மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு உலகத் தமிழ் மாமணி விருது !
புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின நாள் பன்னாட்டு உலக சாதனைக் கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் சத்தியமூர்த்திக்கு உலகத் தமிழ் மாமணிவிருது வழங்கப்பட்டது.
தேசியக் கல்வி அறக்கட்டளையும் சென் நெக்சஸ் குழுமமும் இணைந்து ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 4 – வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை ஐம்பெரும் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் சத்தியமூர்த்தியின் இலக்கியப் பணிகளையும் உலகு தழுவிய நிலையில் தமிழ் மொழிக்கு ஆற்றி வரும் தொண்டினையும் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் மாமணி என்ற விருதினை விழங்கினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சென்னை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சந்தோசம், திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் முத்து ஆகியோர்கள் இணைந்து விருதினை வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்வில் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் முகமது முகைதீன் மற்றும் புதுச்சேரி சென் நெக்சஸ் குழுமத்தின் இயக்குநர் முனைவர் கவிதா செந்தில்நாதன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள்; மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.