இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
வேஷ்டி, சேலை மற்றும் அதிமுகவின் சாதனை நோட்டீஸ்களை டாக்டர் சரவணன் பொதுமக்களுக்கு வழங்கினார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமண நாளை முன்னிட்டு டாக்டர் சரவணன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில், “சட்டமன்ற தேர்தலை ஒட்டி இல்லம் தோறும் எடப்பாடியார் என்கிற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று மக்களை எழுச்சி பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம். எழுச்சி பயணத்தில் திமுக செய்த வஞ்சகத்தையும், அதிமுக செய்த சாதனைகளை எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்