செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயற்கைக்கால்களை வழங்கினார்.
அப்போது மாற்றுத்திறனாளி மாணவனுக்கு செயற்கை காலை மாவட்ட ஆட்சியர் வழங்கிய பின்னர் அதனை அவரது கையால் மாணவனுக்கு பொருத்தியதை தொடர்ந்து மாணவனின் கையைபிடித்து நடந்து வருமாறி கூறி நடக்க வைத்தார். அப்போது மாணவன் சிரிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் மாணவனிடம் பெயரை கேட்டறிந்து மகிழ்ச்சியாக உள்ளதா என கேட்டார். இதனைத்தொடர்ந்து செயற்கை கால்களை வாங்க வந்த மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களிடம் உங்களுக்கு உதவி தொகை வருகிறதா என கேள்வி எழுப்பினார். அப்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளி மாணவருக்கு செயற்கை கால் வழங்கியதோடு அவரது கையைப்பிடித்து மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.