மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

0

”உங்கள் வீடு தேடி வரும் அரசு!”, ”உங்களுடன் முதல்வர்”, “உங்களுடன் ஸ்டாலின்” என்பதாக தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ”ஓரணியில் தமிழ்நாடு” என்ற ஒற்றை முழக்கத்துடன், கழக உடன்பிறப்புக்கள் மக்களை அணிதிரட்டி வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. “மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை சந்தித்து வருகிறார். கழக ஆட்சியின் மீது விருப்பம் கொண்ட பொதுமக்களிடம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

சிறியதும் பெரியதுமான 63 ஊராட்சிகளை உள்ளடக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி. குக்கிராமங்கள் ஒன்றையும் தவறவிடாது, நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி வீதம் ஜூலை-14 முதல் செப்டம்பர்-30 வரையில் தொடர்ச்சியாக 63 நாட்களுக்கான பயணத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார். நாள்தோறும் 5 மணிக்கு தொடங்கும் பயணம் இரவு வரை நீடிக்கிறது.

இது நம்ம வீட்டுப் பிள்ளைஒவ்வொரு கிராமங்களும் ஒலி – ஒளி அமைப்புகளோடு விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியும் எம்.எல்.ஏ.வின் களப்பயணத்திற்கு, மக்கள் பேராதாரவை வழங்கி ஆரத்தி எடுத்து மண்ணின் மைந்தனை வரவேற்கிறார்கள். சிறுவர்கள், பெண்கள் எல்லோரும் வயது வித்தியாசமின்றி எம்.எல்.ஏ.வோடு குழு புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி போடுகிறார்கள். எம்.எல்.ஏ. கதிரவனும் சளைக்காமல், முகம் சுழிக்காமல் ஆர்வப்படும் மக்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அந்தந்த கிராம ஊராட்சியிலும் எம்.எல்.ஏ.வாக என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறேன் என்பதாக சுருக்கமாக எடுத்துரைக்கிறார். மக்களும் தங்களது குறைகளை சொல்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறார்கள். பள்ளிக்கூட சிறுவர்கள் தொடங்கி, இளைஞர்கள், சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், தோழமை கட்சி தொண்டர்கள் உள்ளிட்டு பலரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை, எம்.எல்.ஏ. கதிரவன் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

இது நம்ம வீட்டுப் பிள்ளைநியாயமான கோரிக்கைகளை அப்போதே, அங்கிருந்தபடியே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பிரச்சினையை உடன் சரிசெய்ய வலியுறுத்துகிறார். சில கோரிக்கைகளை தனது உதவியாளரிடம் சொல்லி குறிப்பெடுத்துக் கொள்கிறார். பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம், வீட்டு மனை பட்டா இல்லை என்பதுதான் பெரும்பாலும்  பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கையாக இருக்கிறது. ” நத்தம் புறம்போக்காக இருந்தால் அவசியம் பட்டா வழங்க ஏற்பாடு செய்கிறேன். அதுவே, நீர்ப்பிடிப்பு பகுதியாகவோ, மந்தை புறம்போக்கு, பாதை புறம்போக்கு என்பதாக இருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாது” என்பதையும் அங்கேயே தெரிவித்தும் விடுகிறார். ”சரி ஆகட்டும்” என்று மக்களை சமாளிப்பதற்காக தலையாட்டிவிட்டு பின்னர் கண்டுகொள்ளாமல் செல்லும் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு மத்தியில், இந்த தம்பி பரவாயில்லை” என்பதாக பெண்கள் பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது.

”தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக எப்படி ஒவ்வொரு கிராமமாக மக்களின் ஆதரவைத் தேடி சென்றாரோ, அதுபோலவே தற்போது மக்களின் குறைகளை கேட்டறியவும் செல்கிறார். தேர்தல் சமயத்திலேயே ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களுக்கு பொது விருந்து நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்தி வருகிறார்.” என்கிறார், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் லோகேஷ்.

ஒன்றிய செயலாளர் என்ற அந்தஸ்து வந்துவிட்டாலே, கம்பீரமாக கொடி பறக்கும் காரில் வெள்ளையும் சொள்ளையுமாக சட்டை மடிப்பு கலையாமல் அரசியல் செய்யும் சில அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மக்களோடு மக்களாக உடனிருந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய பாடுபட வேண்டுமென்று கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை, தனது மண்ணச்சநல்லூர் தொகுதியில் முழுவீச்சில் செயல்படுத்திக் காட்டி அசத்தி வருகிறார் எம்.எல்.ஏ. கதிரவன்.

 

—  இரா.சந்திரமோகன்.

 

Leave A Reply

Your email address will not be published.