அங்குசம் பார்வையில் ‘மகா அவதார் நரசிம்மா’
தயாரிப்பு : ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய். திரைக்கதை-இயக்கம் : அஸ்வின்குமார், ஆர்ட் & கான்செப்ட் : க்ளீம், இணைத் தயாரிப்பாளர்கள் : சுபாஷ் சந்திர தவான், துர்கா பலுஜா, எழுத்து : ஜெய பூர்ணாதாஸ், கூடுதல் திரைக்கதை-வசனம் : அஸ்வின் குமார், ருத்ரா பி.கோஷ், படத்தொகுப்பு : அஜய் வர்மா & அஸ்வின் குமார், இசை : சாம்.சி.எஸ். முதன்மை நிதி ஆலோசகர் : ரஜத் சாப்ரா, தலைமை தொழில்நுட்ப அதிகாரி : சாமி மகாஜன், சி.ஜி.சூப்பர்வைசர் : மனிஷ்குமார் மண்டல், எஸ்.எஃப்.எக்ஸ் : கரண் அருண்சிங், சவுண்ட் மிக்ஸிங் : கண்ணன் கண்பத். பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு, ஆன்மீக அன்பர்களால் நம்பப்பட்டு, பரப்பப்பட்டு வரும் இரணியனை வதம் செய்த நரசிம்மரின் கதை தான் இந்த ‘மகா அவதார் நரசிம்மா’. நடிகர்கள்—நடிகைகள் யாருமே இல்லாமல், முழுக்க முழுக்க அனிமேஷன் எஃபெக்ட்டில் இரண்டு மணி நேர சினிமாவாக தயாரித்து இந்தியா முழுவதும் ரிலீஸ் பண்ணியுள்ளார்கள்.
அசுரகுலத்தின் அரசன் இரணியனின் கடுமையான தவத்தை மெச்சி ஏடாகூடமான வரத்தை பிரம்மன் கொடுத்த பிறகு நடக்கும் இரணியனின் அட்டகாசங்களால் கடவுள்களின் லோகமே கதிகலங்கிப் போகிறது. தனது சாம்ராஜ்யத்தில் நரசிம்மனை யார் வழிபட்டாலும் மரண தண்டனை விதிக்கிறான் இரணியன். ஆனால் அவனுக்குப் பிறக்கும் பக்த பிரகலாதனோ எந்நேரமும் நரசிம்மரையே நினைக்கிறான், பூஜிக்கிறான். இதனால் டென்ஷனாகும் இரணியன், ஐந்து வயது பாலகன் பிரகலாதனைக் கொல்ல பல வழிகளிலும் முயற்சிக்கிறான்.
வழக்கம் போல க்ளைமாக்ஸில் சிங்கவடிவில் எண்ட்ரியாகி, இரணியனின் குடலை உருவிக் கொல்கிறார் நரசிம்மர். சிங்கமுக நரசிம்மர் எண்ட்ரியாகும் போது, தியேட்டரே அதிரும் அளவுக்கு மாஸ் பில்டப் சாங் போட்ருக்காரு நம்ம சாம் சி.எஸ்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்திற்காக பல கோடிகளை செலவு செய்து கடவுள் நம்பிக்கையை விதைத்துள்ளது இப்போதும் சனாதன வெறியர்களிடம் மங்காமல் இருக்கும் மனுதர்மம்.
கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு நல்லதொரு விஷுவல் ட்ரீட். மற்றவர்களுக்கு… ?
கடவுளுக்கு மார்க் போட முடியாது என்பதால் நாம் அதைத் தவிர்த்துள்ளோம்.
— மதுரை மாறன்