முறைகேடு புகார் எதிரொலி : ராஜினாமா செய்த மேயர் ! அடுத்து கைது !
மதுரை மாநகராட்சியில் வரி நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியின் 2-வது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்திய போது 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இந்த வரி முறை கேடு முழுவதும் அதிகாரிகளின் கடவுச்சொற்களை முறைகேடாக பயன்படுத்தி வரிகுறைப்பு செய்தது ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அப்போதிருந்த ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
இந்த வழக்கு மத்திய குற்றபிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்பு குழுதலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் ஒப்பந்த ஊழியர் செந்தில் பாண்டி ஆகியோரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மநாகராட்சிக்கு உதவிஆணையாளராக சென்று பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டார். மேலும், மதுரை மாநகராட்சி வரிமுறைகேடு வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் தலமையிலான விசாரணைகுழு தீவிரமான விசாரணை நடத்தி அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்தனர்.
இதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சியின் 2-வது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரிமுறைகேடு காரணமாக நடைபெற்று வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக நாளை மறுநாள் அவசரகூட்டம் துணைமேயர் தலைமையில், நடைபெறுகிறது. தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மேயர் இந்திராணியும் கைது செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.