பட்டா இருக்கு … ஆனா இல்லை … வெத்து பேப்பர நீங்களே வச்சிக்கோங்க !
அரசு வழங்கிய பட்டா வீட்டு மனை பட்டா முறைகேடு
மதுரை மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் கல் கூட ஊன்ற முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகக் கூறி அரசால் வழங்கப்பட்ட பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்பதற்காக வந்த கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பட்டா எதுக்கு தந்தாங்க? அதனால் எந்த பலனும் இல்லை என கிராமத்தினர் கேள்வி எழுப்பினர். மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த வீட்டுமனை பட்டாக்களை கடந்த ஆண்டு ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார். இந்த வீட்டுமனை பட்டா என்பது 3 ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை வருவாய்த் துறையினர் மூலமாக அளந்து கொடுக்கப்பட்ட நிலையில், பட்டா இடத்தில் கற்கள் ஊன்றியுள்ளனர். இந்நிலையில் அரசு வழங்கிய பட்டா இடத்தில் அடுத்தடுத்து சில நபர்கள் உள்ளே புகுந்து ஏற்கனவே ஊன்றிய கற்களை உடைத்து எரிந்துவிடுவதாகவும், மேலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பட்டா பெற்று 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் வீடு கட்ட முடியாத சூழலில் தங்கள் தினந்தோறும் அச்சத்தில் உள்ளதாகவும், ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது துணை முதலமைச்சராலும் வழங்கப்பட்ட நிலையிலும் தங்களால் தங்களது பட்டா இடத்தில் வீடு கட்ட முடியாத நிலை உள்ளதாகவும் தங்களுக்கான பட்டா இடத்தில் வீடு கட்டுவதற்கான உரிய பாதுகாப்பு அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் பட்டாவை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி வடக்கு நாவினிப்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வருகை தந்து பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை முதலமைச்சரால் வழங்கிய பட்டாவை மீண்டும் ஆட்சியரிடமே ஒப்படைக்க வந்த பயனாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பயனாளிகள் எடுத்துக்கூறினா்.
இது குறித்து பேசிய பயனாளிகள், “அரசு பட்டா கொடுத்த இடத்தில் கற்களை கூட ஊன்ற விடாமல் அங்குள்ள மக்கள் எங்களை தடுக்கின்றனர். கல்லை பிடுங்கி போட்டு விடுகிறார்கள். அரசு எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசுஎங்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டி தர வேண்டும் என்றார்.

கலைஞர் இருக்கும் போது கக்கன் மணிமண்டபம் திறக்கும் போதும் நாவினிபட்டியில் 218 பேருக்கு பட்டா கொடுத்தார்கள் இன்று வரை இடத்தை அளந்து கொடுக்கவில்லை. இதையடுத்து நிறைய பயனாளிகள் இறந்து விட்டார்கள். இதனையடுத்து மீண்டும் 2024 ஆம் ஆண்டு புது பயனாளிகள் தேர்வு செய்து மீண்டும் பட்டா கொடுத்தார்கள். இப்போது பட்டா இடத்தில் அளந்து கொடுக்கப்பட்டு கற்கள் ஊன்றியும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது மூன்று ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால், அரசு உரிய பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.