தான் தாலிகட்டுறேன்னு சமாதானம் செய்யறதும்….ரொம்பவே டூமச்.
நீங்க குடும்பத்து மேல வைச்சிருக்கிற அன்பைப் பார்த்துதான் உங்களை லவ் பண்ணேன். பிரச்சனை வீட்டில் நடக்கிறது இல்லை. என்கிட்டே ஒரு ஸாரி கேட்கணுன்னு உங்களுக்குத் தோணலையே அதுதான். எனக்கு அது கூட பெரிசு இல்லை. அவர்கிட்டே கொஞ்ச நேரம் பேசணும், தோள்ல சாஞ்சிக்கணும், ஒண்ணா நடக்கணும் இது கூட நடக்கலைன்னு வருத்தப்படற மனைவியோ அன்போ, கணவன் உயிரோட இருக்கும்போது போட்டோக்கு மாலை போட்டியே என்ற கோபத்தில் அவனுக்கு கணவன் மேல் உள்ள அன்பை புரிந்து கொள்ளும் இடமோ படத்தில் இல்லவே இல்லை.
ஆனால் அதற்கு பதில் கடைசி காட்சியில் கூட, பிறந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க சூரி தன் அக்கா மகனைத்தான் மனைவியின் பிரசவ அறைக்கு அனுப்புகிறார். தன் அக்கா மகன் பிறந்த போது தான் எப்படியெல்லாம் பேசினேனோ அதையெல்லாம் அந்த சிறுவன் பேசும்போது புளகாகிதம் அடைகிறார். அந்த சிறுவனின் நடவடிக்கைகள் பார்த்து கதாநாயகி அழுது கடைசியில் தான் செய்ததுதான் தவறோ என்று அவருக்கு ஒரு கில்ட் ஏற்படுத்தி…..போனா போகுதுன்னு ஒரே வார்த்தை நானும் யோசிச்சிருக்கலாம் என்று சூரி பேசுகிறார்.
அப்படியும் குழந்தைக்கு பேர் வைக்கும்போது, அந்த சிறுவன் நடுவில் நிற்பதும், மனைவியின் சகோதரனை விடுத்து அந்த சிறுவனுக்கு முதலிடம்தந்து தான்தான் மாமன் என்று சொல்ல வைத்திருப்பதும், இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு நீ உன் பொண்டாட்டிக்கிட்டே எப்படி கஷ்டப்படப்போறியோன்னு டயலாக் வருவதும்….
அதென்னவோ…மேடைப்பேச்சில், நகைச்சுவைத் துணுக்கில் எல்லாம் மனைவிகளை மட்டம் தட்டி எழுதுவது காலங்காலமாக ஒரு பேஷனாகிவிட்டது. மாமியார்களை வில்லிகளாகவும், மருமகள்களை குடும்பத்தை பிரிப்பவர்களாகவும் காட்டினால்தானே சீரியலும் பிடிக்கிறது.
தன் குடும்பம் அதன் சந்தோஷம், தன் திருப்தி …. வந்தவர்கள் அனுசரித்து செல்லவேண்டும் என்று நியாயமான பிரச்சனைகளுக்கு கூட குரல் கொடுக்காமல் இருக்கும் பல ஆண்களை திரையில் பிரதிபலிக்கிறார் சூரி. அன்பையும், காதலையும் தேக்கி வைத்து குறைந்தபட்ச கோபத்தில் அதை வெளிப்படுத்தும் பெண்ணாக ஐஸ்வர்ய லட்சுமி. கடைசிவரையில் அவரை குடும்பத்தில் ஒரு வில்லியைப் போல, அக்கா, அக்கா மகன், மாமன் உறவைப் பிரிக்க வந்தவளாக பார்க்கப்படும் இடங்களில், இவர்கள் அன்புக்காக, அது பிரிந்ததற்காக வருத்தப்படத் தோன்றவே இல்லை. உண்மையில் வருத்தப்பட வேண்டிய கதாபாத்திரம் ஐஸ்வர்யலட்சமிதான்.
சூரி மற்றும் அந்த சிறுவனின் பாத்திரப்படைப்பு கண்களில் நீரை வரவழைத்தாக பலர் எழுதியிருந்தார்கள். என் வரையில் யாருடைய அன்பையும் புரிந்துகொள்ளாமல் தனக்குண்டான சந்தோஷத்தை தேவையை தக்க வைக்கும் பாத்திரங்களாக வெறுப்பே மிஞ்சியது.
எந்த திரைப்படத்திற்கும் விமர்சனமோ கருத்தோ நான் எழுதியதில்லை. இந்த படம் பார்க்கும்போது தோன்றிய ஆதங்கத்தை மட்டுமே ….எழுதியிருக்கிறேன்.
— லதா சரவணன் – எழுத்தாளர்.
உங்கள் கருத்து மிகவும் சரியான ஒன்று.எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. நடக்காதது ஒன்றையோ புதுமையான ஒன்றையோ காட்டவில்லை.சமூகம், உறவுகள் மாறவேண்டும் எனில் மருமகளாக வருபவரை துணிவானவராக காட்டினால் நல்லதாக இருக்கும்.