அங்குசம் பார்வையில் ‘மகாசேனா’
தயாரிப்பு: ‘மருதம் புரொடக்சன்ஸ்’, டைரக்டர்: தினேஷ் கலைச்செல்வன், ஆர்டிஸ்ட்: விமல், சிருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா, விஜய் சேயோன், ஜான் விஜய், கபீர் துஹான்சிங், யோகி பாபு, ஆல்பிரட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிறுமி இலக்கியா. ஒளிப்பதிவு: மானஸ்பாபு, இசை: பிரவீன் குமார், எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன், ஆர்ட் டைரக்டர்: வி.எஸ்.தினேஷ்குமார், ஸ்டண்ட்: ராம்குமார், பி.ஆர்.ஓ.: ரேகா
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கனி மலையில் [ இது எங்க இருக்குன்னெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா டைரக்டர் அதைப் பத்தி சொல்லவேயில்லை] இருப்பவர்கள் சாஃப்டான சாமியைக் கும்பிடுபவர்கள். அவர்களெல்லாம் நல்லவர்கள். அடிவாரத்தில் இருக்கும் மக்களெல்லாம் ஆங்கார சாமியைக் கும்பிட்டு நரபலி கொடுக்கும் கெட்டவர்கள். 3000 ஆண்டுகளாகியும் அவர்களுக்குள் பகை நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நேரத்திலே அடிவாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை மலையில் இருக்கும் இளைஞன் காதலிக்கிறான். ஆனால் அடிவாரக் கும்பலோ, காதலனின் அப்பாவைப் போட்டுத் தள்ளிவிட்டு, மலைமக்கள் கும்பிடும் யாளி சிலையைத் திருட முயற்சிக்கிறார்கள். அந்த சிலையைக் காப்பாற்றி, தனது மகனிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சாகிறார் அப்பா.
அந்த மகன் தான் மலைமக்களின் தலைவன் செங்குட்டுவன் [ விமல்]. அடிவார அரக்கர்களின் தலைவி கங்கா [ மஹிமா குப்தா]. முழு நிலவு தோன்றும் சித்ரா பவுர்ணமி அன்று தான் அந்த யாளி சிலை கண்ணுக்குத் தெரியும். அதன் பின் அதன் சக்தி கிடைத்தால் எல்லாம் சுபிட்சமாக நடக்கும். எனவே அந்த சிலையை மலைமக்களிடமிருந்து அபகரிக்க மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சிக்கிறது அரக்கர் கூட்டம். அதைக் காப்பாற்ற போராடுகிறான் செங்குட்டுவன். இவனின் மகா சேனா ஜெயித்ததா? அரக்கர் கூட்டம் ஜெயித்ததா? இதான் இந்த ‘மகாசேனா’வின் கதை.
படிக்கிறதுக்கு கதை நல்லாருக்குல்ல. ஆனா டைரக்டர் தினேஷ் கலைச்செல்வன் திரைக்கதையை திக்குத் தெரியாமல் கொண்டு போய் நம்மை ரொம்பவே திக்குமுக்காட வச்சுட்டாரு. படம்மொத்தமும் அமெச்சூர்த்தனமாகி மகாசேனாவை சோர்வாக்கிவிட்டது.
ஹீரோ விமலிடம் ஏழெட்டு நாள் கால்ஷீட், சிருஷ்டி டாங்கேவிடம் அஞ்சாறு நாள் கால்ஷீட், யோகிபாபுவிடம் ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி மகாசேனாவை மெகா சேனாவாக்கிரலாம்னு நினைச்சுருப்பாரு. என்ன பண்றது பானையில இருந்தாத் தானே கரண்டில வரும்.
எண்ட்ரி சீனில் யானை மேல் அமர்ந்து விமல் வரும் போது பிளிறல் சத்தம் பேக்ரவுண்ட்ல ஓகே. அதுக்காக அவர் சாதாரணமா நடந்து வரும் போதெல்லாம் பிளிறலைப் போட்டு நம்ம அலற வைக்கிறார்கள் டைரக்டரும் சவுண்ட் டிசைனரும். விமல் வளர்க்கும் சேனா என்கிற யானைக்கு மதம் பிடித்து நிற்கும் போது இருபதடி தூரத்தில் தான் அவரின் மகள் அல்லி [ இலக்கியா] நிற்கிறார். ஆனால் அவரைக் காப்பாற்ற எங்கிருந்தோ ஓடி வந்து, “ச்ச்சூ…ச்ச்சூ…” என மாட்டை விரடுவது போல் விரட்டி மகளைக் காப்பாற்றுகிறார் விமல். அப்புறம் அந்த யானை சங்கிலியை அத்துக்கிட்டு ஓடுனதும் நாலஞ்சு பேரோட மலைப்பகுதிக்குப் போய் , “நீ அங்கிட்டுப் போ..” “ நீ இங்கிட்டுப் போ..” “நீ காட்டுக்குள்ள போய்ப்பாரு” என்கிறார் விமல். க்ளைமாக்ஸ்ல வில்லன் கும்பலுடன் சண்டை போட்டு, அரக்கர்களின் தலைவி மஹிமாவுடன் சமாதானமாகிறார் விமல். அவ்வளவு தான் கால்ஷீட் முடிஞ்சது.
விமலுக்கே வேலை இல்லேங்கும் போது சிருஷ்டி டாங்கேவுக்கு பெருசா என்ன வேலை இருந்துரப் போகுது? வனத்துறை ஆபீசராக ஜான்விஜய் இம்சை ஒருபக்கம்னா… க்ளைமாக்ஸ்ல கோட்-சூட் போட்டுக்கிட்டு, குபீர்னு குதிக்கும் கபீர் துஹான் சிங்கின் மேனரிசம் மகா எரிச்சல் ரகம். மஹிமாவின் கணவன் இடும்பனாக வரும் விஜய் சேயோன், உண்மையிலேயே சதை மலை போல் இருக்கிறார். இது நமக்கெல்லாம் இருப்பது போல இயற்கையான சதை—எலும்பு—நரம்பு தானா? இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சதான்னு தெரியல?
‘மகாசேனா’ –மெகா சோதனை.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.