மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு புதியதாக சிலை வைக்க அனுமதி இல்லை – கமிஷனர் கறார் !
இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு புதிதாக சிலை அமைக்க இடம் அனுமதி இல்லை என மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன் அறிவித்திருக்கிறார்.
மதுரையில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மதுரையின் அனைத்து சரகத்தின் கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் செல்போன் தொலைந்தது தொடர்பாக புகார் கொடுத்து கண்டுபிடிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ரூபாய் 44,85,000 மதிப்புள்ள செல்போன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரலில் ரூபாய் 41,70,000 மதிப்புள்ள, 278 செல்போன்கள் தவறவிட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது 299 செல்போன்களை தவறவிட்ட அந்தந்த உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஒப்படைத்தார்.
மேலும், கமிஷனர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தங்களது மொபைல் போன்கள் போன்ற உடமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமிஷனர் லோகநாதன், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அதே இடங்களில் சிலை நிறுவிக் கொள்ளலாம். புதிய இடங்களுக்கான அனுமதி இல்லை என்பதாக தெரிவித்திருக்கிறார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்