அண்ணாமலை சொல்வது பழைய டேட்டா … அப்டேட் செய்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
மாணவர்களின் நலன் சார்ந்து அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தால், அந்த கருத்து ஏற்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை சத்திரப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, திறன்மிகு வகுப்பறையில் மாணவர்களை பேச வைத்து ரசித்தார்.
தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அமைச்சர் அன்பில்மேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக, அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு, ”இந்த ஆண்டு மட்டும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்து குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இன்னும் புதிய தரவுகள்அடங்கிய அறிக்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் வெளியிடப்படவில்லை. அரசு பள்ளி என்பது சேவை அடிப்படையில் செயல்படக்கூடியது.
தனியார் பள்ளி என்னதான் கல்வியை போதித்தாலும், அவர்கள் இலாப நஷ்ட கணக்கு பார்க்கக்கூடியவர்கள். வெறும் நான்கு குழந்தைகள் இருந்தாலும் அந்த நான்கு குழந்தைகளுக்காக ஒரு கட்டிடம் கட்டுவோம். ஆசிரியரை நியமிப்போம். சேவை மனப்பான்மையோடு அரசு செயல்படும். மாணவர்களின் நலன் சார்ந்து அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தால், அந்தகருத்து ஏற்கப்படும்.
எங்களுடைய நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, சசிகாந்த் எம்.பியை சந்தித்தார். நாங்கள் ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் எங்கள் உரிமை குரலை நிலை நாட்டினாலும் கூட்டணி கட்சி எம்.பி.யான சசிகாந்த் செந்தில் நாடாளுமன்ற கவனத்தை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். சசிகாந்த் செந்தில் எம்.பி. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஒரு இளைஞனாக, அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு தனக்குரிய முறையில் போராட்டத்தை நடத்தியிருந்தார்.
முதலமைச்சர் ஜெர்மனியில் இருந்தாலும் சசிகாந்த் செந்தில் எம்.பி.யின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியை உடனடியாக அனுப்பி வைத்தார். சசிகாந்தாக இருந்தாலும் சரி, அன்பில் மகேஷ் பொய்யா மொழியாக இருந்தாலும் சரி, ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து மக்கள் குரலாக மக்கள் இயக்கமாக மாறி அப்படியாவது மத்திய அரசு பள்ளிக் கல்வி நிதியை விடுவிப்பார்களா? என்ற ஏக்கம் தான் எங்களுக்கு உள்ளது” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.