சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் ! எஸ்.பி. அதிரடி !
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது
விருதுநகர் மாவட்டத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் மீது அரசியல்வாதிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட போலீசார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக்கோட்டையில் விஜய கரிசல்குளம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 9- ம் தேதி பொன்னுப்பாண்டி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த விபத்து காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் அப்போது பொதுமக்கள் முன்னிலையில் இனி சட்ட விரோத பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால் நானே நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்துதான் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு முக்கிய காரணமாக இருந்த பொன்னுப்பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ராவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்ததன் பேரில் பொன்னுப்பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது போன்ற காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக நடவடிக்கையால் இனி வரும் காலங்களில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியால் ஏற்படும் விபத்துகளும் உயிர் பலியும் குறையும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.