பட்டா மாற்றி தர ரூ 25,000 லஞ்சம் வாங்கிய மண்டல வட்டாட்சியர் அதிரடியாக கைது !
ரூ 25,000 லஞ்சம் வாங்கிய மண்டல வட்டாட்சியர் அதிரடியாக கைது !
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் முசிறியில் வசித்து வருபவர். கோபால் மகன் கிருஷ்ணன் (வயது 40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும் ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா பெறப்படவில்லை.
அதனால் கிருஷ்ணன் தனது தாயார் பெயரில் மேற்படி இரண்டு இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி 2023 மாதத்தில் மனு செய்துள்ளார். தனது பட்டா சம்பந்தமாக கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறாதால் கிருஷ்ணன் முசிறி கிழக்கு பகுதி விஏஓ அலுவலகம் சென்று விஏஓ விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு விஏஓ விஜய சேகர் உங்க இடத்தை மண்டல வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார். பின் நவம்பர் மாதத்தில் விஏஓ ராஜசேகர் முசிறி மண்டல வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் இடத்தை பார்வையிட்டு விட்டு தாலுக்கா அலுவலகம் வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.
அதன் பேரில் கிருஷ்ணன் நேற்று 26 12 2023 மாலை 6 மணி அளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலை சந்தித்து தனது பட்டா குறித்து கேட்டுள்ளார். அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல் கிருஷ்ணனிடம் உங்களுக்கு இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்று தருவது என்றால் ஒரு பட்டாவுக்கு 15,000 வீதம் இரண்டு பட்டாவுக்கு முப்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.
கிருஷ்ணன் தொகையை குறைத்து கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில் மண்டல வட்டாட்சியர் 5000 குறைத்துக் கொண்டு 25000 கொடுத்தால்தான் பட்டா பெற்று தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து,
இன்று 27.12. 2023 மாலை 5:30 மணி அளவில் கிருஷ்ணனிடம் இருந்து மண்டல வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப்பணம் 25000 ஐ கிருஷ்ணனிடமிருந்து பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சேவியர் ராணி திரு. பிரசன்ன வெங்கடேஷ் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மண்டல வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.