கருத்தடை எனும் பெயரில் அநீதி ! நாய்களை வைத்து போராட்டம் ….
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சுயேச்சை மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நாய்களுடன் நூதன போராட்டம் நடைபெற்றது. தெரு நாய்களுக்கு கருத்தடை என்ற பெயரில் நாய்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் கொலை செய்கிறது, முறையான பாதுகாப்பில்லாத கருத்தடைகளை மேற்கொள்வதன் மூலமாக தெருநாய்கள் உயிரிழக்கிறது.
4 மாதம் முதல் 1 வயதுகூட நிரம்பாத நாய்க்குட்டிகளை கருத்தடை எனும் பெயரில் மாநகராட்சி கொலை செய்து வருகிறது. புகாருக்கு உள்ளான நிறுவனத்தை வைத்து மாநகராட்சி நிர்வாகம் நாய்களுக்கு கருத்தடை முகாம்களை நடத்தி வருகிறது. மதுரை மாநகராட்சி தெரு நாய்களை தத்தெடுக்கும் முகாம்கள் அதிகப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயனுக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறுகையில். மதுரை மாநகராட்சி தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளன, தெரு நாய்கள் குறித்த எந்தவொரு கணக்கெடுப்பும் மாநகராட்சி நிர்வாகத்திடம் இல்லை, கருத்தடை எனும் பெயரில் தெருநாய்களை கொலை செய்கிறது, மாநகராட்சி நடத்தும் கருத்தடை மையங்களை மூட வேண்டும், அதற்குபதிலாக மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள் தத்தெடுப்பு முகாம்களை நடத்த வேண்டும்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்