வறண்டுக் கிடக்கும் 58 கால்வாய்கள்! எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட 58 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் விவசாயிகள் , விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு முகாமில் கோரிக்கை மனு அளித்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி கொள்ளளவை எட்டும் போது, 58 கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதே கோரிக்கையை முன் வைத்து சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசி உள்ளதாகவும், ஆனால் இதுவரை எங்களது கோரிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் உசிலம்பட்டி விவசாயிகள் மற்றும் மக்களின் நலனுக்காக 58 கால்வாய் தண்ணீர் திறப்பது சம்பந்தமான அரசாணையை வெளியிடக் கோரி தமிழக முதல்வரை விவசாய சங்க நிர்வாகிகளுடன் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உசிலம்பட்டி பகுதி மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமங்களை சந்திப்பதாக எம்.எல்.ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்