மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !
உலக அளவில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் அடையாளமாகவும் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்திருப்பது, தமிழ் ஆர்வலர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
”இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது. இருந்தபோதும் எல்லா கோயில்களிலும் சமஸ்கிருதத்தை மட்டும் பயன்படுத்தி குடமுழுக்குகளை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கின் போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த ஏதுவாக, ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ள குடமுழுக்கு சம்பந்தமான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை கேட்டுப் பெற்று செயல்படுத்த வேண்டும். அதேபோல, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.” என்ற கோரிக்கைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், தமிழ் ஆர்வலரும் வழக்கறிஞருமான கரூரை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தி, “சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை. இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக வரலாறு உள்ளது. அந்த பொற்றாமரைக் குளத்துக்கு தமிழ் இருக்கை என்கிற பெயரும் உள்ளது. தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரை என்பதால், புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கின்போது, மற்ற கோயில்களை விட தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

இதற்கு முன் கோயில் குடமுழுக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டிருப்பதோடு, வழக்கை ஜூன்-02 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பான உத்தரவு நகல் தமிழிலும் வழங்கப்படும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக இத்திருக்கோயில் அமைந்திருப்பது மட்டுமின்றி; பாண்டியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்களுள் இது முதன்மைத் தலமாக இருந்திருக்கிறது. இவ்வாறு பல்வேறு வரலாற்றுப் பெருமைகளோடு, தமிழகத்தின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் திருக்கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்தாலும், தமிழில் குடமுழுக்கு என்ற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது நிச்சயம் சாபக்கேடுதான். இந்த நெடுநாள் அவலம் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வழியாக மாற்றம் காணப்போகிறது என்ற செய்தி தமிழார்வலர்கள் மத்தியில் பெருமகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
— மித்ரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.