புத்தகங்களையும் எழுதுகோலையும் ஆயுதமாக்கிய மலாலா ! ( 11 )
கண்ணெதிரே போதிமரங்கள்! ( 11 ) (அறியவேண்டிய ஆளுமைகள்)
திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது என்று என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறார். ஒரு பெண் கல்வி குறித்துப் பேசுவதா? என்று அதிர்ச்சியும், கோபமும் அடைந்த தலிபான்களின் துப்பாக்கிகள் மலாலாவைக் குறி வைக்கின்றன.
1997 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் நாள் பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புறமான பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோராவில் பிறந்தார் மலாலா யூசுப்சாய். ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் பெண்கள் படிக்க கூடாது, பள்ளிக்கு செல்ல கூடாது, ஆண்களுடன் பேச கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர்.

அதை எதிர்த்து தனது 11 வயதில் மலாலா பகிரங்கமாகக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தலிபான்களின் ஆணாதிக்கத் தீவிரவாதத்தை எதிர்;த்தும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தாள். இதில் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் மலாலா பள்ளி செல்லும் போது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இவரோடு சேர்த்து வேறு இரண்டு பேரும் அப்போது சுடப்பட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். பிர்மிங்காம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்ற சிறுமி மலாலா, தான் உயிர் பிழைக்க உலகளவில் வேண்டிய கோடிக்கணக்கான மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். கல்விக்காக போராடிய சிறுமி மீது தீவிரவாதிகள் நேரடியாக தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
மலாலா உயிர் பிழைக்க உலக மக்கள் வேண்டி கொண்டு பெரும் ஆதரவு தெரிவித்தனர். மருத்துவமனை அறிவிப்புப் பலகையில் ஆயிரக்கணக்கான மக்கள் மலாலாவுக்கு பாராட்டு தெரிவித்து எழுதிவிட்டு சென்றனர். ஆயிரக்கணக்கானோர் பரிசுகள், வாழ்த்து அட்டைகளை அனுப்பினர்.

இதனால் நெகிழ்ந்து போன மலாலா சார்பில் அவளுடைய தந்தை ஜியாவுதீன், உலகளவில் மக்கள் அளித்த ஆதரவு, மலாலாவுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. இதற்காக மனப்பூர்வமாக மலாலாவும் எங்கள் குடும்பமும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
சுகம் பெற்ற மலாலா லண்டன் பிர்மிங்ஹம் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மலாலாவை ஐக்கிய நாடுகள் சபையின் உலக கல்வி சிறப்புத் தூதரான கார்டன் பிரவுன் ஐ.நா சபையில் உரையாற்ற அழைக்கிறார். தாக்குதலுக்குப் பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி அது.
மலாலாவின் பேச்சைக் கேட்க நூறு நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் திரண்டு வந்திருந்தனர். மலாலாவின் குடும்பமும் அவர்களோடு அமர்ந்திருந்தது.
பாரம்பரிய பிங்க் வண்ண சல்வார் கமீஸ் உடையின் மேலே முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஷால் ஒன்றை அணிந்திருந்த மலாலா, தனது உரையை இஸ்லாமிய இறைவணக்கத்துடன் ஆரம்பித்தாள்.
எங்கிருந்து என் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நான் என்ன சொல்லவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. தன்மீது உலகம் கொண்டிருக்கும் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் என்னை இத்தனை நேசிக்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகம் முழுவதிலிருந்தும் எனக்கு ஆயிரக்கணக்கான வாழ்த்துச்செய்திகள் வருகின்றன. அனைவருக்கும் என்னுடைய நன்றி. தங்களது எளிமையான வார்;த்தைகளால் எனக்குத் தெம்பூட்டிய குழந்தைகளுக்கு சிறப்பான நன்றி. வயதில் மூத்தவர்களின் பிரார்த்தனை எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அவர்களுக்கும் என் நன்றி.
நான் இப்போது குரலை உயர்த்திப் பேசுவது என்னால் அது முடியும் என்பதற்காக இல்லை. இப்படிக் குரல் கொடுக்க முடியாதவர்களின் குரல்களும் கேட்கப் படவேண்டும் என்பதற்காகத்தான்.
தாலிபன் தீவிரவாதிகளின் கொடுமைக்கு ஆளான ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவள். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் என் நெற்றியின் இடது பக்கத்தில் பாய்ந்த குண்டு, அமைதி, கல்வி இவற்றைப் பரப்புவதில் எனக்கு உண்டான நெஞ்சுறுதியைக் கொஞ்சமும் குறைக்கவில்லை. இந்த வெறித்தனமான தாக்குதல் என்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக எனது பயம், பலவீனம், நம்பிக்கையின்மை எல்லாவற்றையும் என்னிடமிருந்து முற்றிலுமாக அழித்தவிட்டது.
நான் தாலிபான்களுக்கு எதிராகப் பேச இங்கு வரவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியறிவு அத்தியாவசியமானது. அது அவர்களின் உரிமை. அதைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன். தீவிரவாதக் குழுக்களால் துப்பாக்கி மூலம் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது.
தீவிரவாதிகளுக்குப் புத்தகங்களையும், எழுதுகோல்களையும் கண்டு அச்சம். கல்வியின் மகத்தான சக்தியைக் கண்டு பயப்படுகிறார்கள். என்னைத் தாக்கிய தாலிபான்களை நான் வெறுக்கவில்லை. என்னைத் தாக்கியவர் என் முன் நின்றபோது என்னுடைய கைகளில் துப்பாக்கி இருந்தால் கூட நான் அவரைச் சுட்டிருக்க மாட்டேன்.

என்னுடைய முக்கிய கவனம் இப்போது பள்ளிக்குப் செல்லாத 57 மில்லியன் குழந்தைகளின் மீதுதான். தீவிரவாதிகளான தாலிபான்களின் மகன்களுக்கும், மகள்களுக்கும் மற்றும் எல்லா பயங்கரவாதிகளுக்கும் கல்வி வேண்டும். இதுதான் மகாத்மா காந்தி, பாட்~hகான், அன்னை தெரசா இவர்களிடமிருந்து நான் கற்ற அஹிம்சை வழி.
புத்தகங்களையும், எழுதுகோல்களையும் நாம் கையில் எடுப்போம். இவைதான் நம் போராட்டத்துக்கான ஆயுதங்கள். வாளைவிட எழுதுகோல் வலிமையானது. இந்த தான் சொல்ல வந்ததை தெளிவாகவும் தீர்க்கமாகவும் வெளிப்படுத்தியது மலாலாவின் 18 நிமிட உரை. எழுச்சியூட்டும் வகையில் அமைந்திருந்த அந்த உரை எழுத்தறிவின்மை, ஏழைமை, தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்று சேரவேண்டும் என்று அறைகூவல் விடுப்பதாகவே அமைந்திருந்தது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் உலகக் கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன், கல்வி கற்க ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உரிமை உள்ளது.இதை வலியுறுத்தும் வகையில், பாகிஸ்தான் சிறுமி உலக சின்னமாக திகழ்கிறாள். மலாலாவை போல் உலகளவில் பள்ளி செல்லும் உரிமை மறுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக, நவம்பர் 10 ஆம் தேதி மலாலா தினம் கொண்டாடப்படும். இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஐ.நா.வின் இணையதளத்தில் பான் கி மூன் வெளியிட்டுள்ள காணொலிக் காட்சியில், கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. கல்வி ஒன்றுதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது. உலகளவில் 6.10 கோடி குழந்தைகள் பள்ளி செல்வதில்லை. அவர்களின் உரிமைகளுக்காகப் பேசி வருகிறார் மலாலா. அவரை பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச் சின்னம். என்று கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததற்குப் பிறகு, மலாலாவுக்குக் கிடைக்காத கௌரவங்களே இல்லை அன்னை தெரசா விருதில் தொடங்கி, டைம் பத்திரிகையின் புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் கிடைத்த இடம் உட்பட அமைதிக்கான நோபல் பரிந்துரை வரை நீண்டுகொண்டே போகின்றன. மலாலாவின் அசாத்தியமான துணிச்சலும் பெண் கல்வி, சமாதானம் ஆகியவற்றில் அவரின் ஈடுபாடும் உண்மையிலேயே உத்வேகமளிக்கக் கூடியவை.
மலாலா பிறந்த ஜூலை 16 ஆம் தேதி இனி மலாலா தினம் என்று அறிவிக்கப்பட்டபோது அங்கு குழுயிருந்தவர்கள் பலத்த ஆராவாரம் செய்தவர்களைப்பார்த்து, இந்த நாள் என்னுடைய நாள் இல்லை. இது தங்கள் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்துப் பெண்களின், சிறுவர் சிறுமிகளின் நாள் என்றார் மலாலா.

மலாலா தினத்தன்று கர்நாடகாவைச் சேர்ந்த அ~;வினி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரசியா சுல்தான் என்ற பார்;வை இல்லாத இருவருக்கும், உதட்டுப் பிளவு காரணமாக சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சிறுமி பிங்கி சோன்கர் ஆகிய இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு இளம் தைரியசாலி விருது வழங்கப்பட்டன.
மலாலாவின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் அனுப்பினால் மாதம் இரண்டு டாலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ஒரு திட்டம் பாகிஸ்தான் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தை முழுமையாக மாற்றுவதற்கு ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு எழுதுகோல் இவை மட்டும் போதும். கல்வி ஒன்றுதான் தீர்வு. எனவே குழந்தைகளின் கல்விக்கு முதலிடம் கொடுத்து இயங்குவோம் என்கிறபடி மலாலா தம் அடுத்தடுத்த அடியை எடுத்து முன்வைக்கிறார் நம் கண்ணெதிரே ஒரு போதிமரமாய்!
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.